லேப்டாப், அல்ட்ராபுக், நெட்புக், டேப்ளட் என்ன வித்தியாசம்


மாநில அரசு லேப்டாப் (மடிக்கணினி) வழங்குவதாக அறிவிக்க, மத்திய அரசோ டேப்ளட் கணினி வழங்குவதாக அறிவிக்கிறது.  கணினி நுட்பம் மனிதனோடு கலந்து இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்ட  சூழலில் பல பெயர்களில் வரும் தொழில் நுட்பங்கள் அனைவரையும் சற்றுக் குழப்பமடைய வைப்பது உண்டு. அப்படிப்பட்ட குழப்பம் லேப்டாப், டேப்ளட், அல்ட்ரா புக், நெட்புக் என்று வரும் கணினிகளைப் பார்க்கையிலும், பெயர்களைக் கேட்கும் போதும் ஒன்றுக்கொன்று என்ன வேறுபாடு என்ற சந்தேகம் ஏற்படும். இவற்றின் பொதுப் பயன்பாடு ஒன்று போல இருப்பினும், பயனரின் தேவை கருதியே இவை உருவாக்கப்படுகின்றன.


மடிக்கணினி (Laptop)
நமக்கு பரிச்சயமான கணினி இதுதான். மடித்து எடுத்துச் செல்லும் வசதியுடன் 2 கிலோ முதல் 3.5 கிலோ அளவிலான எடையும், திரை அளவு 14 அல்லது 15 அங்குல அளவும் இருக்கும். 12 அங்குல அளவிலும் கிடைக்கின்றன. இதன் செயல்பாடு மற்றும் உபயோகம் மேசைக்கணினிக்கு இணையானதாகும்.

நெட்புக் (Net Book)
எடை குறைவாக, 10 அங்குலத் திரை அளவிலும் இருக்கும். சிறிய வகைக் கணினிகளைப் பொறுத்த வரை இணையப் பயன்பாடே பிரதானமாகக் கொள்ளப்படுகிறது.  அத்துடன் வேர்ட், எக்செல், பவர்பாயிண்ட் மென்பொருள்களில் அலுவலகப் பணிகளையும், பிடிஎப் உள்ளிட்ட மின்புத்தகக் கோப்புகளைப் படிக்கவுமே அதிகமாகப் பயன்படுகின்றன. கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் கணினிகளும் இந்த வகையில் வரும். உதாரணமாக குரோம் புக். பெரிய எதிர்பார்ப்போடு வந்து தோல்வியடைந்தது.

அல்ட்ரா புக்  (Ultra Book)
கணினிகளின் அளவைக் குறைப்பது என்பது தொடர்ந்து தொழில்நுட்ப ரீதியாக ஆராயப்பட்டு வரும் ஒரு விஷயமாகும். எடுத்துச் செல்ல எளிதாக இருக்கவேண்டும் அதே நேரத்தில் செயல்பாடும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது முக்கியம். அத்தகைய எண்ணத்தில் உருவானவையே அல்ட்ரா புக் கணினிகள். ஒரு அங்குலத்திற்கும் குறைவான தடிமனும், அதிக நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரியும் இக்கணினிகளின் சிறப்பம்சமாகும். ஆனால் இவற்றின் விலை மிக அதிகமாகும்.

இந்த வகைக் கணினிகள் ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள மேக்புக் ஏர் கணினிக்கு போட்டியாக இருக்கும் என்று சந்தை வல்லுனர்கள் குறிப்பி
டுகின்றனர். இக்கணினிகளை தயாரிப்பதில் இன்டெல் நிறுவனம் பெரும் பங்காற்ற உள்ளது. அசூஸ் மற்றும் ஏசர் நிறுவனங்கள் இக்கணினிகளைத் தயாரித்து சந்தைப்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றன. இதில் டிவிடி டிரைவ் கிடையாது. ஆனால் 4ஜி மற்றும் ஒய்ஃபி இணையத் தொழில்நுட்ப வசதிகள் இருக்கும்.

டேப்ளட்  (Tablet PC)
7 அங்குல அளவில் கைக்கு அடக்கமாக, கைபேசியைப் போல வைத்துக் கொள்ள எளிமையாக இருப்பவைதான் டேப்ளட் கணினிகள். இதில் தொடுதிரை வசதியும், இணையத்துடன் தொடர்பு கொள்ள ஜிபிஆர்எஸ், 3ஜி,  ஒய்ஃபி உள்ளிட்ட வசதிகளும் இருக்கும்.

இது இணையத்தில் உலாவ, ஒளிப்படங்களைப் பார்க்க, வீடியோ காட்சிகளைப் பார்க்க, மின்புத்தகங்களைப் படிக்க, கணினி விளையாட்டுக்களை விளையாட உதவும்.
2500 ரூபாய் விலையில் தொடங்கும் ஆகாஷ், அதற்குப் போட்டியாக வந்திருக்கும் பேன்டெல் (ரூ.3250), ஐரா (ரூ.4000), இன்டெக்ஸ் டேப்ளட்.. என்று இன்னும் வரவிருக்கும் பல டேப்ளட்களின் வருகையும் இவற்றை வாங்க லட்சக்கணக்கானோர் ஆன்லைனில் பதிவு செய்து காத்திருப்பதையும் பார்க்கும்போது செல்போன்களுக்கு அடுத்து மக்களிடையே வேகமாக பிரபலமாகவிருப்பது இவையாகத்தான் இ‌ருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.
. Related Posts with Thumbnails

1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமான பதிவு ! நன்றி நண்பரே !

wibiya widget