Cellphone லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Cellphone லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஸ்மார்ட்டாக இருக்க வேண்டியது நீங்களா? உங்கள் ஃபோனா?




இன்றைய நிலையில் கையடக்க கணினியாக, குறிப்பெடுக்க உதவும் குறிப்பேடாக, தனிப்பட்ட விபரங்களைப் பதிந்து வைக்கும் டைரியாக, அன்றாட வேலைகளை திட்டமிட உதவும் நாட்குறிப்பாக, பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் கணக்காளனாக, உறவு, நட்பு, வணிகத் தொடர்புகளுக்கு பாலமாக எனப் பல நிலைகளில் நமக்கு பேருதவியாக மாறி இருப்பது ஸ்மார்ட் போன்கள்.ஆசைக்கு ஆண்ட்ராய்ட் போன் வாங்கி உரையாடவும், பாடல் கேட்கவும், கேம்ஸ் விளையாடவும், வீடியோ பார்க்கவும் மட்டுமே பயன்படுத்தும் தொடக்க நிலை பயனாளர்கள் இக்கட்டுரையைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், அடுத்த கட்ட ஆண்ட்ராய்ட் பயன்பாட்டிற்குள் அதாவது, ஜிமெயில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற இணையம் சார்ந்த பயன்பாட்டிற்குள் நீங்கள் நுழையும்போது உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இங்கு கூறப்படும் தகவல் பாதுகாப்பு குறித்த யோசனைகள் பயனளிக்கக் கூடும்.

ஃபோன் பழுதாகும்போது..

ஏதேனும் காரணத்தால் உங்கள் ஃபோனில் கோளாறு ஏற்பட்டால் நன்கு அறிமுகமான அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மட்டுமே சர்வீஸ் செய்யவும். இம்மையங்களில் ஃபோனைக் கொடுக்கும்போது சிம்கார்டு மற்றும் மெமரி கார்டை நீங்கள் பத்திரமாக எடுத்துவைத்துக் கொண்டு பிறகு கொடுங்கள்.

சிம்கார்டு குளோனிங்

புதிதாக சிம்கார்டு குளோனிங் என்ற தொழில்நுட்பத்தை ஹேக்கர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். உங்கள் சிம்கார்டில் உள்ள தகவல்களை திருடி டூப்ளிகேட் சிம்கார்டு உருவாக்கி அதன் மூலம் கொள்ளையடிப்பதுதான் அவர்களது நோக்கம். இது எப்படி என்றால் உங்கள் வங்கிக் கணக்கு, கேஸ் புக்கிங், மின்னஞ்சல், வாட்ஸ்அப் எனப் பலவற்றிற்கும் ஒரு எண்ணையே பயன்படுத்துபவராக இருந்தால் எளிதாக டூப்ளிகேட் சிம் பயன்படுத்தி பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து கணக்கு விபரங்களையும் இந்தத் தொழில்நுட்பத் திருடர்களால் பெற்றுவிட இயலும்.

பாஸ்வேர்டு அறியும் வழிகள்

இது எப்படி சாத்தியம் என்றால், உங்கள் எண்ணில் இருந்து உங்களைப் போன்றே வங்கியில் பேசி தகவல்களை அறிவது, அத்துடன், எஸ்எம்எஸ் அல்லது போன் புக்கில் நீங்கள் மறக்காமல் இருப்பதற்காக பதிந்துவைத்திருக்கும் பாஸ்வேர்டு மற்றும் வங்கிப் பின் (PIN Number) எண்ணை அறியலாம்.அல்லது உங்கள் மின்னஞ்சல் மற்றும் வங்கிக் கணக்கிற்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பாக பாஸ்வேர்டு உடன் உங்கள் மொபைல் எண்ணும் வழங்கப்பட்டிருக்கும். வேறு கணினி அல்லது மொபைல் மூலமாக உங்கள் அக்கவுண்ட்டில் உள் நுழையும்போதோ, பாஸ்வேர்டு மறந்துவிட்டாலோ அல்லது மாற்றவேண்டும் என்றாலோ நம்முடைய பிரத்யேக மொபைல் எண்ணுக்குத்தான் குறுஞ்செய்தியாக தகவல் அனுப்பப்படும்.அப்போது வழங்கப்படும் தற்காலிக பாஸ்வேர்டு (One Time Password) டூப்ளிகேட் சிம்கார்டுக்கும் வரும் என்பதால் இதன் மூலமாகவும் வங்கிக் கணக்கு மற்றும் மின்னஞ்சல், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற கணக்குகளை அணுக முடியும். எனவே அறிமுகமில்லாதவரிடம் சிம்கார்டுடன் ஃபோனைப் பயன்படுத்தத்தராதீர்.

பேக்கப் அவசியம்

ஃபோன் செயல்படும் நிலையில் இருந்தால் சர்வீஸ் கொடுப்பதற்கு முன்பாக  ஃபோன்புக், எஸ்எம்எஸ் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் பேக்கப் செய்துவிட்டு, ஃபோனை ரீசெட் அல்லது ஃபார்மெட் செய்துவிட்டுக் கொடுக்கவும்.

பாஸ்வேர்டை மாற்றுங்கள்

உங்கள் ஃபோன் இயங்காத நிலையில் இருந்தால் சர்வீஸ் கொடுப்பதற்கு முன்பாக ஜிமெயில், ஃபேஸ்புக் மற்றும் பிற அக்கவுண்ட் பாஸ்வேர்டுகளை கணினி மூலமாக மாற்றியமைத்துவிட்டு கொடுங்கள்.

முன்னெச்சரிக்கை தேவை

மொபைல் கை தவறி கீழே விழுவது, எதிர்பாராதவிதமாக ஹேங் ஆவது ஆகியவை எவராலும் தவிர்க்க இயலாத பிரச்சனைகள். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் விதத்தில் நாம் தயாராக இருப்பதுதான் புத்திசாலித்தனம். இனி, முன்னெச்சரிக்கையாக எப்படி மொபைலைப் பயன்படுத்துவது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.நம் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் மொபைல் அல்லது டேப்ளட் மூலமாகத்தான் என்றால், நிச்சயம் வாரம் ஒருமுறையாவது அனைத்து தகவல்களையும் பேக்கப் செய்ய வேண்டும்.

மெமரி கார்டு பேக்கப்

போன் உடைந்தாலோ, தண்ணீரில் விழுந்தாலோ, பழுதானாலோ மெமரி கார்டு மற்றும் சிம் கார்டுகள் சேதமடைவது குறைவுதான். எனவே, உங்கள் மொபைலின் முதல் பேக்கப் இடமாக மெமரிகார்டை பயன்படுத்துங்கள். கேமரா, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மின்னஞ்சல், டாகுமெண்ட்கள் உள்ளிட்ட தனிப்பட்ட மற்றும் அலுவலகக் கோப்புகளை ஃபோன் மெமரியில் பதியாமல் மெமரி கார்டில் நேரடியாக பதியும்படியாக செட்டிங் அமைத்திடுங்கள். அப்ளிகேஷன்களை பதிவதற்கு மட்டும் ஃபோன் மெமரியை உபயோகித்துக் கொள்ளுங்கள்.அனைத்து தகவல்களும் மெமரி கார்டிற்கு மாற்றுவதற்கு தகுந்ததாக உங்கள் மெமரி கார்டில் இடவசதி இருக்கவேண்டும். எனவே, உங்கள் ஃபோன் கையாளும் உச்சபட்ச மெமரி கார்டு திறனிற்கு உட்பட்ட கொள்ளளவு கொண்டதாகவும், வேகமான டேட்டா பரிமாற்றத்திற்கு ஏற்ற கிளாஸ் 10 வகை கொண்ட மெமரி கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் ஃபோன் ஹேங் ஆகாமலும், அதிகமான கோப்புகளை எளிதாக கடத்தவும் உதவும்.இரண்டாவது இடமாக உங்கள் கணினி அல்லது மின்னஞ்சல் சேமிப்பகத்தைப் பயன்படுத்தவும். ஃபோன் தொலைந்து போக நேரிட்டால் இவைதான் நமக்கு உதவும். ஃபோன் தொலைந்தால் உடனடியாக சிம்கார்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அதனை பிளாக் செய்யவேண்டும். அத்துடன் முன்பு குறிப்பிட்டதுபோல பாஸ்வேர்டுகளையும் உடனடியாக மாற்றவேண்டும்.
http://epaper.theekkathir.org/epapers/1/1/2016/6/15/page_8.jpg
. Related Posts with Thumbnails

நேரத்தை விரையமாக்கும் தொழிற்நுட்ப சாதனங்கள்

புதிய தொழில்நுட்பங்கள் உருவாவது வேலையை எளிதாக்கவும், விரைவாக செயல்படவும்தான் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் இன்றைய டிஜிட்டல் சாதனங்கள் நமது கவனத்தை சிதறடித்து நேரத்தை விரையமாக்குவதாக பல நாடுகளிலும் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அயல் நாட்டு மக்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும் அதன் முடிவுகள் இந்தியாவிற்கும் பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது.

உடல் உறுப்பா கைபேசி?
கைபேசிகள் அத்தியாவசியத் தகவல் தொடர்பு கருவியாக இருந்தாலும், பணி புரியும் இடங்கள் மற்றும் வகுப்பறைகளில் கைபேசியின் உபயோகம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.பெரும்பாலான ஆசிரியர்கள் கல்வி நிலையங்களில் கைபேசிகளை அணைத்து விட்டு வகுப்பறைக்குள் வரும்படி ஆணை இடுகிறார்கள். வேறு சிலர் வகுப்பறைக்குள் எந்தவிதமான சாதனங்களையும் அனுமதிப்பதில்லை. பாடம் நடத்தும்போது எத்தொல்லையும் இல்லாவிடில் சாதனப் பயன்பாட்டை மிகவும் திறந்த மனதுடன் அனுமதிக்கும் சிற்சில ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சமூக ஊடகங்கள் கோட்பாடும் செயல்முறையும் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர், திரு. க்ளே ஷர்க்கி என்பவர் அண்மைக் காலத்தில் வகுப்பறைகளில் மடிக்கணினிகள் மற்றும் இதர சாதனங்களின் பயன்பாட்டை ஒட்டு மொத்தமாகத் தடைசெய்யும் முடிவை எடுத்திருக்கிறார். 

லேப்டாப், டேப்லட் மற்றும் கைப்பேசிகளை உபயோகிக்கும்போது மாணவர்களின் கவனம் சிதறலுக்குள்ளாகிறது என்றும் கவன சிதறலைக் குறைப்பது கடினமாக இருப்பதையும் அனுபவத்தில் கண்டார். கைபேசி போன்ற சாதனங்களை வகுப்புகளில் தடை செய்தபோது மாணவர்களின் கவனமும், கலந்துரையாடல் தரமும் உயர்ந்தது என்றும் குறிப்பிடுகிறார்.இந்த அனுபவத்தைப் பற்றி அவர், “யாரோ ஒருவர் புத்தம் புதியக் காற்றை வகுப்பறைக்குள்ளே நுழையவிட்டது போல இருந்தது” என்று கூறுகிறார். டிஜிட்டல் சாதனங்கள் நம்முடைய கவனத்தை திசை திருப்புவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை என்றும், ஆசிரியர்கள் எந்திரங்களுக்கு எதிராகப் போராடிட வேண்டும் என்றும் கூறுகிறார்.

கவனச் சிதறல்
தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாட்டை வகுப்பறைக்குள் ஓரளவு கட்டுப்படுத்திவிட முடியும் என்றாலும், மாணவர் விடுதிகள், படிக்கும் மேசை, உணவகங்கள், மாணவர்கள் குழுக்களாகப் பங்கேற்று கலந்துரையாடும் இடங்களில் நாம் என்ன செய்ய இயலும்?சிணுங்கும் கைபேசிகள், பளிச் பளிச்சென்று மின்னும் திரைகள், குறுஞ்செய்தியின் வருகையை அறிவிக்கும் சமிக்ஞைகள், ஃபேஸ்புக் கணக்கில் தோன்றும் புது வரவு செய்திகள், நேரடி ஒளிக் காட்சி அழைப்புகள் என இவற்றிலிருந்து நம்மை எப்படி ஒதுக்கி வைப்பது?

நம்மில் பெரும்பாலோர் முழுமையான பணி ஈடுபாட்டுடன்தான் கணினிக்கு முன்பாக அமர்கிறோம். வேலையை இன்று முடித்துவிடவேண்டும் என்று திட்டமிட்டுத் தொடங்குகிறோம்.
 கணினியில் இணைய பிரௌசரை தேவை கருதித் திறக்கிறோம். தகவலைத் தேடும் பொருட்டு நுழைந்து அடுத்தடுத்து பல திரைகளைத் திறக்கிறோம். கைகள் ஓய்வின்றி மௌசைக் கிளிக் செய்வதிலும், கீபோர்டைத் தட்டுவதையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், செய்ய வேண்டிய வேலை மட்டும் தொடங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருக்கும். நேரம் மட்டும் மணிக்கணக்கில் கரைந்து போயிருக்கும். 

இதில் அபாயகரமான அம்சம் என்னவென்றால் நமது கவனம் சிதறடிக்கப்படுகிறது என்பதை நாம் உணராமல் இருப்பதுதான்.பணியை விரைவாக முடிப்பதற்கு பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கிறோம், திட்டமிடுகிறோம்.ஆனால், கவனச்சிதறல் நமது மூளைக்குள்ளிருந்து வருகிறபோது, அதை கட்டுப்படுத்துவது மிக மிகக் கடினமாக இருக்கிறது.
இதனை உணர்வதற்குள்ளாக நமக்கு சில மணித்துளிகள் கடந்துவிடுகின்றன.

வேலை செய்து கொண்டிருக்கும்போது சிலர் தொலைக்காட்சி பார்ப்பதும், கைபேசி மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதையும் வாடிக்கையான நிகழ்வாக்கிவிட்டனர்.வகுப்பறைகளில் தரப்படும் குறிப்புகளைப் படிப்பதற்கும், பாடம் நடத்தும்போது கேட்பதற்கும், கட்டுரைகள் எழுதவும் முழுமையான கவனமும் அறிவுப்பூர்வமான ஈடுபாடும் அவசியம். கவன சிதறலுக்கு மின்னணு சாதனங்கள்தான் முழுமையான காரணம் என்றும் கூறிவிட இயலாது. நமக்கு விருப்பம் இல்லாத ஒன்றின் மீதோ அல்லது வேலையின் மீதோ கவனத்தை முழுமையாக செலுத்துவது கடினமானது என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.இயற்கையாகவே அலைபாயும் நிலை கொண்ட நமது மனத்தை இத்தகைய டிஜிட்டல் சாதனங்கள் தூண்டிவிட்டு அங்கும் இங்குமாக இழுத்துத் செல்கின்றன.
இதனை சரியாக உணர்ந்து கொண்டால் கவனம் சிதறுவதை தடுத்திட முடியும்.

உங்களிடம் நீங்களே சில கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள்: 

உடனடியாகக் கவனத்தை நிலைநிறுத்த செய்ய வேண்டியவை என்ன?

மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்றும், சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ் அப்டேட் என்ன என்றும் அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பது அவசியமா? 

வேலையில் ஈடுபட்டிருக்கும் போது வலைத்தளங்களில் கவனம் செலுத்துவதால் நமக்கு ஏற்படும் நன்மை என்ன?

இந்தக் கேள்விகளுக்கான விடைகள் உங்களுக்குச் சாதாரணமாகத்தான் இருக்கும்.

கவனச் சிதறல் மற்றும் நேரத்தை சரியாகப் பயன்படுத்த நீங்களாகவே சுயக்கட்டுப்பாட்டை உருவாக்கிக் கொள்ளவேண்டும். நீங்கள் மாணவராக இருந்தால் உங்களுடைய ஆசிரியர்கணினி, டேப்லட், கைபேசி ஆகியவற்றிற்கு தடைபோடாவிட்டாலும், நீங்களாகவே அந்தத் தடையை போட்டுக்கொள்ளுங்கள்.

பணிபுரிபவராக இருந்தால் கொடுக்கப்பட்ட பணியை முடிப்பதற்குத் தேவையான விபரங்களை முதலில் சேகரித்துக் கொள்ளவும். பணி முடியும் வரை தேவையான ஒரு இணைய தளத்தின் திரையை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு பணியாற்றவும். வேறு திரைகள் அனைத்தையும் மூடிவிடவும்.
Related Posts with Thumbnails

பின்தங்கிய விண்டோஸ் - முன்னேறிய ஐஓஎஸ், ஆண்ட்ராய்ட்

கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே மைக்ரோசாப்ட் நிறுவனம் படாதபாடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இணைய வெளியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முடியாத நிலை, மற்றொரு பக்கம் தன்னுடைய முதுகெலும்பாக இருக்கும் விண்டோஸ் இயங்குதளத்தின் 8வது பதிப்பு எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் போனது என அடுத்தடுத்து சரிவுகள்தான். டெஸ்க்டாப் கணினிகளில் இன்றுவரை விண்டோஸ் இயங்குதளத்தின் பயன்பாடு குறையவில்லை என்றாலும் புதிதாக விற்பனையாகும் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம்களில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் விற்பனையே அதிகரித்திருப்பதாக கணக்கெடுப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆண்ட்ராய்ட் தற்போது கணினிக்கு நிகரான செயல்பாடுகளைக் கொண்ட ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டமாக ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படுகிறது. வரும் காலத்தில் அது டெஸ்க்டாப் கணினிகளில் பயன்படுத்தக்கூடியதாக மாற்றம் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளத்தைப் பொறுத்தவரை அது தன்னுடைய வழி தனிவழி என்ற ரீதியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள இயங்குதளங்களில் டெஸ்க்டாப் கணினி, ஐபேட்(டேப்ளட்), ஸ்மார்ட் போன் ஆகிய மூன்று நிலையிலும் பயன்படுத்துவோரைக் கவரக் கூடியதாகவும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய இயங்குதளத்தை உருவாக்கியிருப்பது ஆப்பிள் நிறுவனம் மட்டுமே.ஆப்பிளுக்குப் போட்டியாக, எதிர்கால கணினி என்றும், 2020ம் ஆண்டுவரை புதிய பதிப்புகள் உருவாக வாய்ப்பில்லை என்றெல்லாம் மார்தட்டிக் கொண்டு மைக்ரோசாப்ட் உருவாக்கிய தொடுதிரை தொழிற்நுட்பத்துடன் கூடிய விண்டோஸ் 8 இயங்குதளம் பிரமிப்பை ஏற்படுத்தினாலும் ஏற்கனவே விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்தியவர்களுக்கு வழி தவறி வந்துவிட்டோமோ என்ற உணர்வை ஏற்படுத்திவிட்டது.

நோக்கியாவை வாங்கி, அதன் மூலம் விண்டோஸ் 8 இயங்குதள ஸ்மார்ட் போன்களை தயாரித்து விற்கும் திட்டமும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. கடைசியில் தற்போது ஆண்ட்ராய்ட் இயங்குதள போன்களைத் தயாரித்து விற்பனையைப் பிடிக்கும் நிலைக்கு அந்நிறுவனமும் தள்ளப்பட்டுவிட்டது.விண்டோஸ் 8 கணினி இயங்குதளத்திற்காக அனைவரும் டச் ஸ்கீரீன் பயன்பாட்டுக்கு மாறுவதென்றால் முதலில் மானிட்டர்களை மாற்றவேண்டும், பிறகு அதனைப் பயன்படுத்தவும், பணிபுரியவும் பழக வேண்டும்இப்பிரச்சனை அத்துடன் முடிவதில்லை. நாம் பயன்படுத்தும் அனைத்து மென்பொருள்களும் இதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த இயங்குதளத்தின் முழுப் பயனையும் பெற முடியும். அப்படியானால் பயன்படுத்துபவர்கள் இயங்குதளத்திற்கேற்ற புதிய மென்பொருள்களையும் வாங்க வேண்டும்.

இது கூடுதல் சுமை. இந்தத் தொல்லைகள் எதுவும் முந்தைய இயங்குதளங்களான விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 ஆகியவற்றில் பயனருக்கு எழவில்லை.டேப்ளட், ஸ்மார்ட்போன்கள்தான் எதிர்காலம் என்றாலும், அதில் பயன்படுத்துவதுபோல டெஸ்க்டாப் கணினியையும் பயன்படுத்தவேண்டும் என்றால் பயன்படுத்துபவர்கள் என்ன செய்வார்கள். இவ்வளவு பிரச்சனைகள் பயனருக்கு இருப்பதை ஏனோ மைக்ரோசாப்ட் கவனிக்கத் தவறிவிட்டது. இப்படி ஒவ்வொரு குறையாக சேர்ந்து மொத்தமாக விற்பனையில் விண்டோசை சரியவைத்துவிட்டது.இத்தொழிற்நுட்பத் தோல்வியை சரி செய்ய விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் போன்ற பயனர் இடைமுகத்துடன் கூடிய விண்டோஸ் 9 என்ற இயங்குதளத்தை மைக்ரோசாப்ட் உருவாக்கி வருவதாக வெளிவரும் சமீபத்திய செய்திகள், விண்டோஸ் 8ன் தோல்வியை உறுதி செய்யும் விதமாக உள்ளது.
. Related Posts with Thumbnails

வாட்ஸ்அப் அப்ளிகேஷனை ஏன் வாங்கியது ஃபேஸ்புக்

தொழில்நுட்ப உலகின் சமீபத்திய பரபரப்பாக பேசப்படுவது வாட்ஸ்அப் (whats up) மென்பொருளை ஃபேஸ்புக் 19 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி) வாங்கியது பற்றித்தான்.

இத்துறையில் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஒரு நிறுவனம் வாங்கப்படுவது இதுவே முதல் முறை என்பதுதான் பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் அப்படி என்ன இருக்கிறது? ஃபேஸ்புக் ஏன் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து அதனை வாங்கவேண்டும்? என்ற கேள்விகளுக்கு முன்பாக அந்த மென்பொருளைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

வாட்ஸ் அப் என்பது ஆண்ட்ராய்ட், ஆப்பிள், பிளாக்பெர்ரி, விண்டோஸ், சிம்பியன் ஆகிய இயங்குதள ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப் படக்கூடிய ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாகும்.

இந்த அப்ளிகேஷன் நிறுவப்பட்ட எந்தவொரு ஸ்மார்ட் போனிலிருந்தும் மற்றொரு வாட்ஸ்அப் நிறுவப்பட்ட போனுக்கு (இணையவசதி இருக்க
வேண்டும்) குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோக்கள், குரல் பதிவுகள் ஆகிய
வற்றை பரிமாறிக் கொள்வது எளிதானதாகும்.

இதனை உருவாக்கியவர்கள் பிரைன் அக்டன் மற்றும் ஜேன் கோம். பிரைன் அக்டன் யாகூ நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்
றியவர். வாட்ஸ்அப் முதன்முதலில் குறுஞ்செய்திகளுக்கு மாற்றாகவே உருவாக்கப்பட்டது. சாதாரணமாக தங்கள் நண்பர்களுக்குள் செய்தி பரிமாறிக்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த அப்ளிகேஷன் இன்று எந்த விளம்பரமும் இன்றி ஐந்தே ஆண்டுகளில் 45 கோடிக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படுவது ஆச்சரியப்படத்தக்கதாகும்.
அதற்குக் காரணம், குறுஞ்செய்தி அனுப்புவதில் இதன் எளிமையும் வேகமும்தான்.

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை விட  ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் பயன்படுத்த எளிதானதாக இருக்கிறது. அத்துடன் பகிரப்படும் செய்தி மற்றும் அனுப்புபவரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாகவும் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் யார் வேண்டுமானாலும் போலியான பெயரில் கணக்குத் தொடங்கி செய்திகளை வெளியிட முடியும். ஆனால், வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் அவ்வாறு செய்வது எளிதல்ல. காரணம் உங்கள் தொடர்பில் உள்ள நண்பர்களின் மொபைல் எண்கள் அனைத்தும் உங்கள் ஃபோன்புக்கில் இருக்கும். ஃபேஸ்புக், கூகுள் பிளஸ், டிவிட்டர் போன்றவற்றில்  எண்ணற்ற நண்பர்கள் இருந்தாலும் அனைவருடனும் எப்போதும் தொடர்பில் இருக்க முடியாது. ஆனால், வாட்ஸ் அப் அப்ளிகேஷனின் குரூப் வசதி அனைவருடனும் தொடர்பில் இருக்கும் வசதியைத் தருகிறது.
அத்துடன் ஒருவர் வெளியிடும் செய்தியை மற்றொருவர் திருடி வெளியிடு
வது ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் எளிதில் நடைபெறக் கூடியது. வாட்ஸ் அப் பயன் படுத்துவோருக்கு அத்தகைய பிரச்சினை இல்லை.
ட்விட்டர் தளத்தில், வாட்ஸ் அப் வெளியிட்ட தகவலில், 24 மணி நேரத்தில், 2,700 கோடி செய்திகளும், 32 கோடியே 50 லட்சம் போட்டோக்களும் பரிமாறிக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாட்ஸ் அப் அப்ளிகேஷனைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இன்று வாட்ஸ்அப் போலவே வேறு சில அப்ளிகேஷன்களும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஸ்கைப் (Skype), வைபர் (Viber), வீசேட் (wechat) ஆகியவையாகும்.

வேகமாக வளர்ந்துவரும் ஸ்மார்ட் போன் சந்தையில் வாட்ஸ் அப் போன்ற ஒரு மென்பொருளை உருவாக்கி வெளியிடுவதொன்றும் ஃபேஸ்புக்கிற்கு பெரிய காரியமல்ல. ஆனால், ஏற்கனவே 45 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் வாட்ஸ் அப்பின் இடத்தை அடைய முடியமா என்பது சந்தேகம்தான்.

தொழிற் போட்டியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வலுவான பல சிறு சிறு நிறுவனங்களை கேட்கும் விலை எத்தனையாயினும் கொடுத்து வாங்குவதென்பது முதலாளித்துவ சூழலில் நாம் பார்க்கக்கூடிய நிகழ்வுதான்.
ஆன்லைன் வீடியோ உரையாடலுக்கு புகழ்பெற்ற ஸ்கைப் மென்பொருள் நிறு
வனத்தை மைக்ரோசாப்ட் 40 ஆயிரம் கோடிக்கு ஏற்கெனவே விலைக்கு வாங்கியிருக்கிறது. அந்த வகையில், ஃபேஸ்புக் இதனை வாங்கியிருக்காவிட்டால் கூகுளோ அல்லது வேறு ஒரு நிறுவனமோ இன்றோ அல்லது இன்னும் சில மாதங்களிலோ இதை விட நல்ல விலைக்கு வாங்கிவிடும் என்பதுகூட மறுக்க முடியாத விஷயம்தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால் வாட்ஸ் அப் அப்ளிகேஷனை உருவாக்கிய பிரைன் அக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகிய இருவரும் ஒருகாலத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தால் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என்பதுதான்.

வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தவும் அதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் www.whatsapp.com என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

. Related Posts with Thumbnails

கைபேசிகள் தோற்றுவிக்கும் புதிய உடல் நலக் குறைபாடுகள்


இன்று மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனமாக மாறியிருப்பது கைபேசிகள். சாதாரண கைபேசி தொடங்கி, ஸ்மார்ட்போன், டேப்ளட் எனப்படும் விலையதிகக் கணினிப் பயன்பாட்டுச் சாதனங்கள் வரை அனைத்தும் சிறுவர், பெரியவர் என்ற வயது வித்தியாசம் இல்லாமல்  அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றன.
அறிவியல் தொழில்நுட்பம் வழங்கிய அற்புதக் கண்டுபிடிப்பு இக்கைபேசிகள். ஆனால், அதனை அதிகம் உபயோகிப்பதால் ஏற்படும் எண்ணற்ற பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
முன்பு வந்த கைபேசிகளை விட இன்றுள்ள கைபேசிகள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவையாகவே உள்ளன. ஆனாலும், அதன் தீங்கு குறைந்திருக்கிறதே ஒழிய முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டதாக கூறமுடியாது.
கைபேசியில் தொடர்ந்து 6 நிமிடத்திற்கு மேல் பேசினால் கேன்சர் வரும் வாய்ப்புகள் உண்டென்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. எனவே, தொடர்ந்து பேசுபவர்கள் இயர்போன்களைப் பயன்படுத்திப் பேசவேண்டும் என்றும், அப்போதுகூட கைபேசி உடலுக்கு அருகாமையில் இல்லாமல் தள்ளியிருக்கும்படியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, கைபேசி கோபுரங்கள் மூலமாக பரவும் கதிர்வீச்சின் அளவை குறைக்கவேண்டும் என்றும், அருகருகே கோபுரங்கள் இல்லாமல் குறிப்பிட்ட இடைவெளியில்தான் அமைக்க வேண்டும் எனவும், மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. அது குறித்த ஆராய்ச்சி முடிவுகள் தங்களிடம் இல்லையென்றும் அது கூறிவிட்டது.
இப்படிக் கதிர்வீச்சு குறித்து எந்த முடிவும் சரிவர எடுக்க முடியாத நிலையில் புதியதாக கைபேசிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் கண்பார்வை குறை
பாடு ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் கண் பரிசோத
னைக்கு வந்த ஜம்முவைச் சேர்ந்த 11 வயது சிறுவனைப் பரிசோதித்தபோது அவனுக்கு குறைந்த இடைவெளியில்  பாடப் புத்தகங்களைப் படிக்க முடிந்தது. ஆனால், தொலைவில் உள்ள பொருள்களை இனங்காண்பதில் குழப்பமும்,  கரும்பலகையில் எழுதியதைப் படிக்க முடியாத நிலையும் இருந்தது.
இத்தகைய நிலை ஏன் ஏற்படுகிறது என்று விசாரித்தபோது, அச்சிறுவன் கைபேசியில் தொடர்ந்து பல மணிநேரம் விளையாடிக் கொண்டிருப்பான் என்ற தகவலை அவனது பெற்றோர் தெரிவித்தனர்.
அச்சிறுவனை ஆராய்ந்த அம்மருத்துவமனையின் அனுபவமிக்க டாக்டர் ஹர்பன்ஸ் லால் கூறும்போது, சிறுவனின் பார்வை நிலை சரியாக இருக்கிறது. ஆனால், 7 வயது முதலே கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருவதாலும், தொடர்ந்து இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பதும் கண் தசைகளை தளர்ச்சியடையச் செய்து விட்டது என்று கூறினார்.
இதுபோன்ற பாதிப்புகள் இன்று சிறு குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் அதிகமாக தோன்றி வருவதாகவும், இதற்கு காரணம் அதிகமாக கைபேசி விளையாட்டுக்கள் விளையாடுவது, குறுஞ்செய்திகளை அனுப்புவது, படிப்பது, இணையப் பக்கங்களைப் பார்ப்பது என்று எண்ணற்ற வேலைகளை கை பேசியின் ஒளி உமிழும் சிறு திரைகளில் பார்ப்பதால்தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், இத்தகு பாதிப்பு ஏற்படாமல் இருக்க கைபேசிகள், ஸ்மார்ட் போன்கள், டேப்ளட், கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது சற்று தள்ளி வைத்துப் பயன்படுத்தவேண்டும் என்றும், தொடர்ந்து திரையின் மீதே கவனம் செலுத்தாமல்  20 நிமிடங்களுக்கு ஒரு முறை பார்வையை நகர்த்தி 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை 20 விநாடி நேரமாவது பார்ப்பதை பயிற்சியாகக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அறிவியல் தந்த வரமாக கைபேசி இருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.
. Related Posts with Thumbnails

இணைய வளர்ச்சி புள்ளிவிவரம் - 2012



இணைய வளர்ச்சி புள்ளிவிவரம் - 2012
  • டிசம்பர் 2011 வரையிலான கணக்கீட்டின்படி 55.5 கோடி இணையதளங்கள் செயல்பாட்டில் உள்ளன. 2011ஆம் ஆண்டில் மட்டும் புதிதாக இணைக்கப்பட்டவை 30 கோடி.
  • மொத்த மின்னஞ்சல்களில் 71 சதவீதம் ஸ்பேம் (Spam) என்ற வேண்டாத குப்பைகளே நிறைந்திருக்கின்றன.
  • டாட் காம் (Dot Com) என்ற துணைப்பெயருடன் அமைந்த இணையதளங்களின் எண்ணிக்கை மட்டும் 9.55 கோடி.
  • 8.69 கோடி இணையதளங்கள் நாட்டின் பெயரை ( .uk, .in, .us போன்றவை) பின்னிணைப்பாகக் கொண்டவை.
  •  உலகில் 210 கோடிப் பேர் இணையப் பயன்படுத்துகின்றனர். இதில் 92.22 கோடிப் பேர் ஆசியாவைச் சேர்ந்தவர்கள்.
  •  இணையத்தைப் பயன்படுத்துவோரில் 45 சதவீதம் பேர் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள்.
  •  உலகம் முழுவதும் 590 கோடிப் பேரிடம் கைபேசி உள்ளது. இதில் 120 கோடிப் பேர் கைபேசி இணைய இணைப்பு பெற்றவர்கள்.
தகவல் ஆதாரம்: இண்டெர்நெட் வேர்ல்ட் ஸ்டேட்ஸ், ஜனவரி 2012
Related Posts with Thumbnails

2012ல் வரவிருக்கும் கணினி மாற்றங்கள்

ந்த ஆண்டில் கணினித் தொழில்நுட்பம் சென்ற ஆண்டு இருந்ததைவிட மேலும் பல கூடுதல் வசதிகளை மக்களுக்குப் பெற்றுத்தரும் என்றே சொல்லலாம்.

டேப்ளட் பிசி:
2012 டேப்ளட் பிசிக்களுக்கான ஆண்டு என்று குறிப்பிடும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரிக்கும் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அலைபேசி வழியாக இணையத்தைப் பயன்படுத்தும் பலரும் இனி டேப்ளட் பிசி எனப்படும் பலகைக் கணினிக்கு மாறும் வாய்ப்பு அதிகமுள்ளது.
டேப்ளட் பிசி தற்போது சந்தையில் 7000 ரூபாய் விலையில் தொடங்குகிறது. இந்தியாவில் இதற்கான சந்தையை ஆகாஷ் டேப்ளட்டின் வரவே தீர்மானிக்கும் என்பதாகக் கூறப்படுகிறது. உலகின் விலை குறைந்த டேப்ளட்டான இது மாணவர்களுக்கு ரூ.1500 விலையிலும், பிறருக்கு ரூ.3000 என்ற விலையையும் நிர்ணயித்துள்ளது. இதன் விற்பனை தொடங்கிய பிறகே மற்ற நிறுவன டேப்ளட்களின் விலையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள்:
இணையத்தில் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் கூகுள், சென்ற ஆண்டில் கூகுள் பிளஸ் சமூக வலைத்தள சேவையை அறிமுகம் செய்தது. இது தொடங்கப்பட்ட ஜூலை மாதத்தில்  ஒரு கோடிப் பேர் உறுப்பினராக சேர்ந்தனர். டிசம்பர் 27 வரையிலான கணக்கின்படி சுமார் 6.2 கோடிப் பேர் உறுப்
பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை 2012இன் இறுதிக்குள் 40 கோடியாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கை முன்னணி வலைத்தளமான ஃபேஸ்புக்கிற்கு கடும் சவாலை உருவாக்கும். அதன் காரணமாக மேலும் பல வசதிகளை ஃபேஸ்புக்கும், கூகுளும் பயனருக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வருகைக்குப் பின் கூகுளின் பிற சேவைகளான ஜிமெயில், பிளாக்கர், யுடியூப் உள்ளிட்டவற்றில் பல மேம்படுத்தல்கள் செய்யப்பட்டன. அதிகம் பயனரைப் பெறாத கூகுள் பஸ் மற்றும் கூகுள் ஹெல்த் உள்ளிட்ட சேவைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
இந்த ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் மியூசிக் சேவை மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கப்படும் என்று தெரிகிறது.
ஹெச்டிஎம்எல் 5:
புதிய இணையத் தொழில் நுட்பமான ஹெச்டிஎம்எல் 5 தொழில்நுட்பத்தில் பல சேவைகளும் மென்பொருள்களும் உருவாக்கப்படும் என்று தெரிகிறது.
மொபைல்களுக்கான அடோப் ஃபிளாஷ் பிளேயரை மேம்படுத்துவதை குறைத்து இனி ஹெச்டிஎம்எல் 5 தொழில்நுட்பத்தைப்  பின்பற்றப் போவதாக அடோப் நிறுவனம் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மொபைல் போன்:
முன்னணி மொபைல் போன் நிறுவனங்களான சாம்சங் மற்றும் நோக்கியா தயாரித்துள்ள வளையும் தன்மையுள்ள அலைபேசிகள் சந்தைக்கு வரவுள்ளன. ஆண்ட்ராய்ட், விண்டோஸ் இயங்குதள ஸ்மார்ட் போன்களும் பெருமளவு சந்தையை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் போன்களில் இரண்டு கோர் பிராசசர்கள் தவிர்க்க முடியாத அம்சமாக மாறி வருகிறது.தொடுதிரை வசதி மற்றும் ஆப்பிள் ஐபோன் 4 எஸ் (Apple I-Phone 4S )-ல் உள்ள குரலை அடையாளம் கண்டு தகவல்களை உள்ளிடும் சிரி (SIRI) தொழில்நுட்பம் போல ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் இயக்க போன்களிலும் புதிய வசதி இடம்பெறவுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் கூகுள் மேஜல் (Majel) என்ற தொழில்நுட்பத்தை ஆண்ட்ராய்ட் போனுக்காக ரகசியமாக உருவாக்கி வருவதாக பிசி வேர்ல்ட் ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதே வசதி டேப்ளட், நெட்புக், அல்ட்ரா புக் மற்றும் மேசைக் கணினிகளுக்கும் வரக்கூடும்.
ஆண்ட்ராய்ட் போன் விற்பனையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு மோட்டரோலா நிறுவனம் பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காரணம் சென்ற ஆண்டு இறுதியில் ஆண்ட்ராய்ட் பயன்பாட்டிற்காக கூகுள் - மோட்டரோலா நிறுவனங்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தம்தான்.
மொபைல் வாலட் (Mobile Wallet) எனப்படும் அலைபேசி வழியாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போல பணம் செலுத்தும் வசதி பரவலாகும் என்று தெரிகிறது. தற்போது இதற்கான கட்டுப்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
முப்பரிமான தொலைக்காட்சி:
3டி தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகள் தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பயன்பாடு இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றும், இதனால் தற்போது புழக்கத்தில் உள்ள எல்இடி டிவிக்களின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல தொலைக்காட்சிப் பெட்டிகள் வழியாக இணையத்தை அணுகும் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியடையும். இதன் மூலமாக இணைய வீடியோ ஒளிபரப்பு சேவை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
கணினிகள்:
நெட்புக், டேப்ளட் பிசி, அல்ட்ரா புக் கணினிகள் மேசைக் கணினிகளின் பயன்பாட்டை பின்னுக்குத் தள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு வெளிவர உள்ள விண்டோஸ் 8 இயங்குதளம் டேப்ளட் மற்றும் நெட்புக் கணினிகளை வேறுபடுத்த முடியாத வகையில் இருக்கும்.
. Related Posts with Thumbnails

மொபைல் போன் கதிர்வீச்சு, பேட்டரி மற்றும் டேட்டா பேக்கப் பிரச்சனைகள்


லக அளவில் 83 சதவீதம் பேர் மொபைல் போன் பயன்படுத்துவதாக  கேஷ்ஜெனரேட்டர் என்று இணைய வழி தகவல் சேகரிப்பு புள்ளி விவரம் ஒன்று குறிப்பிடுகிறது. அந்த அளவிற்கு இன்று பெரும்பாலானவர்களின் தகவல் தொடர்பு சாதனமாகவும், கைகளுக்குள் உலகம் என்று சொல்லுமளவிற்கு அதன் பயன்பாடும் மாறியிருக்கிறது.
மொபைல் போன் பயன்படுத்தும் 10ல் 5 பேர் அதற்கு அடிமையாகவே மாறிவிடுகின்றனர் என்றும், மொபைல் வழியாக இணையத்தைப் பயன்படுத்துவோர் 44 சதவீதம் என்றும், குறுஞ்செய்தி அனுப்ப மற்றும் ஒளிப்படம் எடுக்க 74 சதவீதம் பேர் பயன்படுத்துவதாகவும் மேற்சொன்ன ஆய்வில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிக்சனரி, கால்குலேட்டர் தொடங்கி கணினி, தொலைக்காட்சி, டெலிகான்
பிரன்ஸ் என பல சாதனங்களின் வேலையையும் செய்யும் ஒரே பொருளாக மாறியிருக்கிறது.
கதிர்வீச்சு
இது ஆக்கப்பூர்வமான வளர்ச்சியாக இருந்தாலும் சில ஆபத்துகளும் உண்டு. முதலாவது கதிர் வீச்சு. மொபைல் போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், கதிர்வீச்சு வெளியாவதை யாரும் மறுக்கவில்லை.
போன்களில் கதிர் வீச்சு அளவை எஸ்.ஏ.ஆர்.  (SAR - Specific Absorption Rate) என்று குறிப்பிடுகிறார்கள். இது வாட் பர் கேஜ் என்ற அளவில் அளக்கப்படுகிறது. இந்தியாவில் முன்பு ஐரோப்பிய தரநெறிமுறைப்படி 2W/Kg அளவுள்ள போன்கள் அனுமதிக்கப்பட்டன. தற்போது அமெரிக்க தரநெறிமுறைப்படி 1.6W/Kg  என்ற அளவு கடைபிடிக்கப்படுகிறது. இது குறித்த விபரம் போனின் உதவிப் புத்தகத்திலும், லேபிளிலும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இது குறித்த ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும் நாம் மொபைல் போனை காதுகளில் ஒட்டிவைத்துப் பேசாமல் தள்ளி வைத்தே பேசவேண்டும் அல்லது அதற்கென உள்ள இயர்போன்களைப் பயன்படுத்தலாம். எப்படியாயினும் அதிக நேரம் தொடர்ந்து பேசுவது காதுகளையும், மூளையையும் பாதிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களும், குழந்தைகளும்  மொபைல் போனை அதிகமாக பயன்படுத்துவது தவிர்க்கப்படவேண்டும்.
பொதுவாக சிக்னல் கிடைக்காத பகுதிகளில் இருக்கும்போது கதிர்வீச்சு அதிகமாக வெளியாவதாகக் கூறப்படுகிறது.
பேட்டரி
மொபைல் போனுக்கு ஆதாரமாக இருப்பது அதற்கு மின் சக்தி வழங்கும் பேட்டரியாகும். இன்று 1000ஆஹா அளவு மின்சக்தி தரும் பேட்டரிகளே சிறந்ததாகக் கூறப்படுகிறது.
பேட்டரியை முறையாக சார்ஜ் செய்து முக்கியம். முதன் முதலாக மொபைல் வாங்கியவுடன் குறைந்தது 8 மணி நேரமாவது சார்ஜ் செய்யவேண்டும். அதன் பிறகு சார்ஜ் தீரும் நிலை ஏற்பட்டால் மட்டுமே சார்ஜ் செய்யவும். அதுவும் முழுமையாக செய்யவேண்டும்.
அதேபோல சார்ஜ் ஏற்றப்படுவது முழுமையடைந்ததும் மின் இணைப்பைத் துண்டிக்காமல் இருப்பதும் பேட்டரியை செயலிழக்கச் செய்யும். எனவே சார்ஜ் செய்யும் நேரத்தை சரியாக கணக்கிட்டு அழைப்புகள் வராத நேரமாகப் பார்த்து தேர்ந்தெடுக்கவும். இந்த முறையைத் தொடர்ந்து பின்பற்றினால் பேட்டரியின் ஆயுள் நீடித்திருக்கும்.
பேட்டரி தொடர்ந்து அதிக நேரம் தாக்குப்பிடிக்க வேண்டுமென்றால் ரிங்டோனாக முழுமையான பாடலைப் பயன்படுத்தாமல் மொபைல் நிறுவனம் தரும் ரிங்டோனை செட் செய்வது நல்லது அல்லது சிறிய அளவாக துண்டிக்கப்பட்ட எம்பி3 கோப்புகளைப் பயன்படுத்தலாம். வால்பேப்பர் அனிமேஷன் படமாக இல்லாமல் திரை அளவிற்கு இணையான அளவுப் படத்தை உபயோகிக்கவும். ப்ளுடூத், ஒய்ஃபீ வசதிகள் இருந்தால் பயன்படுத்தாத நேரத்தில் அவற்றை அணைத்து வைக்கவும்.
போன் பேக்கப்
உங்க அப்பா போன் நெம்பர் என்ன? என்று ஒருவர் கேட்டால் உடனே போனில் தேடிப் பார்த்து சொல்வது வாடிக்கையாகி இருக்கிறது. தாய், கணவன், மனைவி, மகன், மகள் என்று குடும்ப உறவுகளைத் தொடர்பு கொள்ள முக்கியமான எண்களை நினைவில் வைத்துக் கொள்ளாமல்தான் பலபேர் இருக்கிறோம்.
இத்தகைய சூழலில் உங்கள் மொபைல் போன் காணாமல் போனாலோ, சேதமடைந்தாலோ அதில் பதிந்து வைத்திருக்கும் அனைத்து தொடர்பு எண்களையும், முக்கியமான தேதிகள், தகவல்கள் என பலவற்றையும் இழக்க நேரிடும். எனவே முடிந்தவரை அவ்வப்போது உங்கள் சிம் கார்டு தகவல்களை மொபைல் போன், மெமரி கார்டு மற்றும் உங்களிடம் வேறு ஏதேனும் பயன்படுத்தாத சிம் கார்டுகள் இருந்தால் அதில் பேக்கப் செய்து வைத்துக் கொள்ளவும். இப்போது வரும் பெரும்பாலான போன்களில் இந்த வசதி இருக்கிறது. அதேபோல கணினி வைத்திருப்பவர்கள் இந்த பேக்கப்பை அதிலும் பதிந்து வைத்துக்கொள்ளவும். ஒருசில செல்போன் நிறுவனங்கள் பேக்கப் வசதியை தருகிறார்கள். ஆனால் அதற்கு மாதந்திரக் கட்டணம் செலுத்தவேண்டும். முடிந்தவரை முக்கியமான எண்களை குறிப்பாக எழுதி வைத்துக்கொள்வதே சிறந்தது. Related Posts with Thumbnails

கூகுள் மியூசிக் தளத்தைப் பார்க்க குறுக்கு வழி

கூகுளின் புதிய சேவையான கூகுள் மியூசிக் இப்போது அமெரிக்காவில் மட்டும் சேவையை வழங்கி வருகிறது. இச்சேவை பரவலாகக் கிடைக்க சிறிது காலமாகும் என்று தெரிகிறது.
https://music.google.com தளத்தை நாம் பார்க்க விரும்பினால் We're sorry. Google Music is currently only available in the United States என்ற செய்தி தோன்றும்.

இத்தளத்தை பார்க்க நாம் அமெரிக்காவிற்குத்தான் செல்லவேண்டும். காரணம் நம்முடைய ஐபி முகவரிதான்.
ஆனால் இங்கி‌ருந்தே பார்க்க ஒரு குறுக்கு வழி இருக்கிறது. எப்படியென்றால் http://www.proxy4free.com/ என்ற இந்தத் தளத்தில் நுழைந்து அமெரிக்க புராக்ஸி சேவை சர்வர் ஒன்றை தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் தோன்றும் இணைய தளத் திரையில் music.google.com என்று டைப் செய்து ஓகே கொடுக்கவும். இப்போது நீங்கள் அமெரிக்காவில் இருந்து பார்ப்பதாகக் கருதி பக்கம் திறக்கும்.

இனி கூகுளின் பாடல் கோப்புகளைப் பார்க்கலாம். கேட்கலாம்.



Related Posts with Thumbnails

ஒய்-ஃபி (Wi-Fi) தொழில்நுட்பம்


கம்பிவடத் தொழில் நுட்ப முறைக்கு மாற்றாக கம்பியில்லாத வயர்லெஸ் தொழில்நுட்பம் இன்று பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.  அதில் ஒருவகையே ஒய்-ஃபி (Wi-Fi). இது ஒயர்லெஸ் ஃபிடெலிடி (Wireless Fidelity) என்பதன் சுருக்கமாகும். இத்தொழில் நுட்பம் ஒய்-ஃபி அல்லயன்ஸால்  (Wi-Fi Allaines)  உருவாக்கப்பட்டது.
வயர்லெஸ் நுட்பம் வானொலி, தொலைக்காட்சி, கணினி,  கைபேசி மற்றும் பல சாதனங்களில் வெவ்வேறுஅலைவரிசைகளில் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஒய்-ஃபி-க்கு 2.4 கிகா ஹெர்ட்ஸ் (Giga Hertz) முதல் 5 கிகா  ஹெர்ட்ஸ் (Giga Hertz) வரையிலான அலைவரிசை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனை 802.11 என்ற எண்ணால் குறிப்பிடுவர். வினாடிக்கு  11 மெகா பைட் (Mega Byte) முதல்   140 மெகா பைட் வரை தகவல்களைக் கடத்தும் திறன் கொண்டது. இத்திறனை அடிப்படையாக வைத்து 802.11ஒ, 802.11, 802.11ப, 802.11  என நான்கு உட்பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகிறது.
அலுவலகங்களில் வயர்கள் இல்லாமல் வயர்லெஸ் முறையில் கணினிகள், பிரிண்டர்கள், மடிக்கணினிகளுக்கிடையே தொடர்பை ஏற்படுத்திட (LAN) இத்தொழில்நுட்பம் உதவுகிறது.
தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள், இரயில் நிலையங்கள்  ஆகிய பல இடங்களில் இணையத்தைப்  பயன்படுத்துவதற்கென  ஒய்-ஃபி அக்ஸஸ் பாயிண்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது வீடுகள் சிறு நிறுவனங்களில் இணைய இணைப்பிற்காகப் பயன்படுத்தப்படும் மோடம்களில் ஒய்-ஃபி ரூட்டர்கள் (Wi-fi Router) பொருத்தப்பட்டுக் கிடைக்கின்றன.

இதுபோன்ற ஒய்-ஃபி வசதி உள்ள இடங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ற மடிக்கணினிகள் (Laptop), குளிகைக் கணினிகள் (Tablot Pc) மற்றும் கைபேசிகள் (Smart Phones)  சந்தையில் பல மாடல்களில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.
ஒய்-ஃபி சாதனங்களுக்கான இந்திய சந்தையின் தற்போதைய மதிப்பு சுமார் 120 கோடி. வரும் ஆண்டுகளில் இது 400 கோடியாக வளர்ச்சியடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொழில் நுட்பம் சிறந்ததாக இருந்தாலும் இதிலும் சில பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளது. ஒய்-ஃபி நெட்வொர்க்கில்  ஹேக்கர்கள் எளிதில் நுழைந்து நம் தகவல்களைத் திருடி நாசவேலையில் ஈடுபடும் சாத்தியக்கூறுகள் உண்டு.
ஒய்-ஃபி நெட்வொர்க்கில் தகவல் திருட்டு
ஒய்-ஃபி நெட்வொர்க்கின் எல்லைக்குட்பட்ட சுற்றுப்புறத்தில் எங்கிருந்தும் அந்த நெட்வொர்க்கை ஹேக் செய்யமுடியும். இதற்கான மென்பொருள்கள்கூட இணையத்தில் கிடைக்கின்றன.
இதுபோன்ற திட்டமிட்ட ஹேக்கிங் மட்டுமல்லாமல் ஏதோச்சையாக கிடைக்கும் ஒய்-ஃபி நெட்வொர்க்கில் நுழைந்து விளையாட்டாக அல்லது விஷமத்தனமாகக் குழப்பங்களை ஏற்படுத்துதல், தகவல்களைத் திருடுதல் ஆகியவையும்கூட நிகழ்கின்றன.
தற்காலிகமாக போலியான ஒய்-ஃபி நெட்வொர்க்கை உருவாக்கி தொடர்பு கொள்ளும் கணினிகளில் தகவல்களைத் திருடுவது எனப் பல வழிமுறைகள் கையாளப்படுகின்றன.
பாதுகாப்பு வழிமுறைகள்
இதுபோன்ற தீய நோக்கத்துடன் வயர்லெஸ் நெட்வொர்க்குகளை அணுகாமல் தடுக்க ஒய்-ஃபி ரூட்டரின் பாஸ்வேர்டை சாதாரணமானதாக இல்லாமல் கடினமானதாக அமைக்கவேண்டும்
உங்கள் ஒய்-ஃபி நெட்வொர்க்கிற்கான பாதுகாப்பு அமைப்பை (Security Setup) எப்போதும் இயக்கத்திலேயே வைத்திருக்கவும்.  வீடுகள் மற்றும் சிறு நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ஒய்-ஃபி ரூட்டர்களுக்கும் இவை பொருந்தும். பயன்படுத்தாத போது மின் இணைப்பைத் துண்டித்து விடுவதே  நல்லது. உங்கள் நெட்வொர்க்கில் உள்ள ஒய்-ஃபி கருவிகளுக்கு மட்டுமே இணைப்பை அனுமதிக்கும் படியான ஃபில்டர்களைப் பயன்படுத்தவும். ஒய்-ஃபி சாதனங்களில் வேறு திறந்த நெட்வொர்க்குகளை தானாகவே இணைக்கும் (Automatic Access) தானியங்கி அமைப்புகள் இருந்தால் அவற்றின் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும். நிறுவன நெட்வொர்க்குகளுக்கு ஃபயர்வால் (Firewall) போன்ற கூடுதலான பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தவேண்டும்.
. Related Posts with Thumbnails

கூகுளின் அடுத்த அதிரடி கூகுள் வாலட்

எதிர்பார்க்காத ஒன்றை  திடீரென்று சந்தையில் நுழைத்து சாதிப்பது கூகுளின் சாமர்த்தியம், அ‌ப்படித்தான் இப்போது கூகுள் மே 26இல் நியூயார்க் நகரில் வெளியிட்ட அறிவிப்பும் இருந்தது.
இந்த முறை கூகுள் நுழைந்திருப்பது பணபரிமாற்ற  சேவை அதாவது  நாம் பயன்படுத்தும் மொபைல் போனிலிருந்து விரும்பியதை வாங்குவதற்கான மொபைல் பேமண்ட் சேவை. இச்சேவைக்கு கூகுள் வாலட் என்று பெயரிடப்பட்டுள்ளது. இச்சேவையில் கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு போல பிளாஸ்டிக் அட்டையாக இல்லாமல் போன் திரையில் விர்ச்சுவல் கார்டாக காட்டப்படும் என்றும், இந்த அப்ளிகேசனில் நமக்கான  பின் எண்ணை அழுத்தி நுழைந்து பேமண்ட்களை அனுப்ப முடியும்.
இந்த சேவை சிட்டி  பேங்க் (Citi Bank), மாஸ்டர் கார்டு (Master Card), பேபாஸ்(Pay Pass) நிறுவனங்களின் கூட்டணியில் ஸ்பிரிண்ட் நெக்ஸஸ் எஸ் 4 ஜி (Nexus S 4G by Google, available on Sprint).ஆண்ட்ராய்ட் போனில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் மட்டுமே சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பிற நாடுகளுக்கும் விரிவு படுத்தப்படும் எனத் தெரிகிறது.‌
கூகுள் வாலட் பற்றி மேலும் அறிய http://www.google.com/wallet/ என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
. Related Posts with Thumbnails

கணினி தொழில்நுட்பம் 2010

இந்த ஆண்டில் கணினித் துறை பல நிலைகளிலும் வளர்ச்சி பெற்றது. 2009ஆம் ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பு  சற்றே குறைந்தது, தொழில் நுட்பத் துறை வளர்ச்சிக்குக்கு சாதகமாக அமைந்தது.
மைக்ரோசாப்ட், ஆரக்கிள், அடோப் மென்பொருள் நிறுவனங்கள் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மென்பொருள்களை அறிமுகப்படுத்தின. புதிய வியாபார முயற்சிகளையும் மேற்கொண்டன.
கூகுள், பேஸ்புக், டிவிட்டர், யாகூ  ஆகிய இணையதள நிறுவனங்களும் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தின. அதே நேரத்தில் சில பழைய, பயன்பாடு குறைந்த வசதிகளைத் திரும்பப்பெற்றன.
மைக்ரோசாப்ட் பிங் - யாகூ ஒப்பந்தம், பேஸ்புக் - கூகுள் மோதல், விக்கிலீக்ஸ்  ‌‌வெளியிட்ட அமெரிக்க தூதரகக் ‌கேபிள் தகவல்கள், அதைத் தொடர்ந்து ஜூலி‌யன் அஸெஞ்ச் கைது, சீனாவின் அதி‌வேக சூப்பர் கம்ப்யூட்டர் எனப் பல நிகழ்வு‌கள் முக்கிய செய்திகளாயின. அதன் சிறு தொகுப்பே இப்பட்டியல். இது என் நினைவில் நின்றவை மட்டுமே பட்டியலில் உள்ளன. உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தெரிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். அவற்றையும் சேர்த்துக் கொள்கிறேன்.

ஜனவரி
  • கூகுள் நெக்ஸஸ் ஒன் ஆண்ட்ராய்ட் போனை வெளியிட்டது.
  • புகழ் பெற்ற ஸ்டார் ஆபிஸ், ஓப்பன் ஆபிஸ், ஜாவா ஆகிய மென்பொ ருள்களை உருவாக்கிய சன் மைக்ரோ சிஸ்டத்தை ஆரக்கிள் நிறுவனம் கையகப்படுத்தியது.





பிப்ரவரி
  • கூகுள் பஸ் சமூக வலைத்தள சேவையை அறிமுகப்படுத்தியது. இது போதிய வரவேற்பைப் பெறவில்லை.
  • கூகுளின் போட்டியை சமாளிக்க மைக்ரோசாப்ட் - யாகூ நிறுவனங்கள் கூட்டாக இணைந்து செயல்படுவதற்கான உடன்படிக்கையை செய்து கொண்டன. இதன்படி பிங்கின் தேடல் நுட்பத்தை யாகூவும், யாகூவின் விளம்பர பரிவர்த்தனையை மைக்ரோசாப்ட்டும் பயன்படுத்திக்கொள்கின்றன.
மே
  • தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கான 3 ஜி அலைக் கற்றை ஒதுக்கீட்டு ஏலம் நடந்தது. இதன் மூலம் அரசுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி வரையிலான வருமானம் கிடைத்தது. இந்த ஏலமே 2ஜி அலைக்கற்றை ஊழல் தொகையான 1,76,000 கோடி ரூபாயை மதிப்பிட உதவியது.
  • அதிவேக இணையத்திற்கான முயற்சிகளை ‌மேற்கொண்டிருக்கும் கூகுள் இணைய வழியில் தொலைக்காட்சி ஒளிபரப்பை‌ மேற்கொள்ள தி்ட்டமிட்டுள்ளது. இதற்கென  கூகுள் இண்டெர்நெட் டிவியை துவக்குவதாக அறிவித்தது.
ஜூன்
  • உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுடன் உலக இணை ய மாநாடு 2010 கோவையில்  நடத்தப்பட்டது. அர சின் அதிகாரப்பூர்வ எழுத்துருவாக 16 பிட் யுனிக்கோட் அங்கீகரிக்கப்பட்டது.
  • இதே நிகழ்வில் பனேசியா ட்ரீம்வீவர் நிறுவனத்திற்கு சிறந்த தமிழ் மென்பொருள் தயாரிப்பிற்கான விருதும் வழங்கப்பட்டது. 
ஜூலை
  • இந்திய ரூபாய்க்கு புதிய அடையாளச் சின்னம் ஜூலை 15 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சின்னம் தமிழ் நாட்டைச் சேர்ந்த உதயகுமாரால் உருவாக்கப் பட்டது.
ஆகஸ்ட்
  • இந்திய ரூபாய்க்கான புதிய  சின்னம் யுனிக்கோட் கன்சார்டியத்தால் அங்கீகரிக்கப்பட்டு எழுத்துருவில் சேர்க்கப்பட்டது.
  • கூகுள் ஆர்ப்பாட்டமாக அறிமுகப்படுத்திய கூகுள் வேவ்  தகவல் பரிமாற்ற மென்பொருளின் கட்டமைப்புத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. தட்டச்சு செய்யும்போதே   தேடல் முடிவு களை பட்டிய லிடும் இன்ஸ்டன்ட் சர்ச் வசதியை கூகுள் அறிமுகம் செய்தது.
அக்டோபர்
  • மைக்ரோசாப்ட் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையிலான ஆன்லைன் ஆபிஸ் தொகுப்பான ஆபிஸ் 365-ஐ அறிமுகம் செய்தது.
  • ஆப்பிள் ஐபோன், கூகுள் ஆண்ட் ராய்ட் போனுக்குப் போட்டியாக மைக்ரோசாப்ட் விண்டோஸ் மொபைல் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய மொபைலை சாம்சங், ஹெச்டிசி நிறுவனங்கள் மூலமாக வெளியிட்டது.
நவம்பர்
  • சீனா உலகின் அதிவேக கணினி தயாங்கி-1ஏ சூப்பர் கம்ப்யூட்டரைத் தயாரித்தது.



  • செல்போன் எண்ணை மாற்றாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக் கொள்ளும் மொபைல் நெம்பர் போர்ட்டபிலிட்டி (MNP) சேவை முதன் முறையாக  இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில்  அறிமுகமானது.

  • விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்கத் தூதரகங்களின்  தகவல் பரிமாற்ற கேபிள் ரகசியங்களை வெளியிட்டது.  இது அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டியது.
டிசம்பர்
  • அமெரிக்காவின் நெருக்குதலால் பேபால், அமெசான் தளங்கள் விக்கிலீக்சுக்கான சேவையை நிறுத்தின. அதனைத் தொடர்ந்து விக்கி லீக்ஸ் அதிபர் ஜூலியன் அஸெஞ்ச் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய் யப்பட்டார். விக்கிலீக்ஸ் தளத்தை முடக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. பின் னர் அஸெஞ்ச் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.



  • கூகுளுடனான மோதலின் உச்சகட்டமாக பேஸ்புக் இமெயில் சேவையை வழங்கப்போவதாக அறிவித்தது.

  • கூகுள் எர்த் மூலம் உலகின் மூலை முடுக்கெல்லாம் காட்டிய கூகுள் அடுத்ததாக மனித உடலமைப்பை முப்பரிமாணத்தில் பார்க்க  உதவும் கூகுள் பாடி பிரௌசர் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியது. இது வெப் ஜிஎல் (Web GL) என்ற தொழில் நுட்பத்தில் இயங்குகிறது. இதனைப் பார்க்க கூகுள் குரோம் பீட்டா, பயர்பாக்ஸ் 4 பீட்டா பிரளெசர்க்ளை பரிந்துரைக்கிறது. http://bodybrowser.googlelabs.com/
  • கூகுள் இணைய வழியில் இயங்கும் கிளவுட் கம்ப்யூட்டிங் அடிப்படையிலான குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிஆர்-48   (Chrome OS CR-48 Netbook)  ஐ டிசம்பர் 7ல் அறிமுகம் செய்தது.
  • ஓப்பரா பிரௌசரின் 11ஆம் பதிப்பு வெளியானது.
    http://www.opera.com/browser/download/
Related Posts with Thumbnails

விருப்ப வாசகத்துடன் ஸ்கிரீன் சேவர் வேண்டுமா?


மொபைல் போன்களில் அழகிய ஸ்கிரீன் சேவர்களை நாம் பயன்படுத்துவோம். அதில் நமது பெயரையோ, நமக்‌குப் பிடித்தவர் பெயரையோ, பிடித்த வாசகத்தையோ பயன்படுத்துவதற்கு வாய்ப்பின்றி இருப்போம். அதுவே போட்டோ‌‌ஷாப் போன்ற மென்பொருள் தெரிந்தவராக இருந்தால் கொஞ்சம் நேரம் செலவழித்து உருவாக்கி பயன்படு்த்தலாம். ஆனால் இதுபோன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக வந்துள்ளது Reddodo என்ற இணையதளம். இதில் 60க்கும் மேற்பட்ட தயார் நிலையிலான பல்வேறு ஸ்கிரீன் சேவர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் நமக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்தால் எடிட் பக்கத்திற்கு செல்லும். அங்கு முதலில் நமது மொபைல் மாடல் அல்லது 240x320, 176x220, 176x208, 176x144, 128x160, 128x128 ஆகிய ஸ்கிரீன் அளவுகளில் தேவையானதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும். அதன்பிறகு நாம் விரும்பும் பெயரையோ வாசகத்தையோ டைப் செய்து பிரிவியூ கொடுத்தால் அருகில் நம்முடைய வாசகத்துடன் படம் தெரியும். ஸ்கிரீன் சேவராகவோ அல்லது வால்பேப்பராகவோ சேவ் செய்வதற்கு அ‌ருகிலேயே ஆப்சன் உள்ளது. பிரிவியூ ‌விண்டோவில் ரைட் கிளிக் செய்து படத்தை அப்படியே காப்பி செய்து பயன்படுத்தலாம் அல்லது  வேப் வசதியிருந்தால் நேரடியாக மொபைல் போனுக்கே அனுப்பிவிடமுடியும்.
இணையதள முகவரி்‌ - http://reddodo.com/ Related Posts with Thumbnails

விடுதலை! விடுதலை!!

பிடிக்காத செல்பேசி நெட்வொர்க்கில் வாடிக்கையாளர்களுக்காகவும், நண்பர்களுக்காகவும் செல்பேசி எண்ணை மாற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருப்போருக்கு ஜனவரி 1, 2010 முதல் கிடைக்கப்போகிறது சுதந்திரம். இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்துவரும் செல்பேசி சேவையில் ஒரு புதிய மைல்கல் என்று இதனைக் குறிப்பிடலாம். பல மாதங்களாக பல்வேறு தடை, தாமதங்களுக்குப் பிறகு இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டம் மொபைல் நெம்பர் போர்ட்டபிலிட்டி ( Mobile Number Portability) சுருக்கமாக MNP என்று அழைக்கப்படுகிறது. வாடிக்கையாளருக்கு அனுகூலமான இத்திட்டத்தை செயல்படுத்தி ஒருங்கிணைப்பதற்காக நாடு முழுவதும் சேவையாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்கான தகுதி, விதிமுறைகளை டிராய் வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் யார் பயன்பெறலாம்?
எண்ணை மாற்றாமல் வேறு பிடித்த செல்பேசி நிறுவனத்திற்கு மாற்ற விரும்புபவர்கள், வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்கு மாறுபவர்கள் (இருவேறு ஊர்களிலும் அனுமதி பெற்ற ஒரே MNP சேவை நிறுவனமாக இருப்பது அவசியம்)
தகுதி:
செல்பேசி இணைப்பு வாங்கி 90 நாள்கள் ஆகியிருக்கவேண்டும்.
ஏற்கனவே வேறொரு செல்பேசி நிறுவனத்திடமிருந்து மாறியவராக இருந்தால், அப்படி மாறி குறைந்தபட்சம் 90 நாள்கள் ஆகியிருக்கவேண்டும்.
செல்பேசி நிறுவனத்தை மாற்ற என்ன செய்யவேண்டும்?
முதலின் உங்கள் செல்பேசி சேவையாளரைத் தொடர்பு கொண்டு சேவை நிறுவனத்தை மாற்ற விரும்புவதாக தகவல் தெரிவிக்கவேண்டும். அதன்பின் அவர்கள் உங்களுக்கான அல்பாநியுமெரிக் (எண், எழுத்து கலந்த) கோட் ஒன்றைத் தருவார்கள். அதன்பின் இணைப்பை மாற்றுவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து சேவையாளரை மாற்றித்தரும் நிறுவனத்திடம் வழங்கவேண்டும். சேவையை வழங்கும் நிறுவனம் உங்களுடைய படிவத்தை ஆராய்ந்து பிறகு இணைப்பை மாற்றித்தரும். அதற்காக ரூ.20 முதல் ரூ.100 வரை அதற்கான சேவைக் கட்டணமாக கொடுக்கவேண்டும்.
அதன்பிறகு எண்ணை வேறு நிறுவனத்திற்கு மாற்றித் தருவதற்கு அதிகபட்சம் நான்கு நாட்கள் வரை ஆகும். (ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் ஒரு சில பகுதிகளில் மட்டும அதிகபட்சம் 12 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.) அப்படி மாற்றப்படும் நேரத்தில் அதிகபட்சம் இரண்டு மணி நேரம் வரை செல்பேசி இணைப்பு துண்டிக்கப்படும்.
பிரிபெய்ட் வாடிக்கையாளர்களாக இருந்தால் கடைசியாக மீதம் இருந்த தொகை காலாவதியாகிவிடும்.
போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சேவையை மாற்றும் நாள்வரையிலான பில்தொகை முழுவதும் செலுத்தப்பட்டிருக்கவேண்டும். Related Posts with Thumbnails

wibiya widget