சிறு சிறு ஃபைல்களை வகை பிரித்து தனித்தனி ஃபோல்டர்களில் பிரித்து வைப்பது தகவல் காப்பக மேலாண்மையில் முக்கியமாகும்.
ஃபைல்களை பொதுவில் வைக்காமல் அதனை சுருக்கியோ (Compression) அல்லது எளிதில் பிறர் அறிந்த கொள்ள முடியாத வகையில் சங்கேத குறிமுறைக்கு (Encrypt) மாற்றிப் பாதுகாப்பதும் தற்காலக் கணினி நுட்பத்தில் முக்கிய நடைமுறையாகும்.
பல கோப்புகளை ஒன்றாக சேர்த்து கட்டி ஒரே கோப்பாக மாற்றுதல் (Archive), பெரிய அளவு கோப்பை சுருக்கி சிறிய அளவாக மாற்றுவது, இவ்வாறு மாற்றப்படும் கோப்புகளை பாஸ்வேர்டு கொடுத்து பாதுகாப்பது எனப் பல வேலைகளையும் செய்து கொள்ள மென்பொருள்கள் உள்ளன. உதாரணமாக நாம் பயன்படுத்தும் வின்ஜிப் மற்றும் வின்ரேர் மென்பொருள்களைக் குறிப்பிடலாம்.
மேற்கண்ட மென்பொருள்களைப் போன்ற அல்லது மேம்பட்ட எண்ணற்ற மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மென்பொருளிலும் ஒவ்வொரு விதமான வசதி மற்றும் சுருக்கும் வழிமுறைகளில் மாற்றம் இருக்கும். ஒரு சில மென்பொருள் கோப்புகளை சுருக்குவதுடன் ரகசிய குறிமுறைக்கு மாற்றிக் கொள்ளும் வசதியையும் சேர்த்தே தருகின்றன.
பல்வேறு சுருக்க வழிமுறைகள்
லெம்பல் சிவ் மார்கோவ் (LZMA/LSMA2) எனப்படும் சங்கிலித் தொடர் போன்ற அமைப்பில் தரவுகளை இழப்பின்றி சுருக்கித் தரும் ஒரு முறையாகும். இது தரவுகளை சுருக்குதல் மற்றும் விரித்தலை ஆதரிக்கிறது .
பர்ரேஸ் வீலர் வழிமுறை (BWT) இம்முறையில் ஒரே வகை எழுத்துக்கள், குறியீடுகள் மீண்டும் வரும் இடங்களில் நீக்கி கோப்பின் அளவை சுருக்கும் ஒரு வழிமுறையாகும். மீண்டும் அக்கோப்பு டிகிரிப்ட் செய்யப்படும்போது நீக்கப்பட்டவை சேர்க்கப்பட்டு கோப்பு முழுமையாகக் காட்டப்படும்.
பிபிஎம் (Prediction by partial matching -PPM) . முந்தைய குறியீடுகளை கணித்து புள்ளி விவர அடிப்படையில் தரவு களை சுருக்கும் ஒரு வழிமுறையாகும்.
டிஃபிலேட் (Deflate) தரவு சுருக்க வழிமுறைகளில் மேம்பட்டதாகவும், சிறந்ததாகவும் உள்ள ஒரு வழிமுறை இதுவாகும். இதில் மேற்கண்ட LZMA மற்றும் PPM ஆகிய வழிமுறைகளும் இணைந்து செயல்படுத்தப்படுகின்றன. இது ஓப்பன் சோர்ஸ் வகை தரவு சுருக்க முறையாகும். எனவே, லினக்ஸ் இயங்குதளப் பயன்பாட்டில் இம்முறை முன்னிலை வகிக்கிறது.
ரகசிய குறியாக்க முறைகள்
தரப்படுத்தப்பட்ட தரவு குறியாக்க நெறிமுறை (Data Encryption Standard - DES) 54 முதல் 64 பிட் அளவுகளுக்குள்ளாக டேட்டாவை குறுக்கு நெடுக்காக மாற்றி குறியாக்கம் செய்வதாகும்.
மேம்படுத்தப்பட்ட குறியாக்கநெறிமுறை (Advanced Encryption Standard). இம்முறை அமெரிக்க நிறுவனங்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதில் 128, 192 மற்றும் 256பிட் அளவுகளில் டேட்டாவை மாற்றி குறியாக்கம் செய்யப்படுகிறது.
பிளப்ஃபிஸ் (Blowfish) என்ற முறையில் 64 பிட் அளவில் தரவுகளை மாற்றப்படுகின்றன. மேற்கண்ட மூன்று முறைகள்தான் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள ரகசிய குறியீட்டு முறைகளாகும்.
கோப்பு சுருக்க மென்பொருள்கள்
வின்ஜிப் (WinZip): டிஃபிலேட் முறையில் கோப்புகளை சுருக்கும் இம்மென்பொருள், தரவுகளை இரகசியக் குறிமுறைக்கு மாற்ற AES மற்றும் DES முறைகளை பயன்படுத்துகிறது.
ஜீஜிப் (GZip): இம்மென்பொருள் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது. டிஃபிலேட் முறையில் கோப்புகளை சுருக்குகிறது. இதில் 7ஜிப், வின்ஜிப், வின்ரேர் உள்ளிட்ட பிற கோப்பு சுருக்கங்களை விரிக்கும் வசதியும் உண்டு.
7ஜிப் (7Zip): ஓப்பன் சோர்ஸ் முறையில் அமைந்த இலவச மென்பொருள் இது. தற்போது பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான கோப்பு சுருக்க வழிமுறை
களையும், இரகசிய குறியீட்டு முறைகளையும் ஆதரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாகும். தற்போது பிரபலமாக உள்ள விண்டோஸ் கணினிகளுக்கான கோப்பு சுருக்க மென்பொருள் இதுவே எனலாம். ஜீஜிப் போலவே பிற சுருக்க மென்பொருள்களால் உருவாக்கப்பட்ட கோப்பு
களை விரிக்கும் வசதி இதிலும் உண்டு.
வின்ரேர் (Win RAR): 7ஜிப் மென்பொருளைப் போன்றே பல சுருக்க வழிமுறைகளை ஆதரிக்கிறது. இதில் ரகசியக் குறியீட்டு முறையாக AES முறை பயன்படுத்தப்படுகிறது. இது விண்டோஸ் கணினிகளுக்கான தனியுரிமை மென்பொருளாகும். இதனை விலை கொடுத்துப் பெற்றே பயன்படுத்த முடியும்.
விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் கோப்பு சுருக்க வடிவம் ஜிப் ஆகும். லினக்ஸ் இயங்குதளத்தைப் பொறுத்தவரை ஜீஜிப் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதிக அளவு தகவல்களை சுருக்கவும், ரகசியக் குறிமுறைக்கு மாற்றிப் பாதுகாப்பாக வைப்பதற்கும் உதவக்கூடியது வின்ரேர் மற்றும் 7ஜிப் ஆகியவைதான். இதில் 7ஜிப் இலவசமானதும், மிகச்சிறந்த பாதுகாப்பைத் தரக்கூடியதாகவும் உள்ளது.
1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
மிகவும் விளக்கமான குறிப்பு... மிக்க நன்றி...
Post a Comment