இணையத் தேடல்தான் கூகுள் தொடங்கிய முதல் சேவை. கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கும் இணையப் பக்கங்களில் உள்ள செய்திகளில், நாம் தேடும் தகவல் எதிலெல்லாம் உள்ளது என்பதைத் கண்டுபிடித்துத் தருவதுதான் இதன் முக்கியப் பணி.
அதில் தேடுபவர் இதைத்தான் தேடுகிறார் என்பதை நுணுக்கமாக அறிந்து ஒரு நொடிக்குள்ளாக அளிப்பதுதான் கூகுளின் வெற்றிக்குக் காரணமாக இருந்து வருகிறது.
தேடலுடன் நிறுத்தாமல் பல புதிய புதிய வசதிகளை அவ்வப்போது தந்து பயனரை வேறு தேடல் தளங்களுக்குச் சென்று விடாமலும் பார்த்துக் கொள்ளும் வேலையையும் செய்து கொண்டேயிருக்கிறது. அந்த வகையில்தான் தற்போது கூகுள் தேடலில் நாம் தேடும் சொல்லுக்கு தொடர்புடைய முக்கியமான செய்தியை விக்கிபீடியா செய்தி போல் விரிவாகத் தரும் புதிய வசதியை தரவுள்ளது.
இவ்வசதி மூலம் நாம் தேடும் ஒரு வார்த்தை அதாவது தாஜ்மஹால் என்ற வார்த்தையை தாஜ் அல்லது மஹால் என்று பிரித்தோ சேர்த்தோ தனித் தனியாகவே எப்படிக் கொடுத்து தேடச் சொன்னாலும் அதற்கான தேடல் முடிவுகளுடன், கூடுதலாக தாஜ்மகால் குறித்த தகவல்கள், இருப்பிட வரை
படம், என்று விக்கிபீடியா தகவல் தளம் போல செய்திகளை வலது பக்கமாக நீல நிற கட்டத்திற்குள் காட்டும். அத்துடன் தாஜ்மகால் என்ற பெயரில் வேறு முக்கிய தகவல்கள் இருந்தால் அவை அதற்குக் கீழாக மற்ற முடிவுகள் என்று தனியாகக் காட்டப்படும்.
இவ்வசதிக்கு கூகுள் அறிவு வரைபடம் (Knowledge Graph) என்று பெயர் சூட்டியுள்ளது. இதனை இணைய வல்லுனர்கள் கூகுள் பீடியா (Googlepedia) என்று அடைமொழியிட்டுக் குறிப்பிடுகின்றனர்.
தற்போது இச்சேவையை பரிசோதனை முறையில் அமெரிக்காவில் மட்டும் வழங்கி வருகிறது. விரைவில் உலகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.
நான் இந்தக் கட்டுரையை இன்று வெளியிடும் போது கூகுள் இந்தியாவிலும் இச்சேவை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.
.
0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment