வெப்ப அதிகரிப்பிற்கும், மழைப் பொழிவிற்கும் காரணம் சின்னப் பையனா? சின்னப் பெண்ணா?

பருவநிலை மாறுபாடுகளைக் பற்றிய கணிப்பு என்பது கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டு காலத்தில் பதிவான வெப்பம், மழை, குளிர், புயல் போன்ற இயற்கை நிகழ்வுகளின் தரவுகளை அலசி ஆராய்ந்து தீர்வுகளை சொல்லும் அறிவியல் முறையாகும். தீக்கதிர் அறிவியல் கதிரில் பேராசிரியர் ராஜூ எழுதிய கட்டுரை ஒன்று வெளிவந்திருந்தது. அதைப் படித்தபிறகு தற்போதைய பருவநிலை மாறுபாட்டு நிகழ்வுகள் குறித்த கணிப்பின் உண்மை வெளிப்படுகிறது.

உலகளவில் 1850ஆம் ஆண்டிலிருந்து பதியப்பட்ட வெப்பத்தை ஒப்பிட்டு, சென்ற ஆண்டு(2023) அதிக வெப்பமான ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆண்டின் சராசரி வெப்பம் 18ஆம் நூற்றாண்டு வெப்பத்தைவிட 1.4டிகிரி செல்சியசும் 19ஆம் நூற்றாண்டைவிட 1.18 டிகிரி அதிகமாகவும் இருந்ததாம். இது ஒரு ஆண்டில் மட்டும் காணப்பட்டதல்ல. 2014-2023 ஆண்டுகளே அதிக வெப்பமான 10 ஆண்டுகளாகும். இந்த அதிக வெப்பமானது *‘எல் நினோ’(El Niño)* எனப்படும் நிகழ்வினால் இன்னும் அதிகமாகியது. ‘சின்னப் பையன்’ என்று பொருள்படும் இந்நிகழ்வு கடல் வெப்பம், வளிமண்டல அழுத்தம் இரண்டின் கூட்டுக் கலவையாகும்.

இதற்கு எதிர்மறையாக *‘லா நினா’ (La Niña)* எனப்படும் (சின்னப் பெண்) குளிர் நிகழ்வும் நடைபெறும்.  புவிவெப்பம் அதிகமாவதற்கு இந்த நிகழ்வுகள் காரணமல்ல; ஆனால் இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த ஆண்டு நடுப்பகுதி வரை எல் நினோ தொடர்ந்து நீடித்ததனால், இந்திய தீபகற்ப பகுதியில் பருவ மழை பலவீனமாகவும், வெப்பம் அதிகரித்தும் காணப்பட்டது. ஜூன் மாத மழையளவு நீண்ட கால சராசரியை விட 20 விழுக்காடு குறைவாக இருந்தது. இதுவும் அதி வெப்பத்திற்கு ஒரு காரணம். 

இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் எல் நினோ, ஜூன் மாதத்தில் லா நினாவாக மாறும் என்று பருவநிலை அறிவியலாளர்கள் கணித்திருந்தனர். அந்தக் கணிப்பு சரியாகவே அமைந்துள்ளது. தற்போதைய மழைப் பொழிவிற்கும், குளிர்ந்த வானிலைக்கும் லா நினா எனப்படும் சின்னப்பெண்தான் காரணமாக இருக்கக்கூடும் என்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

Related Posts with Thumbnails

wibiya widget