கைபேசிகள் தோற்றுவிக்கும் புதிய உடல் நலக் குறைபாடுகள்


இன்று மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனமாக மாறியிருப்பது கைபேசிகள். சாதாரண கைபேசி தொடங்கி, ஸ்மார்ட்போன், டேப்ளட் எனப்படும் விலையதிகக் கணினிப் பயன்பாட்டுச் சாதனங்கள் வரை அனைத்தும் சிறுவர், பெரியவர் என்ற வயது வித்தியாசம் இல்லாமல்  அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றன.
அறிவியல் தொழில்நுட்பம் வழங்கிய அற்புதக் கண்டுபிடிப்பு இக்கைபேசிகள். ஆனால், அதனை அதிகம் உபயோகிப்பதால் ஏற்படும் எண்ணற்ற பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
முன்பு வந்த கைபேசிகளை விட இன்றுள்ள கைபேசிகள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவையாகவே உள்ளன. ஆனாலும், அதன் தீங்கு குறைந்திருக்கிறதே ஒழிய முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டதாக கூறமுடியாது.
கைபேசியில் தொடர்ந்து 6 நிமிடத்திற்கு மேல் பேசினால் கேன்சர் வரும் வாய்ப்புகள் உண்டென்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. எனவே, தொடர்ந்து பேசுபவர்கள் இயர்போன்களைப் பயன்படுத்திப் பேசவேண்டும் என்றும், அப்போதுகூட கைபேசி உடலுக்கு அருகாமையில் இல்லாமல் தள்ளியிருக்கும்படியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, கைபேசி கோபுரங்கள் மூலமாக பரவும் கதிர்வீச்சின் அளவை குறைக்கவேண்டும் என்றும், அருகருகே கோபுரங்கள் இல்லாமல் குறிப்பிட்ட இடைவெளியில்தான் அமைக்க வேண்டும் எனவும், மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. அது குறித்த ஆராய்ச்சி முடிவுகள் தங்களிடம் இல்லையென்றும் அது கூறிவிட்டது.
இப்படிக் கதிர்வீச்சு குறித்து எந்த முடிவும் சரிவர எடுக்க முடியாத நிலையில் புதியதாக கைபேசிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் கண்பார்வை குறை
பாடு ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் கண் பரிசோத
னைக்கு வந்த ஜம்முவைச் சேர்ந்த 11 வயது சிறுவனைப் பரிசோதித்தபோது அவனுக்கு குறைந்த இடைவெளியில்  பாடப் புத்தகங்களைப் படிக்க முடிந்தது. ஆனால், தொலைவில் உள்ள பொருள்களை இனங்காண்பதில் குழப்பமும்,  கரும்பலகையில் எழுதியதைப் படிக்க முடியாத நிலையும் இருந்தது.
இத்தகைய நிலை ஏன் ஏற்படுகிறது என்று விசாரித்தபோது, அச்சிறுவன் கைபேசியில் தொடர்ந்து பல மணிநேரம் விளையாடிக் கொண்டிருப்பான் என்ற தகவலை அவனது பெற்றோர் தெரிவித்தனர்.
அச்சிறுவனை ஆராய்ந்த அம்மருத்துவமனையின் அனுபவமிக்க டாக்டர் ஹர்பன்ஸ் லால் கூறும்போது, சிறுவனின் பார்வை நிலை சரியாக இருக்கிறது. ஆனால், 7 வயது முதலே கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருவதாலும், தொடர்ந்து இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பதும் கண் தசைகளை தளர்ச்சியடையச் செய்து விட்டது என்று கூறினார்.
இதுபோன்ற பாதிப்புகள் இன்று சிறு குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் அதிகமாக தோன்றி வருவதாகவும், இதற்கு காரணம் அதிகமாக கைபேசி விளையாட்டுக்கள் விளையாடுவது, குறுஞ்செய்திகளை அனுப்புவது, படிப்பது, இணையப் பக்கங்களைப் பார்ப்பது என்று எண்ணற்ற வேலைகளை கை பேசியின் ஒளி உமிழும் சிறு திரைகளில் பார்ப்பதால்தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், இத்தகு பாதிப்பு ஏற்படாமல் இருக்க கைபேசிகள், ஸ்மார்ட் போன்கள், டேப்ளட், கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது சற்று தள்ளி வைத்துப் பயன்படுத்தவேண்டும் என்றும், தொடர்ந்து திரையின் மீதே கவனம் செலுத்தாமல்  20 நிமிடங்களுக்கு ஒரு முறை பார்வையை நகர்த்தி 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை 20 விநாடி நேரமாவது பார்ப்பதை பயிற்சியாகக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அறிவியல் தந்த வரமாக கைபேசி இருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.
. Related Posts with Thumbnails

wibiya widget