தொழில்நுட்ப உலகில் நாம் அறிந்ததும் அறியாததும்


கணினி, கைபேசி, டிஜிட்டல் கடிகாரம் எனப் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களைப் பற்றி நாம் அறிந்து கொண்டிருப்பதில்லை.கணினியின் விசைப்பலகையில் f மற்றும் j எழுத்துக்கள் உள்ள கீகளில் மட்டும் சிறு மேடு போன்ற அமைப்பு ஏன் தரப்பட்டுள்ளது? குவெர்ட்டி கீபோர்டு என்று ஏன் குறிப்பிடப்படுகிறது? விண்டோஸ் எக்ஸ்பியில் புகழ்பெற்ற பசுமை சமவெளியும் நீலவானமும் கொண்ட பின்புலக் காட்சியை உருவாக்கியது யார்? இதுபோன்ற அன்றாடப் பயன்பாட்டில் இருக்கக்கூடிய பல வியப்பிற்குரிய விஷயங்களுக்கான பின்னணிக் காரணத்தை அறிந்து கொள்வதும் அவசியமானதுதானே!

குவெர்ட்டி கீபோர்டு


கணினிகள் கண்டுபிடிக்காத அக்காலத்தில் தட்டச்சு இயந்திரத்தில் சுத்தி போன்றிருக்கும் டைப்ரைட்டர் கீகளை வழக்கமான A, B, C, D என்ற அகர வரிசையில் அமைத்துத் தட்டும்போது ஒன்றுக்கொன்று உரசி இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனை இயந்திரத்திற்கு ஏற்ற முறையில் 1872 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் ஷோல்ஸ் என்பவர் மாற்றியமைத்தார். அவர் அமைத்த வரிசையின் தொடக்க எழுத்துக்கள் Q, W, E, R, T, Y ஆகும். இந்த எழுத்துக்களை இணைத்தே QWERTY கீபேட் என்று அழைக்கப்படுகிறது. கணினி உருவாக்கப்பட்ட பிறகும் இந்த வகை  கீபேட் அமைப்பே உலக அளவில் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளது.

கீபோர்டில் F J கீகளின் முக்கியத்துவம்.


தட்டச்சு பயிற்சியில் அடிப்படைப் பாடமாக அமைவது இந்த f மற்றும் j எழுத்துக்களை உபயோகிப்பதுதான். இடது கையின் ஆள்காட்டி விரல் f எழுத்தையும், வலது கை ஆள்காட்டி விரல் j என்ற எழுத்தையும் முதல் எழுத்தாக கொண்டு பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கீபோர்டிலுள்ள எழுத்துக்களை அடையாளம் காண இந்த இரு எழுத்துக்களை அடையாளம் கண்டு கொண்டாலே போதும். மற்ற எழுத்துக்கள் உள்ள இடங்களை விரைந்து உணர்ந்து கொள்வர் என்பதற்காகவே அனைத்து தட்டச்சு விசைப்பலகைகளிலும் இவ்விரு எழுத்துக்களிலும் மேடு போன்ற அமைப்பு தரப்பட்டுள்ளது.

விண்டோஸ் எக்ஸ்பி திரைக்காட்சி

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்திய அனைவருக்கும் மறக்க முடியாதது அதன் திரைக்காட்சிதான். பசுமைப் புல்வெளியும், நீலவானமும் கொண்ட அப்படத்தை எடுத்தது நேஷனல் ஜியோகிராபியின் புகைப்படக்காரர் சார்லஸ் ஓ ரியர் என்பவர்தான்.1996ஆம் ஆண்டு தன் மனைவியை காண்பதற்காக வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சோனோமோ என்ற இடத்தில் இக்காட்சியை படமெடுத்தார். பின்னர், மைக்ரோசாப்டின் புகைப்படம் மற்றும் உரிம சேவைகளை வழங்கும் கோர்பிஸ் என்ற துணை நிறுவனத்திடம் அளித்தார். அப்படம் பெரும்பான்மை மைக்ரோசாப்ட் நிர்வாகிகளால் கவரப்பட்டு 2001ஆம் ஆண்டு வெளியான எக்ஸ்பி இயங்குதளத்தின் அதிகாரப்பூர்வ வால்பேப்பராக ‘பிலிஸ்’ என்ற பெயரில் இடம்பெற்றது.

கார்னிங் கொரில்லா கிளாஸ்

பெரும்பாலான முன்னணி மொபைல், டேப்ளட் போன்ற சாதனங்களின் திரைக்கு கவசமாக இருப்பது கார்னிங் நிறுவனத்தின் கொரில்லா கிளாஸ் என்ற கண்ணாடியாகும். ரேஸ் கார்களுக்கு உடையாத உறுதியான கண்ணாடிகளை உருவாக்கிவந்த கார்னிங் நிறுவனத்திடம் ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோனுக்கான மேற்புறக் கண்ணாடிகளை உருவாக்கித்தரக் கோரியது. அதன்பிறகு, அந்நிறுவனம் மொபைல் சாதனங்களுக்கு ஏற்ப மெல்லியதாகவும், உறுதிமிக்கதாகவும், மற்றும் கீறல் விழாத வகையிலும் பல்வேறு இரசாயனங்களைப் பயன்படுத்தி இக்கண்ணாடிகளை உருவாக்கி வருகிறது.“கொரில்லாவைப் போன்ற பலமும் கடினத்தன்மையும் கொண்டிருப்பது” என்ற பொருளில் கொரில்லா கிளாஸ் என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
. Related Posts with Thumbnails

ஸ்மார்ட்டாக இருக்க வேண்டியது நீங்களா? உங்கள் ஃபோனா?
இன்றைய நிலையில் கையடக்க கணினியாக, குறிப்பெடுக்க உதவும் குறிப்பேடாக, தனிப்பட்ட விபரங்களைப் பதிந்து வைக்கும் டைரியாக, அன்றாட வேலைகளை திட்டமிட உதவும் நாட்குறிப்பாக, பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் கணக்காளனாக, உறவு, நட்பு, வணிகத் தொடர்புகளுக்கு பாலமாக எனப் பல நிலைகளில் நமக்கு பேருதவியாக மாறி இருப்பது ஸ்மார்ட் போன்கள்.ஆசைக்கு ஆண்ட்ராய்ட் போன் வாங்கி உரையாடவும், பாடல் கேட்கவும், கேம்ஸ் விளையாடவும், வீடியோ பார்க்கவும் மட்டுமே பயன்படுத்தும் தொடக்க நிலை பயனாளர்கள் இக்கட்டுரையைப் பற்றி பெரிதாகக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், அடுத்த கட்ட ஆண்ட்ராய்ட் பயன்பாட்டிற்குள் அதாவது, ஜிமெயில், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற இணையம் சார்ந்த பயன்பாட்டிற்குள் நீங்கள் நுழையும்போது உங்களைப் பாதுகாத்துக் கொள்ள இங்கு கூறப்படும் தகவல் பாதுகாப்பு குறித்த யோசனைகள் பயனளிக்கக் கூடும்.

ஃபோன் பழுதாகும்போது..

ஏதேனும் காரணத்தால் உங்கள் ஃபோனில் கோளாறு ஏற்பட்டால் நன்கு அறிமுகமான அல்லது அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மட்டுமே சர்வீஸ் செய்யவும். இம்மையங்களில் ஃபோனைக் கொடுக்கும்போது சிம்கார்டு மற்றும் மெமரி கார்டை நீங்கள் பத்திரமாக எடுத்துவைத்துக் கொண்டு பிறகு கொடுங்கள்.

சிம்கார்டு குளோனிங்

புதிதாக சிம்கார்டு குளோனிங் என்ற தொழில்நுட்பத்தை ஹேக்கர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். உங்கள் சிம்கார்டில் உள்ள தகவல்களை திருடி டூப்ளிகேட் சிம்கார்டு உருவாக்கி அதன் மூலம் கொள்ளையடிப்பதுதான் அவர்களது நோக்கம். இது எப்படி என்றால் உங்கள் வங்கிக் கணக்கு, கேஸ் புக்கிங், மின்னஞ்சல், வாட்ஸ்அப் எனப் பலவற்றிற்கும் ஒரு எண்ணையே பயன்படுத்துபவராக இருந்தால் எளிதாக டூப்ளிகேட் சிம் பயன்படுத்தி பாஸ்வேர்டு உள்ளிட்ட அனைத்து கணக்கு விபரங்களையும் இந்தத் தொழில்நுட்பத் திருடர்களால் பெற்றுவிட இயலும்.

பாஸ்வேர்டு அறியும் வழிகள்

இது எப்படி சாத்தியம் என்றால், உங்கள் எண்ணில் இருந்து உங்களைப் போன்றே வங்கியில் பேசி தகவல்களை அறிவது, அத்துடன், எஸ்எம்எஸ் அல்லது போன் புக்கில் நீங்கள் மறக்காமல் இருப்பதற்காக பதிந்துவைத்திருக்கும் பாஸ்வேர்டு மற்றும் வங்கிப் பின் (PIN Number) எண்ணை அறியலாம்.அல்லது உங்கள் மின்னஞ்சல் மற்றும் வங்கிக் கணக்கிற்கு இரண்டு அடுக்கு பாதுகாப்பாக பாஸ்வேர்டு உடன் உங்கள் மொபைல் எண்ணும் வழங்கப்பட்டிருக்கும். வேறு கணினி அல்லது மொபைல் மூலமாக உங்கள் அக்கவுண்ட்டில் உள் நுழையும்போதோ, பாஸ்வேர்டு மறந்துவிட்டாலோ அல்லது மாற்றவேண்டும் என்றாலோ நம்முடைய பிரத்யேக மொபைல் எண்ணுக்குத்தான் குறுஞ்செய்தியாக தகவல் அனுப்பப்படும்.அப்போது வழங்கப்படும் தற்காலிக பாஸ்வேர்டு (One Time Password) டூப்ளிகேட் சிம்கார்டுக்கும் வரும் என்பதால் இதன் மூலமாகவும் வங்கிக் கணக்கு மற்றும் மின்னஞ்சல், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற கணக்குகளை அணுக முடியும். எனவே அறிமுகமில்லாதவரிடம் சிம்கார்டுடன் ஃபோனைப் பயன்படுத்தத்தராதீர்.

பேக்கப் அவசியம்

ஃபோன் செயல்படும் நிலையில் இருந்தால் சர்வீஸ் கொடுப்பதற்கு முன்பாக  ஃபோன்புக், எஸ்எம்எஸ் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் பேக்கப் செய்துவிட்டு, ஃபோனை ரீசெட் அல்லது ஃபார்மெட் செய்துவிட்டுக் கொடுக்கவும்.

பாஸ்வேர்டை மாற்றுங்கள்

உங்கள் ஃபோன் இயங்காத நிலையில் இருந்தால் சர்வீஸ் கொடுப்பதற்கு முன்பாக ஜிமெயில், ஃபேஸ்புக் மற்றும் பிற அக்கவுண்ட் பாஸ்வேர்டுகளை கணினி மூலமாக மாற்றியமைத்துவிட்டு கொடுங்கள்.

முன்னெச்சரிக்கை தேவை

மொபைல் கை தவறி கீழே விழுவது, எதிர்பாராதவிதமாக ஹேங் ஆவது ஆகியவை எவராலும் தவிர்க்க இயலாத பிரச்சனைகள். எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் விதத்தில் நாம் தயாராக இருப்பதுதான் புத்திசாலித்தனம். இனி, முன்னெச்சரிக்கையாக எப்படி மொபைலைப் பயன்படுத்துவது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.நம் அன்றாட நடவடிக்கைகள் அனைத்தும் மொபைல் அல்லது டேப்ளட் மூலமாகத்தான் என்றால், நிச்சயம் வாரம் ஒருமுறையாவது அனைத்து தகவல்களையும் பேக்கப் செய்ய வேண்டும்.

மெமரி கார்டு பேக்கப்

போன் உடைந்தாலோ, தண்ணீரில் விழுந்தாலோ, பழுதானாலோ மெமரி கார்டு மற்றும் சிம் கார்டுகள் சேதமடைவது குறைவுதான். எனவே, உங்கள் மொபைலின் முதல் பேக்கப் இடமாக மெமரிகார்டை பயன்படுத்துங்கள். கேமரா, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், மின்னஞ்சல், டாகுமெண்ட்கள் உள்ளிட்ட தனிப்பட்ட மற்றும் அலுவலகக் கோப்புகளை ஃபோன் மெமரியில் பதியாமல் மெமரி கார்டில் நேரடியாக பதியும்படியாக செட்டிங் அமைத்திடுங்கள். அப்ளிகேஷன்களை பதிவதற்கு மட்டும் ஃபோன் மெமரியை உபயோகித்துக் கொள்ளுங்கள்.அனைத்து தகவல்களும் மெமரி கார்டிற்கு மாற்றுவதற்கு தகுந்ததாக உங்கள் மெமரி கார்டில் இடவசதி இருக்கவேண்டும். எனவே, உங்கள் ஃபோன் கையாளும் உச்சபட்ச மெமரி கார்டு திறனிற்கு உட்பட்ட கொள்ளளவு கொண்டதாகவும், வேகமான டேட்டா பரிமாற்றத்திற்கு ஏற்ற கிளாஸ் 10 வகை கொண்ட மெமரி கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தவேண்டும். அப்போதுதான் ஃபோன் ஹேங் ஆகாமலும், அதிகமான கோப்புகளை எளிதாக கடத்தவும் உதவும்.இரண்டாவது இடமாக உங்கள் கணினி அல்லது மின்னஞ்சல் சேமிப்பகத்தைப் பயன்படுத்தவும். ஃபோன் தொலைந்து போக நேரிட்டால் இவைதான் நமக்கு உதவும். ஃபோன் தொலைந்தால் உடனடியாக சிம்கார்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அதனை பிளாக் செய்யவேண்டும். அத்துடன் முன்பு குறிப்பிட்டதுபோல பாஸ்வேர்டுகளையும் உடனடியாக மாற்றவேண்டும்.
http://epaper.theekkathir.org/epapers/1/1/2016/6/15/page_8.jpg
. Related Posts with Thumbnails

wibiya widget