சோசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கணினியுகமும் கழுத்துவலியும்


கணினியில் தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கு கழுத்து வலி மற்றும் பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக சமீபத்தில் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கணினிகளால் நாளுக்கு நாள் ஏற்படும் பல்வேறு விதமான புதிய நோய்கள் குறித்த தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அப்படிப்பட்டதொரு தகவல்தான் சப்தர்ஜங் மருத்துவ மைய மருத்துவர்களின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இவ்வாய்வு சப்தர்ஜங் நகரைச் சேர்ந்த கணினித் துறை பணியாளர்கள் மத்தியில் எடுக்கப்பட்டது. இதன் முடிவின்படி 80 சதவீதம் பேர் கண்பார்வை மற்றும் கழுத்து வலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.
76.5 சதவீதம் பேர் கழுத்துவலியால் பாதிக்கப்பட்டிருந்தனர். சாதாரணமாக மனிதர்களின் கண்கள் சுமார் ஆறு மீட்டர் தொலைவிலுள்ள பொருட்களையே எளிதில் அடையாளம் காணும் தன்மை கொண்டது. ஆனால் கணினியை நாம் ஒரு சில அடி தூரத்திலிருந்தே பார்க்கிறோம். இதனால் கண் தசை நார்களுக்கு மிகுந்த வலியும், சோர்வும் ஏற்படுகிறது. மேலும் இவ்வாய்வின் மூலம் அதிகமாக கணினியை பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் நீர்வடிதல், கண் வலி, கண் உறுத்தல், சிவந்து போதல், கண் பார்வை மங்குதல், தலைவலி என்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கிறது.
தொடர்ந்து அமர்ந்தபடியே வேலை செய்வதால் முதுகு மற்றும் தண்டுவட பாதிப்புகளும் அதைத் தொடர்ந்து கழுத்து வலியும் வருகிறது. இத்தகைய வலிகள் குறித்த ஆய்வின்படி கழுத்து வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 48.6 சதவீதமும், தோள்பட்டை வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 15.7 சதவீதமும், முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 35.6 சதவீதமும், கை, விரல், மணிக்கட்டு பகுதிகளில் அயற்சியுடன் கூடிய வலியால் 23.1 சதவீதம் பேர் அவதிப்பட்டதாக தெரிவிக்கிறது. மேலும் கணினி அலுவலகங்களில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் மூலமாக ஆராய்ந்ததில் கணினி பயன்படுத்துபவர்கள் சரியான தூரத்தில், உயரத்தில், சரியான நாற்காலியில் உட்காரததும் முதுகுவலி மற்றும் தலைவலிக்கு காரணம் என்று தெரியவந்தது.
அதேபோல அதிக நேரம் கணினியின் முன் அமர்வதால் ஒருவித மன இறுக்கத்திற்கு ஆளாவதும், அதிக ஒளி உமிழும் கணினித் திரைகள், கணினி திரைக்கு நேர் எதிர்திசையில் விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது, நாற்காலிகள் நேராக, சீராக இல்லாமலிருப்பது, பயன்படுத்துவதற்கு கடினமான விசைகளைக் கொண்ட கீபோர்டுகள் ஆகியவையே கண், கை, கால் முதுகு மற்றும் கழுத்து வலிகளுக்கு காரணமாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்போது 18 லட்சத்திற்கும் அதிகமான கணினிகள் புழக்கத்தில் உள்ளன. சராசரியாக 1000 பேருக்கு 6 கணினி என்ற விகிதத்தில் தற்போது உள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயரும். அப்போது கணினி சார்ந்த பாதிப்புகளால் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, காற்றோட்டமான அறையில், தெளிவான, சரியான வெளிச்சம், அளவான ஒளியுடன், ஒரு அடி தூரத்தில் இருக்கும்படியான கணினித்திரையும், பயன்படுத்துவதற்கு எளிதான கீபோர்டு மற்றும் மௌஸ், முதுகுப்பகுதி ஒரே நேர்கோட்டில் இருக்கும்படியாக சாய்வதற்கு ஏற்ற நாற்காலியையும் பயன்படுத்த வேண்டும். அதே போல தொடர்ந்து கணினி முன்பாகவே அமர்ந்திருக்காமல் சற்றே ஓய்வெடுப்பதும், அடிக்கடி இமைகளை மூடித்திறப்பதும் நல்ல பலன் தரும் என்கின்றனர் மருத்துவர்கள். Related Posts with Thumbnails

தேர்தல் நடைமுறைகள் - 03

  • மாவட்டத் தேர்தல் அதிகாரி தேர்தல் அதிகாரியிடமிருந்து அனுமதி பெறாமல் ஊர் தியை தேர்தல் பணிக்காக பயன்படுத்த முடியுமா?
    முடியாது. இந்த மாதிரி ஊர்திகள் அங்கீகரிக்கப்படாதவைகளாகவே கொள்ளப்பட்டு இந்திய தண்டனை சட்டப்பிரிவின் ஐஓ எ பிரிவின் கீழ் தண்டனைப்பெறத் தக்கதாகி விடும். பிரச்சார பணியிலிருந்து விலக்கப் படும்.
  • சம்பந்தப்பட்ட கட்சி அல்லது வேட்பாள ரின் சுவரொட்டி, விளம்பர அட்டை, பதாகை, வேட்பாளரின் கொடி போன்ற வற்றை ஊர்வலத்தின்போதும், வேட்பாள ரின் ஊர்திகளில் கட்டிச்செல்லும்போதும் ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?
    விளம்பர சுவரொட்டி, அட்டை, பதாகை போன்றவற்றை ஊர்வலத்தின்போது வேட்பாளரின் ஊர்திகளில் வைத்துக் கொண்டு செல்லலாம்.
  • பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தப்படும் ஊர்திகளின் வெளிப்புறங்களில் புதியவற்றை இணைப்பதற்கும், மாற்றி அமைப்பதற்கும் அனுமதிக்கப்படுமா?
    ஒலிபெருக்கி போன்ற வெளிப்புற இணைப்புகளைப் பொருத்துவதற்கும், மாற்று அமைப்பை ஏற்படுத்துவதற்கும் மோட்டார் வாகனச் சட்டம் விதிமுறைக்கு ஏற்பவும், உள் ளூர் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்பவும் அனும திக்கப்படும். வீடியோ ரதம் போன்ற சிறப்பு பிரச்சார வாகனங்கள் மாற்றி அமைக்கப்பட்ட ஊர்திகள் போன்றவற்றிற்கு உரிய அதிகாரி யிடமிருந்து தேவையான முன் அனுமதியைப் பெற்ற பிறகு பயன்படுத்தலாம்.
  • கட்சியோ வேட்பாளரோ தற்காலிக அலு வலகங்களை அமைத்து செயல்படுவதற்கு நிபந்தனைகள் அல்லது வழிகாட்டு நெறி முறைகள் ஏதேனும் உண்டா?
    உண்டு. இந்த மாதிரி அலுவலகங்கள் தனியார் அல்லது பொது இடங்களை ஆக் கிரமித்து அமைக்கப்படக் கூடாது. மத சம்பந் தப்பட்ட இடங்களிலேயோ அல்லது அதன் தொடர்பாக வளாகங்கள், கல்வி நிலையங்கள் அல்லது மருத்துவ மனைகளை ஒட்டிய இடங்கள் தற்போது இருக்கும் வாக்குச் சாவடிக்கு 200 மீட்டருக்கு உட்பட்ட இடங்கள் ஆகியவற்றில் இவை அமைக்கப்படக் கூடாது. மேலும் இந்த அலுவலகங்களில் ஒரே ஒரு கட்சிக் கொடி, கட்சியின் சின்னம், புகைப் படங்களுடன் கூடிய பதாகை போன்ற வற்றைத்தான் காட்சிக்காக வைக்கலாம். இந்த அலுவலகங்களில் பயன்படுத்தப்படும் பதாகையின் அளவு 40ஓ30 மிகாமல் இருக்க வேண்டும். எனினும் இந்த அளவு உள்ளூர் விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டும். உள்ளூர் விதிமுறைகளின்படி பதாகை அல்லதுவிளம்பரத் தட்டி போன்றவற்றின் அளவு குறைவாக இருக்க வேண்டுமென்றால், இந்த விதிமுறைகளே நடைமுறைப்படுத்தப்படும்.
  • பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் போன் றவற்றை எதுவரை நடத்தலாம்?
    வாக்குப்பதிவு முடிவடைய நிர்ண யிக்கப்பட்டு இருக்கும் நேரத்துடன் முடிவடை யும் 48 மணி நேரம் முன்பு வரை கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தலாம்.
  • பிரச்சார நேரம் முடிவடைந்த பின், அர சியல் கட்சி பிரமுகர்கள் அந்தத் தொகுதியில் இருப்பது குறித்து ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?
    உண்டு. அந்தத் தொகுதியில் வாக்காளராக இல் லாது வெளியிடங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்றவர்கள் பிரச்சார நேரம் முடிவடைந்த பின் அந்தத் தொகுதியில் தொடர்ந்து இருக்கக் கூடாது. இத்தகையவர்கள் பிரச்சாரம் முடி வடைந்த உடனேயே அந்தத் தொகுதி யிலிருந்து வெளியே சென்றுவிட வேண்டும்.
  • ஒரு மாநிலத்தில் தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் ஒரு அரசியல் கட்சியின் நிர்வாகிக்கும் இந்த மாதிரி நிபந்தனைகள் பொருந்துமா?
    ஆமாம். ஆனால் நாடாளுமன்ற மக்களவை / சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடைபெறும்போது, ஒரு மாநிலத்தின் பொறுப்பாளராக இருக்கும் கட்சி நிர்வாகியைப் பொறுத்தவரை இந்த நிபந்தனை வலி யுறுத்தப்படுவதில்லை. இத்தகைய நிர்வாகிகள், மாநிலத்தின் தலைமையகத்தில் தாங்கள் தங்கியிருக்கும் இடத்தை அறிவிக்க வேண்டும். இந்தக் குறிப்பிட்ட கால அவ காசத்தின்போது இவர்களது நடமாட்டம் அல் லது போக்குவரத்து அவர்களது கட்சி அலு வலகத்திற்கும், தங்கும் இடத்திற்கும் இடை யிலானதாகவே இருக்கும். மேற்கூறிய இந்தக் கட்டுப்பாடு மற்ற எல்லா அலுவலர்களுக்கும் எல்லாத் தேர்தல்களிலும் பொருந்தும்.
  • தேர்தல் நடைமுறையின்போது முக்கியமான நிகழ்வுகளை வீடியோ படமெடுக்க ஏதேனும் ஏற்பாடுகள் உண்டா?
    உண்டு. ஒரு தொகுதியில் நடைபெறும் அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் கலந்து கொள் ளும் பொதுக்கூட்டங்கள், உரையாற்றும் நிகழ் வுகள், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றை பதிவு செய்யவும் வீடியோ படமெடுக்கவும் வீடி யோ குழுக்கள் அமைக்கப்படும்.
  • பிரச்சாரத்தின்போது தொப்பி, முகமூடி, துண்டு, வண்ணக் கைக்குட்டைகள் போன் றவற்றை அணிவது அனுமதிக்கப்பட்டுள்ளதா?
    ஆமாம். அனுமதிக்கப்பட்டுள்ளது. எனி னும், சேலை, சட்டை போன்ற முக்கிய ஆடை களை கட்சியோ வேட்பாளரோ வழங்குவதும் விநியோகிப்பதும் அனுமதிக்கப்படமாட்டாது. இத்தகைய செயல்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கையூட்டாகக் கருதப்படும்.
  • ஒரு பகுதியில் அரசியல் கட்சி உதவி மையமொன்றை அமைக்க முடி யாவிட்டாலோ இல்லை விருப்பப்படா மலோ இருந்தால் வாக்காளர் பட்டிய லில் தனது பெயரை கண்டறிய வாக்கா ளருக்கு உதவி ஏதேனும் உண்டா?
    உண்டு. 3 அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகளைக் கொண்ட பகுதியில் ஒரு வளாகத்திலோ அல்லது கட்டிடத்திலோ வாக்காளர் உதவி மையம் எல்லோரும் தெரியும் வகையில் அமைக்கப்படும். மையத்தில் அலுவலர்கள் குழுவொன்று பணியாற்றும். அகர வரிசையில் தயாரிக் கப்பட்ட வாக்காளர் பட்டியல்கள் இருக்கும். வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய வரிசை எண். செல்ல வேண்டிய வாக்குச் சாவடி போன்ற விவரங்களை வாக்காளர் கள் தெரிந்து கொள்ளலாம். அரசியல் கட்சிகள் உதவி மையம் அமைக்க முடியாத நிலையை முன்கூட்டியே தெரிவித்தால் மாவட்ட தேர்தல் அதிகாரி இது போன்ற ஏற்பாடுகளை மற்ற இடங்களிலும் அமைப்பது குறித்து பரிசீலிப்பர்.
  • வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச் சாவடிக்கு அருகில் ஒரு வேட்பாளரே அல்லது அரசியல் கட்சிகளோ உதவி மையங்களை அமைப்பதற்கு வழிகாட்டி நெறிகள் ஏதேனும் உண்டா?
    உதவி மையத்தை வாக்குச் சாவடியில் 200 மீட்டருக்கு அப்பால் அமைக்கலாம். இம்மையத்தில் ஒரு மேசை 2 நாற்காலி தான் அனுமதிக்கப்படும். இதில் பணி யாற்றும் இருவருக்கும் நிழல் தரும் வகை யில் ஒரு குடையோ அல்லது தார்பாலின் அல்லது துணி கூரையோ இருக்கலாம். வேட்பாளர் பெயர், கட்சி தேர்தல் சின்னம் போன்றவற்றை எடுத்துக் காட்டும் 3/4/ 1/2 அளவிலான ஒரு பதாகையும் அனுமதிக் கப்படும் . இம்மையத்தில் கூட்டம் சேருவ தற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
  • தேர்தல் உதவி மையங்களை அமைக்க சம்பந்தப்பட்ட அரசு அலுவ லர் அல்லது உள்ளூர் அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியை பெற வேண்டியது அவசியமா?
    ஆம், இதைப் போன்ற உதவி மையங் களை அமைக்கும் முன் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் அல்லது உள்ளூர் அதிகாரி களின் எழுத்துப்பூர்வ அனுமதியை பெற வேண்டியது அவசியமாகும். காவல் துறையினரோ சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியோ கேட்கும் பொழுது காண்பிப் பதற்காக எழுத்துப்பூர்வ அனுமதி இம்மை யங்களில் பணியாற்றுபவர்களிடம் இருக்க வேண்டும்.
  • வெளியீடுகள், சுவரொட்டிகள் போன்றவற்றை அச்சிடுவதில் ஏதே னும் கட்டுப்பாடு உண்டா?
    உண்டு. தேர்தல் வெளியீடுகள் சுவரொட்டிகள் போன்ற வற்றில் அச்சிடு பவர்கள் மற்றும் வெளியிடுபவரின் பெயர் விலாசம் இல்லாமல் அச்சிடவோ வெளியிடவோ கூடாது.
  • வாக்குச்சாவடிக்கு அருகில் வாக்கு கோருவதை மேற்கொள்வதில் ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?
    உண்டு. வாக்கு பதிவு தினத்தன்று வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் வாக்கு கோருவது தடை செய்யப்பட்டுள்ளது.
  • வாக்குச்சாவடிக்கோ அல்லது அதற்கு அருகாமையிலோ ஆயுதம் தாங்கிச் செல்வதில் ஏதேனும் கட்டுப் பாடு உண்டா?
    ஆம், வாக்குப் பதிவு தினத்தன்று 1959 ஆம் ஆண்டு ஆயுதச்சட்டம் வரையறை செய்துள்ளபடி எத்தகைய ஆயுதத்தையும் எடுத்துக் கொண்டு வாக்குச்சாவடிக்கு அருகில் செல்ல ஒருவரும் அனுமதிக்கப் படமாட்டார்கள்.
Related Posts with Thumbnails

தேர்தல் நடைமுறைகள் - 02


  • வேட்பாளர் ஒருவர், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் முன்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியதோ அல்லது வாக்குறுதி அளிப்பதோ அவசியமா?
    ஆமாம்.
  • வேட்பாளர் ஒருவர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவோ அல்லது வாக்குறுதி அளிப்பதற்கோ தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் யார்?
    எந்த ஒரு குறிப்பிட்ட தேர்தலுக்கும் முதன்மையாக அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் அந்தத் தொகுதிக் கான தேர்தல் அதிகாரி மற்றும் துணைத் தலைவர் அதி காரியாவார். சிறையில் அடைக்கப்பட்ட அல்லது முன் னெச்சரிக்கை காவலில் வைக்கப்பட்டவர்களைப் பொ றுத்தவரை சிறை கண்காணிப்பு அலுவலரோ அல்லது காவல் முகாமின் தலைமை அலுவலரோ உறுதிமொழி செய்துவைக்க அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்கள் ஆவார்கள். உடல் நலக்குறைவாலோ அல்லது மற்ற காரணங்களுக்காகவோ மருத்துவமனையிலோ அல் லது வேறெங்கிலும் இருந்து சிகிச்சை பெற்று வருபவர் களைப் பொறுத்தவரை அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர்கள் அல்லது அவர் களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் இதற் கான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் வெளிநாட்டில் இருந்தால், இந்திய தூதர் அல்லது ஹை கமிஷனர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ராஜீய பிர திநிதி ஆகியோருக்கும் உறுதிமொழியை செய்துவைக்க அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
  • வேட்பாளர் எப்போது உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும்?
    வேட்பாளர் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்த உடனேயே நேரில் வந்து உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். எவ்வாறாகினும் வேட்பு மனுத் தாக்கல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நாளுக்கு முந்தைய நாளே உறுதிமொழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
  • போட்டியிடும் வேட்பாளர்களுக்கு யார் தேர்தல் சின்னங்களை ஒதுக்கீடு செய்கிறார்?
    தேர்தல் அதிகாரி.
  • ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னம் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது?
    ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னத்தைப் பெறுவதற்கு வேட்பாளர் தமது வேட்பு மனுவில், சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சியால் நிறுத்தப்படும் வேட் பாளர் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்தக் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகியிடமிருந்து தாம்தான் கட்சியால் நிறுத்தப் படும் வேட்பாளர் என்பதைத் தெரிவிக்கும் பி படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். பி படிவத்தில் தெரிவிக் கப்பட்டுள்ள அறிவிப்பை ஒப்புக் கொண்டு கட்சி அலு வலர் ஒப்பமிட்டுத்தர வேண்டும். இந்த அலுவலரின் மாதிரி கையொப்பம் எ படிவத்தின் மூலம் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அதி காரிக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். இந்த இரண்டு படிவங்களும், வேட்பு மனுத்தாக்கலுக்கான கடைசி தினத்தில் பிற்பகல் 3 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவல ரின் பெயர், கையொப்பம், ரப்பர் முத்திரை போன்ற வற்றுடன் A மற்றும் B படிவங்களை ஒரு வேட் பாளர் தாக்கல் செய்ய முடியுமா?
    முடியும். A மற்றும் B படிவங்களில் அரசியல் கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட அலுவல நிர்வாகி மையால் கையொப்பமிட்டு இருக்க வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் வேட்பாளர் அல்லது சுயேட்சை வேட்பாளர், ஒதுக்கப்படாத சின்னங்கள் பட்டியலில் கொடுக்கப்பட்டிருக்கும் சின்னங்களில் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ள முடியுமா?
    முடியும். இதற்கு இந்த வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ள சின்னங்களில் 3-தெரிவு செய்து அவற் றின் முன்னுரிமையைத் தெரிவித்து தமது வேட்பு மனுவில் குறிப்பிட வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியால் நிறுத்தப்படும் வேட்பாளர் A மற்றும் B படிவங்களை மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டியது அவசியமா?
    ஆமாம்.
  • தேர்தல் பணிக்காக வாகனங்களைப் பயன்படுத் துவதில் ஏதேனும் கட்டுப்பாடு உண்டா?
    கிடையாது. எத்தனை வாகனங்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். (இயந்திரத்தால் அல்லது மோட்டாரால் இயங்கும் ஊர்தி மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள்) ஆனால் இத்தகைய வாகனங்களை இயக்குவதற்கு தேர்தல் அதிகாரியின் முன் அனுமதியைப் பெற்று அந்த அனுமதிக் கடிதம் (அசல் கடிதம், நகல் அல்ல) வாகனங்களின் முன்புறக் கண்ணாடியில் தெளிவாகத் தெரியும்படி ஒட்டப்பட வேண் டும். இந்த ஒப்புதல் கடிதத்தில் ஊர்தியின் எண், எந்த வேட்பாளருக்காக பயன்படுத்தப்படுகிறதோ அவர் பெயர் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும். இதற்காகும் செலவு அந்த வேட்பாளரின் கணக்கில் கொள்ளப்படும்.
Related Posts with Thumbnails

தேர்தல் நடைமுறைகள் - 01

  • நாடாளுமன்ற மக்களவை அல்லது சட்டப்பேரவைத் தேர்தலில் ஒருவர் போட் டியிட குறைந்தபட்ச வயது என்னவாக இருக்க வேண்டும்?
    வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள் ளப்படும் நாளன்று ஒருவருக்கு வயது குறைந்தது 25 ஆண்டுகளாக இருக்க வேண்டும்.
  • ஒரு தொகுதியிலும் வாக்காளராகப் பதிவாக செய்து கொள்ளாத ஒருவர் தேர் தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது. தேர்தலில் போட்டியிட நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் வாக்காள ராகப் பதிவு செய்து கொண்டு இருக்க வேண்டும்.
  • ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் வாக்காளராக பதிவு செய்து கொண்டுள்ள ஒருவர் நாடாளுமன்றத் தேர் தலில் வேறொரு மாநிலத்தில் இருந்து போட்டியிட முடியுமா?
    முடியும். ஆனால், அஸாமின் தன்னாட்சி உரிமை பெற்ற மாவட்டங்கள், லட்சத் தீவுகள், சிக்கிம் ஆகிய தொகுதிகளிலிருந்து போட்டியிட முடியாது.
  • ஒருவர் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் ஷெட்யூல்டு வகுப்பு பிரிவைச் சேர்ந்தவராக இருந்தால், மற்றொரு மாநிலத்தில் ஷெட்யூல்டு வகுப்பினருக்காக ஒதுக் கப்பட்ட தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட முடியுமா?
    முடியும். ஒரு மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந் தவராக இருப்பவர் மற்றொரு மாநிலத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு பழங்குடியினருக்காக ஒதுக் கப்பட்ட தொகுதியிலிருந்து போட்டியிடலாமா? முடியும். ஆனால் லட்சத்தீவுகள், அஸாமின் தன் னாட்சி உரிமைபெற்ற மாவட்டங்கள் அஸாமின் பழங்குடியினர் பகுதிகளில் போட்டியிட முடியாது.
  • ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர், மற்றொரு மாநில சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து போட்டியிடலாமா? முடியாது. ஒரு மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர், மற்றொரு மாநில பழங்குடியின உறுப்பினர், அவர் வாக்காளராக உள்ள மாநில சட்டப்பேரவைக்கு பழங்குடியினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியிலிருந்து போட்டியிடலாமா?
    முடியாது.
  • ஷெட்யூல்டு வகுப்பையோ அல்லது பழங்குடியினர் சமூகத்தையோ சேர்ந்தவராக உள்ள ஒருவர் பொதுத் தொகுதியிலிருந்து போட்டியிட முடியுமா?
    முடியும்.
  • ஏதோ ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு இரண்டு ஆண்டு கால சிறைத் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது.
  • ஒருவேளை அந்த நபரின் மேல்முறையீடு பைசல் செய்யப்படாத நிலையில் அவர் ஜாமீனில் இருந்தால் தேர்தலில் போட்டியிட முடியுமா?
    முடியாது. ஒருவர் தண்டனை பெற்ற பிறகு ஜாமீனில் இருந் தாலும், அவரது மேல் முறையீடு பைசல் செய்யப் படாது இருந்தாலும் உச்சநீதி மன்றத்தின் முடிவுப்படி அவர் தேர்தலில் போட்டியிடத் தகுதி இல்லாதவர் ஆவார். ஆனால், அவர் தண்டனை நிறுத்திவைக் கப்பட்டு இருந்தால் அவர் போட்டியிட முடியும்.
  • ஒருவர் சிறையில் இருந்தால் தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
    முடியாது. இத்தகையவர்கள் சிறையில் இருந்தால் அவர்கள் எந்த தேர்தலிலும் வாக்களிக்க முடியாது. சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருந்தாலும் ஓரி டத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல் லப்படும்போது காவல்துறையின் சட்டப்பூர்வ காவ லில் இருந்தாலும் அவர் வாக்களிக்க முடியாது.
  • ஒருவர் ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில்
    வைக்கப்பட்டிருந்தால், தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
    முடியும். அவர் அஞ்சல் வாக்குச்சீட்டு மூலம் வாக்க ளிக்க முடியும்.
  • ஒவ்வொரு வேட்பாளரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
    ரூ.10 ஆயிரம்.
  • நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஷெட்யூல்டு வகுப்பினர் அல்லது பழங்குடியினருக்கு இந்தப் பிணையத் தொகையில் ஏதேனும் சலுகை அளிக்கப்படுமா?
    ஆமாம், இந்தத் தொகை ரூ.5 ஆயிரம் ஆகும்.
  • சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்குச் செலுத்த வேண்டிய பிணையத் தொகை எவ்வளவு?
    ரூ. 5 ஆயிரம்.
  • சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஷெட் யூல்டு வகுப்பு அல்லது பழங்குடி இனத்தைச் சேர்ந் தவருக்கு பிணையத் தொகையில் சலுகை ஏதேனும் உண்டா?
    ஆம், இது ரூ.2500 ஆக இருக்கும்.
  • ஒருவர் ஷெட்யூல்டு வகுப்பையோ அல்லது பழங் குடி இனத்தவராகவோ இருந்து பொதுத் தொகுதி யிலிருந்து போட்டியிட்டால், நாடாளுமன்றத் தேர் தலுக்கு அல்லது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு செலுத்த வேண்டிய பிணையத் தொகை எவ்வளவு?
    நாடாளுமன்றத் தொகுதிக்கு இந்தத் தொகை ரூ.5000, சட்டப்பேரவைத் தொகுதிக்கு ரூ.2500.
  • எந்த வேட்பாளர் பிணையத் தொகையை இழக் கிறார்?
    ஒரு தொகுதியில் பதிவான செல்லத்தக்க வாக்கு களில் 6ல் ஒரு பங்கை பெறத் தவறும் வேட்பாளர் பிணையத் தொகை இழப்பார்.
  • அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநில கட்சியின் வேட்பாளராக இருப்பவரின் வேட்பு மனுவை எத்தனைபேர் முன் மொழிய வேண்டும்?
    ஒருவர்போதும்,
  • ஒருவர் சுயேட்சை வேட்பாளராகவோ அல்லது பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியைத் சேர்ந்தவராகவோ இருந்தால் வேட்புமனு வை எத்தனை பேர் முன்மொழிய வேண்டும்?
    பத்து பேர்.
  • நாடாளுமன்றத்திற்கோ சட்டப்பேரவைக்கோ ஒருவர் விருப்பத்திற்கு ஏற்றவாறு எத்தனைத் தொகுதியிலிருந்தும் போட்டியிட முடியுமா?
    முடியாது. பொதுத்தேர்தலில் நாடாளுமன்றத் திற்கோ அல்லது சட்டப்பேரவைக்கோ 2க்கும் மேற் பட்ட தொகுதியிலிருந்தும் போட்டியிட முடியாது.
  • அதே சமயத்தில் இந்த இரு அவைகளில் ஏதேனும் ஒன்றிற்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கும் இதே கட்டுப்பாடு உண்டா?
    ஆமாம், தேர்தல் ஆணையம் ஒரே சமயத்தில் இடைத்தேர்தல்களை நடத்தினால், ஒரே அவைக்கு நடைபெறும் இடைத் தேர்தல்களில் இரண்டுக்கு மேற் பட்ட இடங்களில் ஒருவர் போட்டியிட முடியாது.
  • அதேசமயத்தில் இந்த இரு அவைகளில் ஏதேனும் ஒன்றிற்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டி யிடுவதற்கும் இதே கட்டுப்பாடு உண்டா?
    ஆமாம், தேர்தல் ஆணையம் ஒரே சமயத்தில் இடைத் தேர்தல்களை நடத்தினால், ஒரே அவைக்கு நடைபெறும் இடைத்தேர்தல்களில் இரண்டுக்கு மேற்பட்ட இடங்களில் ஒருவர் போட்டியிட முடி யாது.
  • ஒரே தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட எத்தனை வேட்புமனுக்களை தாக்கல் செய்ய முடியும்?
    நான்கு.
  • தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு ஒருவர் ஊர்வல மாகச் செல்லலாமா?
    முடியாது. தேர்தல் அதிகாரியின் அலுவலகத்தைச் சுற்றி 100 மீட்டர் தொலைவிற்குள் வர அதிகபட்சமாக மூன்று வாகனங்கள்தான் அனுமதிக்கப்படும். அதைப் போன்றே வேட்பாளரையும் சேர்த்து அதிகாரியின் அலுவலகத்திற்குள் அதிகபட்சமாக 5 பேர் தான் அனுமதிக்கப்படுவார்கள்.
  • தேர்தல் அதிகாரி வேட்பு மனுக்களை பரி சீலனைக்கு எடுத்துக் கொள்ளும்போது எத்தனை பேர் அனுமதிக்கப்படுவார்கள்?
    வேட்பாளர், அவருடைய தேர்தல் பிரதிநிதி, மனுவை முன்மொழிபவர் மற்றும் ஒருவர் (அவர் வழக் குரைஞராக இருக்கலாம்) வேட்பாளரால் எழுத்து மூலம் அங்கீகரிக்கப்பட்டவர் - வேட்புமனு பரிசீலனையின்போது இருக்கலாம்.
  • ஒரு வேட்பாளரின் வேட்புமனு மீது ஆட்சேபம் எடுத்துரைக்கப்பட்டால், இந்த ஆட்சேபத்திற்குப் பதில் அளிக்க வேட்பாளர் கால அவகாசம் கோரி னால், தேர்தல் அதிகாரி அவகாசம் தர முடியுமா?
    முடியும். தேர்தல் அதிகாரி ஆட்சேபணை மீதான விசாரணையை அடுத்த நாள் வரைக்கோ அல்லது அதற்கு அடுத்த நாள் வரைக்குமோ ஒத்திவைக்கலாம். ஆனால் அந்த கால அவகாசம், அன்று முற்பகல் 11 மணி வரைதான் அளிக்கப்படும். வேட்புமனுக்களை விலக்கிக் கொள்ளுவதற்கான நாள் அன்று பிற்பகல் 3 மணிக்கு முன், தேர்தல் அதிகாரி விசாரணையை முடிக்க வேண்டும்.
Related Posts with Thumbnails

60 ஆண்டு கால இந்திய பொருளாதார வரலாறு

Related Posts with Thumbnails

போட்டி நிகழ்ச்சிகளும், உளவியல் பாதிப்பும் - இரா. நந்தகுமார்

சிஞ்சினி சென்குப்தா, கொல்கத்தாவைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி. படிப்புடன் நடனத்திலும் ஈடுபாடு கொண்ட சிஞ்சினி பல்வேறு போட்டிகளில் பங்குகொண்டு பரிசுகளைக் குவித்திருக்கிறாள். நடனத்தின் மீதிருந்த அதீத ஆர்வத்தாலும், கொடுத்த புகழுhழும் நடனமும் அவளது வாழ்வின் ஒரு அங்கமாகிப் போனது. வாழ்வும் மகிழ்ச்சியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில்தான் திடீரென வீசியது ஒரு பெரும்புயல். அதன் அதிதீவிரத் தாக்குதல் சிஞ்சினியை தற்போது ஒரு மனநோயாளியாக மருத்துவமனையில் முடக்கிப்போட்டுள்ளது. மேடைகளில் பம்பரமாகச் சுழன்று ஆடிய கை, கால்கள் இப்போது அசைவற்றுக் கிடக்கின்றன. பேச்சும் வருவதில்லை. அப்படி என்னதான் நடந்ததது சிஞ்சினியின் வாழ்வில்?
'ரியாலிட்டி ஷோ' எனப்படும், தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும் போட்டி நிகழ்ச்சிகள் மக்களிடையே தற்போது வெகு பிரபலம். எப்பாடுபட்டாவது இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வெல்லவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். துவக்கத்தில் பொது அறிவுப் போட்டிகள் என்று ஆரம்பித்து பாட்டுப்போட்டி, நடனப்போட்டி என்று புதிய புதிய வடிவங்களில் இந்நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை மக்களிடையே இந்தளவுக்கு வரவேற்பு பெறக்காரணம் மிகுந்த ஆடம்பரமாக அவை நடத்தப்படுவதுதான். சினிமா பிரபலங்கள் வேறு நடுவர்களாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்று மேலும் விளம்பரங்களை நிகழ்ச்சிக்குத் தருகிறார்கள். போட்டியில் வெற்றிபெற்றால் கோடீஸ்வரர்களாகலாம் என்றும், தங்கத்திலேயே குளிக்கலாம் என்றும் தொலைக்காட்சிகள் அளிக்கும் விளம்பரங்களில் மயங்கி போட்டியாளர்களும் அதிகளவில் பங்கேற்கிறார்கள். விளைவாக, பங்கேற்பாளர்கள் ஆகிறார்களோ இல்லையோ, நிகழ்ச்சி நடத்துபவர்கள் எளிதாக பல கோடிகளுக்கு அதிபதிகளாகிவிடுகிறார்கள்.
இத்தகைய போட்டிகளில் எப்படியும் வெற்றிபெற்று பரிசுகளை வாங்கிவிடவேண்டும் என்ற தன்முனைப்பு மக்களுக்கு ஏற்படுவது என்பது இம்முதலாளித்துவ சமூக அமைப்பில் சாதாரணமானதுதான். ஆனால் உண்மையில் இதனை சாதாரணமானது என்று ஒதுக்கிவிடமுடியாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புடன் போட்டியில் கலந்து கொள்வதும், அதில் தோற்றுவிட்டால் நிலைகுலைந்து விடுவதும் இந்நிகழ்ச்சிகளில் சாதாரணமாக நாம் காணும் காட்சிகள் என்று கூறும் அவர்கள் என்பதுதான் ஆனால் உண்மையில் அவை மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள். யார் கண்டுகொள்கிறார்கள் இந்தக் கருத்துக்களை? தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
முதலில் வயது வந்தவர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டுவந்த இத்தகைய போட்டிகள் தற்போது சிறுவர், சிறுமிகளுக்காகவும் பிரத்யேகமாக நடத்தப்படுகின்றன. இங்குதான் நாம் சிஞ்சினி சென்குப்தாவை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். அப்பெண்ணும் இதுபோன்ற ஒரு போட்டியில் பங்கேற்கச் சென்றிருந்தாள். முதல் இரண்டு சுற்றுகளில் எளிதாக வெற்றி பெற்றவளுக்கு மூன்றாவது சுற்றில் வந்தது சோதனை. போட்டிக்கு நடுவர்களாக வந்திருந்த சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் சிஞ்சினியின் ஆட்டத்திறனை மதிப்பீடு செய்து அவளைப் போட்டியிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். அப்போது அவர்கள் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் சிஞ்சினியை கடுமையாக பாதித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டாள். முன்பே சொன்னவாறு அவளால் கை, கால்களை அசைக்க முடியவில்லை. முதலில் உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர், அங்கிருந்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிஞ்சினியை பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் மருத்துவமனையில் தற்போது சேர்த்துள்ளனர். மருத்துவர்களின் கூற்றுப்படி சிஞ்சினி ஒருவித நரம்புக்கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரியவந்துள்ளது. சிகிச்சை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்ற உள்ளுணர்வோடு பணம் சம்பாதிக்கும் வெறியும் சேர்ந்து மக்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது என்பது இதுபோன்ற சம்பவங்கள் மூலம் நிரூபணமாகிறது. ஒருபுறம் பெற்றோரின் இத்தகைய பேராசை, மறுபுறம் போட்டி நடுவர்களின் அதிமேதாவித்தனம் நிறைந்த விமர்சனங்கள் ஆகியவை சேர்ந்து குழந்தைகளைத் தாக்குகின்றன. இதனால் அவர்களுக்கு ஒருவித பயம் உருவாகி மன அழுத்தமும், மனரீதியான வேறுவகை பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
துள்ளித்திரிய வேண்டிய வயதில், தேவையற்ற சுமைகளைத் தந்து குழந்தைகளைத் துவளச்செய்யும் இதுபோன்ற நடவடிக்கைகள் இனிமேலும் தொடரக்கூடாது என்பதே சிஞ்சினி சென்குப்தாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம். Related Posts with Thumbnails

உணவு நெருக்கடியும் உலக நிலவரமும்... - இரா. நந்தகுமார்

"தென் அமெரிக்க நாடான ஹெய்ட்டியில் ஒரு மதிய உணவு நேரம்...
சார்லின் டூமாஸ் என்னும் 16 வயது ஏழைப்பெண்ணின் வீடு. குடும்பத்தினர் உணவு உண்ணத் தயாராகிறார்கள். உணவும் பரிமாறத் தயாராக இருக்கிறது. நீங்கள் நினைப்பது போல் 16 வகைக் குழம்பு, கூட்டுகளுடன் ஆவி பறக்கும் அரிசிச் சாப்பாடல்ல அவர்கள் உண்டது. மாறாக மண்ணால் செய்யப்பட்ட ஒரு வகைக் கலவையையே அவர்கள் உணவாக உட்கொண்டனர். ஆம்... வெறும் மண்தான், அதற்கு மேலாக எதுவும் இல்லை."
-மேற்கண்ட செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உணவுப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள சூழலில் தங்களுக்கு மண்ணைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்கின்றனர் ஹெய்ட்டி மக்கள். அங்கு ஒரு படி அரிசியின் விலை குறுகிய காலத்தில் இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துவிட்டது. அதனால் மண்ணைத் தின்னும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பிரச்சனையின் தீவிரத்தை எடுத்துக்காட்ட ஹெய்ட்டி ஒரு சிறு உதாரணம் மட்டுமே. உலக நாடுகள் பலவற்றிலும் இதே நிலைமைதான். அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை விண்ணை முட்டிக்கொண்டு பறக்கும் சூழலில், வாயையும், வயிற்றையும் கட்டிக் கொண்டு வாழ்வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். பட்டினிச் சாவுகளும், ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படும் சாவுகளும் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. ஐ.நா. சபையின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரப்படி, உலகில் வாழும் 6 பில்லியன் மக்களில் ஆறில் ஒரு பங்கினர் (1 பில்லியன்) கடுமையான பட்டினியால் வாடுகின்றனர். ஆனால் இந்தப் புள்ளி விபரத்தில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவர்களையும் கணக்கில் கொள்வோமேயானால், உலக மக்கள் தொகையில் சரிபாதிப்பேர், அதாவது 3 பில்லியன் மக்கள் போதுமான உணவின்றி வாடுவதாகத் தெரியவந்துள்ளது.
ஐ.நா சபையின் மற்றொரு அறிக்கையைப் பார்த்தோமேயானால் இது மிகையான அளவல்ல என்பது உறுதியாகும். உலகில் தினமும் 18 ஆயிரம் குழந்தைகள் (தோராய அளவு) ஊட்டச்சத்துக் குறைவால் மரணமடைகின்றனர் என்று அவ்வறிக்கை கூறுகிறது. (ஐ.நா, 2007 அறிக்கை)
உற்பத்திக் குறைவு காரணமா?
உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கும், அதனால் ஏற்படும் பட்டினிச் சாவுகளுக்கும் உணவு உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமா என்றால் இல்லை என்பதே பதிலாகும். ஏனெனில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடுகள், உபரியாக உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் கூட உணவுக்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துதான் காணப்படுகிறது. உலகின் வளமை மிக்க நாடாகக் கருதப்படும் அமெரிக்காவின் வேளாண்மைத்துறை அந்நாட்டில் 35 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகக் கூறுகிறது. இதில் சுமார் 13 மில்லியன் பேர் குழந்தைகளாவர். ஒருபுறம் மிதமிஞ்சிய உணவு உற்பத்தி, மறுபுறம் கடும் பட்டினி. இன்று பல நாடுகளில் இதுதான் நிலைமை.
உணவு பெறுவது அடிப்படை உரிமையே!
பளபளக்கும் தங்க வைர நகைகள், டி.வி., ஃபிரிட்ஜ் போன்ற எலக்ட்ரிக் சாதனங்கள், கார்கள், டூ வீலர்கள் போன்றவற்றை ஒரு வகையில் ஆடம்பரப் பொருட்கள் என்று கூறலாம். வசதிகளைப் பெருக்குமே தவிர, ஒருவர் உயிர்வாழ இப்பொருட்கள் இன்றியமையாத் தேவைகள் அல்ல. ஆனால் உணவு இவை போன்றதல்ல. அது ஒரு மனிதன் உயிர்வாழ அடிப்படைத் தேவையாகும். இருந்தபோதிலும் உணவு மற்ற ஆடம்பரப் பொருட்களுடன் சேர்த்து ஒரே தராசில் வைத்து நிறுக்கப்படுகிறது. அதாவது நகை, கார்களைப் போலவே காசிருப்பவர்கள் மட்டுமே உணவுப் பொருட்களையும் வாங்க முடியும் என்ற நிலைமை நடைமுறையில் இருக்கிறது. பணம் படைத்தவர்கள் தின்று கொழுக்க, வறியவர்கள் அரை வயிறும், கால் வயிறுமாக உழன்று கொண்டிருக்கிறார்கள். உணவுக்கான அடிப்படை உரிமைகூட மறுக்கப்படுகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பில் வியாபித்திருக்கும் இலாப வெறி இவ்வாறு மனிதர்களை மவுனமாக வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. இன்று நேற்றல்ல பல்லாண்டு காலமாக இந்நிலை தொடர்கிறது. இப்போது ஓரளவு முற்றிவிட்டதுதான் அனைவரது கவனமும் உணவுப் பிரச்சனை மீது திரும்ப உடனடிக் காரணம் ஆகும்.
இந்த உணவு நெருக்கடி பொருளாதார வல்லுனர்களால் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.
1. குறுகிய கால உணவு நெருக்கடி
2. நீண்ட கால உணவு நெருக்கடி
குறுகிய கால நெருக்கடி அல்லது தற்போதைய நெருக்கடி
தற்போதைய கடும் உணவு நெருக்கடி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. விளைவுகள் வேகமாகவும், அதிதீவிரமாகவும் இருந்ததால் அனைவரது பார்வையும் இதன் மேல் விழுந்தது.
உலகச் சந்தையில் சுமார் 60 விவசாய விளைபொருட்களின் விலைவாசி கடந்த ஆண்டு 37 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 23 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்தமாக 37 சதவீதம் என்றாலும் அடிப்படை உணவுப் பொருட்களான தானியங்களின் விலைவாசி மிகக்கடுமையாக உயர்ந்தது. சோளத்தின் விலை 70 சதவீதம், அரிசி 100 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து காணப்பட்டது. கோதுமை மற்றும் சமையல் எண்ணெயின் விலைகள் சாதனை அளவை எட்டின. இன்னும் தொடர்ந்து எகிறிக்கொண்டே இருக்கின்றன. வரலாறு காணாத இந்த விலை உயர்வுக்குக் காரணங்கள்தான் என்ன?
1. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு:
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வில் பெரும்பங்கு வகிக்கிறது. விவசாயம் இயந்திரமயமாக்கப்பட்டதன் காரணத்தால் விவசாயக்கருவிகளை இயக்குவதற்கும், விளைபொருட்களை மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்திற்கும் பெட்ரோலியம் அவசியத் தேவையாகும். எனவே அதில் ஏற்பட்டுள்ள கடும் விலை உயர்வு உணவுப்பொருட்களின் விலை உயர்வில் எதிரொலிக்கிறது.
2. உயிர்ம எரிபொருட்களின் உற்பத்தி
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்று என்பது போன்ற பிரச்சாரங்களுடன் ஊக்குவிக்கப்படும் உயிர்ம எரிபொருட்களின் உற்பத்தியும் உணவுப் பொருட்களின் விலை உயர்விற்குக் காரணமாகும். பலர் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் வெறும் காட்டாமணக்குச் செடியிலிருந்து மட்டும் இந்த எரிபொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களான மக்காச்சோளம், சோளம், சோயா மற்றும் உணவு எண்ணெயிலிருந்தும் இவை பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு உற்பத்தியான சோளத்தில் 20 சதவீதம் எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. இன்னும் 10 ஆண்டுகளில் தான் உற்பத்திசெய்யும் மொத்த சோளத்தில் மூன்றில் ஒரு பங்கை உயிர்ம எரிபொருள் தயாரிப்புக்கு ஒதுக்கவும் அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்க மக்களின் பிரதானமான உணவான சோளம் இவ்வாறு வேறு வகையில் பயன்படுத்தப்படுவது ஒருவகையான உணவுத் திருட்டே என்று குமுறுகிறார்கள் மக்கள். அமெரிக்கா மட்டுமல்ல ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் உயிர்ம எரிபொருள் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் மூன்றாம் உலக நாடுகளும் மெதுவாக தங்கள் கவனத்தை இந்த மாற்று சக்தியிடம் செலுத்தத் துவங்கியுள்ளன.
உயிர்ம எரிபொருட்கள் உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா என்றால் இல்லை. சுற்றுச்சூழல் மாசுபாட்டைப் பெருமளவில் குறைக்கின்றன என்று பரவலாகப் பிரச்சாரம் செய்யப்பட்டாலும், மாசுபாட்டைக் குறைப்பதில் அவ்வளவு சிறப்பான வகையில் இவை செயல்படுவதில்லை என்கின்றனர் வல்லுனர்கள். படிம எரிபொருட்களுக்குச் சமமான அளவிலோ அல்லது அதைவிட அதிகமாகவோகூட உயிர்ம எரிபொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை விளைவிக்கின்றன என்கிறார்கள் அவர்கள்.
உயிர்ம எரிபொருளுக்காக வளர்க்கப்படும் தாவரங்கள் கரியமில வாயுவை (கார்பன்-டை-ஆக்ஸைடு) பெருமளவில் கிரகித்துக் கொள்கின்றன என்பது உண்மைதான். எனினும் பல தாவரங்கள் தாம் கிரகித்ததைவிட அதிக அளவில் கரியமில வாயுவை வெளிவிடுகின்றன. மேலும் நச்சு உரங்களைப் பயன்படுத்துவது, அறுவடை முறை மற்றும் உயிர்ம எரிபொருள் சுத்திகரிப்பு முறை ஆகியவற்றின் மூலமும் குறிப்பிடத்தக்க அளவு கரியமில வாயு வெளியேறுகிறது. இதைத் தவிர எரிபொருளுக்கான செடிகளை வளர்ப்பதற்காகக் காடுகளும் பெருமளவில் அழிக்கப்படுவதால் இவற்றை (உயிர்ம எரிபொருட்கள்) சுற்றுச் சூழலுக்கு நண்பன் என்று கூறுவதைவிட பகைவன் என்று கூறுவதே சாலப்பொருந்தும்.
உயிர்ம எரிபொருள் தொழில்நுட்பத்தில் இவ்வளவு பின்னடைவுகள் இருந்தாலும் அவற்றின் உற்பத்தி ஊக்குவிக்கப்படுவது ஏன்? இலாப வேட்கையே காரணம் என்று ஒற்றை வரியில் பதில் கூறிவிடலாம். இந்த வகை எரிபொருட்களின் உற்பத்தியில் ஈடுபடும் பகாசுர நிறுவனங்கள், தங்களின் குறுகிய நோக்கத்திற்காக மக்களை ஏமாற்றும் வாதங்களுடன் உற்பத்தியைக் குவிக்கின்றன. மேலும் விளைநிலங்களின் மீதும், சந்தையிலும் இவை ஒரு ஏகாதிபத்தியப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. எனவே இந்த இலாபபெறி பிடித்த பன்னாட்டு நிறுவனங்களிடம் வளரும் நாடுகள் சிக்கிக் கொள்வது ஒருவகையான காலனியாதிக்கத்தையே ஏற்படுத்தும். எனவே எந்த வகையிலும் சிறப்பாக இல்லாத உயிர்ம எரிபொருட்களை உற்பத்தி செய்யாமலிருப்பதே நல்லது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொருளாதார அறிஞர்களும் தெரிவிக்கிறார்கள்.

3. அதிகரிக்கும் இறைச்சித் தேவை
உலக அளவில் இறைச்சித் தேவை அதிகமானதும் உணவு தானியங்களின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகும். 1961ல் வெறும் 71 மில்லியன் டன்களாக இருந்த இறைச்சித் தேவை, 2007ல் 284 மில்லியன் டன்களாக உயர்ந்துவிட்டது. எனவே இறைச்சிக்காக அதிக அளவில் விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றிற்குத் தீனியாகப் பல இடங்களில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இது தானியங்களின் விலை உயர்வில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
4. இழக்கப்படும் விளைநிலங்கள்
பெரும் எண்ணிக்கையில் விளைநிலங்கள் இழக்கப்படுவதன் காரணமாகவும் உணவு உற்பத்தி குறைந்து விட்டது. இது உணவுப் பொருட்களின் விலை உயர்விற்கு முக்கியக் காரணமாகும். கடந்த சில ஆண்டுகளுக்குள்ளாக சீனாவில் 70 இலட்சம் ஏக்கர் விளைநிலமும், வியட்நாமில் 7 இலட்சம் ஏக்கரும் இழக்கப்பட்டுள்ளன. மேலும் ஏக்கருக்கான உற்பத்தித் திறனும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்நிலைமையானது உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடுகள் மற்றும் ஏற்றுமதி செய்த நாடுகளைக்கூட இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியுள்ளது. இதுவும் உணவுப்பொருட்களின் விலை உயர்வில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
5. இயற்கைப் பேரிடர்கள்
வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைக் காரணங்களும் உணவு உற்பத்தியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிகளவில் கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடான ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வறட்சி, அரிசி ஏற்றுமதி நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட புயல் ஆகியவை இந்தத் தானியங்களின் விலை உயர்வில் எதிரொலித்தன. மேலும் இதே காலகட்டத்தில் (2007) வடசீனாவின் ஒரு பகுதியிலும் வறட்சி ஏற்பட்டு பெருமளவில் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
6. கள்ளச்சந்தையும், ஊக வணிகமும்
எல்லாவற்றிற்கும் மேலாக ஊகவணிகமும், கள்ளச் சந்தையும் உணவுப் பொருட்களின் விலையை எட்டா உயரத்திற்கு கொண்டு சென்று, அப்பாவி மக்களை வாட்டி, வதைத்து வருகின்றன. ஆன்லைன் முறையில் நடத்தப்படும் இந்தக் கொள்ளையை (ஊக வணிகம்) நிறுத்தாவிட்டால் விலைவாசி என்றென்றைக்கும் கட்டுக்குள் வராது என்பது நிதர்சனம்.
கண்டனக்குரல்களும், குறுகிய காலத் தீர்வுகளும்
விலைவாசி உயர்வுக்கெதிராக உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன. போராட்டங்கள் பெருமளவில் நடத்தப்பட்டு வருகின்றன. மெராக்கோ, செனகல், மெக்சிகோ, உஸ்பெகிஸ்தான், ஏமன் போன்ற நாடுகளிலும், அண்டை நாடான பாகிஸ்தானிலும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுள்ளன. இந்தியாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளின் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்கள் சில குறுகிய காலத் தீர்வுகளை எட்ட உதவியுள்ளன.
சீனா அடிப்படை உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியா, எகிப்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளன. ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல உயிர்ம எரிபொருள் குறித்த தங்கள் பார்வையை ஓரளவாவது மாற்றிக் கொண்டுள்ளன. ஆனால் இவை மட்டுமே உணவுப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தாது. அரசுகள் என்றைக்கு மக்கள் நலனுக்கான பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்துகின்றனவோ அன்றுதான் இப்பிரச்சனை முடிவுக்கு வரும்.
இது நீண்டகால நெருக்கடியின் பிரதிபலிப்பே!
தற்போதைய உணவு நெருக்கடியானது ஆண்டுக்கணக்காக நிலை பெற்றிருக்கும் நீண்டகால நெருக்கடியின் பிரதிபலிப்பாகும். உணவு உற்பத்தி முறையில் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத அடிப்படை மாற்றங்களே இத்தகைய நெருக்கடியை உருவாக்கியுள்ளன. 1990களில் மூன்றாம் உலக நாடுகளில் அமல்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சந்தையைத் திறந்துவிட்டது. இந்த திறந்த சந்தைப் பொருளாதாரம் விவசாயத்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலக வங்கி, ஐ.எம். எஃப் போன்ற அமைப்புகளால் பரிந்துரை செய்யப்பட்ட வழிகாட்டுதல்களை மூன்றாம் உலக நாடுகள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றத் துவங்கின. விளைவு? விவசாயிகள் நசுக்கப்பட்டனர். சிறுவிவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
விவசாயத்துறையில் அரசின் தலையீடு இருக்கவேகூடாது என்பதே திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் நிர்பந்தமாகும். விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் இடையேயான உறவில் அரசின் தலையீடு இல்லாமலிருப்பதே சிறந்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உரங்கள், விதைகள் மற்றும் மின்சாரத்திற்கு மானியம் அளிப்பது, விளைபொருட்களைக் கொள்முதல் செய்வது ஆகியவை முதல் உச்சகட்டமாக நிலச்சீர்திருத்தம் செய்வதுவரை அனைத்திற்கும் அரசின் தலையீடு அவசியம். அத்தலையீடுகள்தான் சாமானிய விவசாயிகளின் நலன்களைக் காக்கும். மாறாக, தலையிடாமல் இருப்பது பகாசுர விதைக்கம்பெனிகள் மற்றும் உரக்கம்பெனிகளின் இலாப வேட்டைக்கு விவசாயத்தை இரையாக்குவதேயாகும்.
இரு உதாரணங்கள்:
இத்தகைய தீமை விளைவிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்திய ஹெய்ட்டி நாட்டில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை ஏற்கனவே பார்த்தோம். அந்நாட்டின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் இதற்குக் கூறும் காரணத்தைக் கேளுங்கள்.
"நாங்கள் (ஹெய்ட்டி அரசு) உணவுப் பொருட்களின் விலையுயர்வுப் பிரச்சனையில் தலையிட்டுத் தீர்வுகாண முடியாது. ஏனெனில் நாங்கள் சந்தை நிர்பந்தங்களுக்கு ஆட்பட வேண்டியுள்ளது", என்கிறார் அவர். (ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம். டிச.9, 2007)
அதே வேளையில் தான் கடைப்பிடித்த புதிய பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட்டு, புதிய பாதையில் செல்லத் துவங்கிய ஆப்பிரிக்க நாடான மாலவி (ஆயடயஎi) நாட்டில் மிகவிரைவான முன்னேற்றங்கள் ஏற்படத்துவங்கின. உரங்களுக்கும், விதைகளுக்கும் கொடுக்காமல் நிறுத்திய மானியத்தை அந்நாடு திரும்ப வழங்கத் துவங்கியது. விவசாயிகள் புது உத்வேகத்துடன் உற்பத்தியில் ஈடுபட்டனர். உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியது. அந்நாட்டின் உணவுத் தேவை பூர்த்தியடைந்ததுடன் அண்டை நாடான ஜிம்பாப்வேக்கும் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறது அந்நாடு! (நியூயார்க் டைம்ஸ். டிச.2, 2007)
வல்லரசு நாடுகளின் இரட்டை வேடம்
அனைத்து வளரும் நாடுகளிலும் திறந்த சந்தை முறையை அமல்படுத்த துடிக்கும் பொருளாதார வல்லரசுகள் தங்கள் நாட்டில் இந்த முறையைப் பின்பற்றுகின்றனவா என்றால் இல்லை. அந்த நாடுகளில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் கிடைக்கின்றன; உரங்கள் கிடைக்கின்றன; அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்கின்றன. இந்த நாடுகள்தான் மூன்றாம் உலக நாடுகளை விவசாயத்திற்கு மானியம் தரவேண்டாம் என்கின்றன. ஏன் இந்த இரட்டை நிலை? தங்கள் நாட்டின் பன்னாட்டுக் கம்பெனிகளைப் பாதுகாப்பதற்காகத்தான். கார்கில், மான்சாண்டோ மற்றும் பல பகாசுர நிறுவனங்கள் வளரும் நாடுகளில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விற்கின்றன. மானியங்களால் இந்நிறுவனங்களின் சந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்கவே அந்நாடுகள் இவ்வித இரட்டை நிலையை எடுக்கின்றன.
இப்பன்னாட்டுக் கம்பெனிகள் விற்கும் மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்துவது பெரு விவசாயிகளுக்கு மட்டுமே இலாபமளிக்கிறது. சிறு விவசாயிகள் விவசாயத்தைத் தொடரமுடியாமல் தவிக்கிறார்கள். கடன் சுமை வேறு கழுத்தை நெரிக்கிறது. தற்கொலைகள் தொடர்கதைகளாகின்றன. இந்தியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல விவசாயிகள் நிலங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கிப் படையெடுக்கிறார்கள். விளைவாக, நகர்ப்புறங்களில் சேரிகள் பெருகுகின்றன. மக்களின் வாழ்நிலையோ அதலபாதாளத்திற்குச் செல்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் புதிய ஆர்வம்
விதைகளையும், உரங்களையும் விற்பதுடன் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் திருப்தியடையவில்லை. அவை மூன்றாம் உலக நாடுகளில் விவசாய நிலங்களை வாங்கிக் குவிப்பதில் பெருமுனைப்பு காட்டுகின்றன. குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் பிரேசில் நாட்டில் 34,000 ஏக்கர் விளைநிலத்தை வாங்கியுள்ளது. அதில் சுமார் 1600 ஏக்கர் பரப்பளவில் வெறும் சோயாபீன்ஸ் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது! உருகுவேயில் ஒரு நியூசிலாந்து நிறுவனம் ஏறக்குறைய 1 லட்சம் ஏக்கர் விளைநிலத்தை வளைத்துப் போட்டுள்ளது. இதே போல பிரேசில், அர்ஜென்டினா மற்றும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவில் விளைநிலங்களை வாங்கிக் குவித்துள்ளன. இது சிறு விவசாயிகளை மட்டுமல்ல பெரு விவசாயிகளையும் பாதிக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மேலும் இவ்வாறு மிகப்பெரிய பரப்பளவில் பயிரிடப்படும் விளைபொருட்கள் உயிர்ம எரிபொருள் தயாரிப்புக்கே அர்ப்பணிக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அக்கரைமிக்க தீவிரமான செயல்பாடுகள்:
கருத்தியல் ரீதியாக பசியை வெற்றி கொள்வது மிக எளிது. ஆனால் நடைமுறையிலோ அது மிகவும் கடினமான ஒன்றாகும். முதலில் உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். மேம்போக்காக அன்றி உண்மையிலேயே அக்கறையுடன் அரசுகள் இப்பிரச்சனையை அணுகவேண்டும்.
இங்கு ஹியூகோ சாவேஸின் வெனிசுலா அரசு பட்டினிக்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை எடுத்துக்கூறுவது பொருத்தமாக இருக்கும். அந்நாட்டில் ஏழை மக்களின் குடியிருப்புகள்தோறும் உணவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உண்மையிலேயே இத்திட்டம் மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. ஏழைகளின் நலனைக் காக்கும் அக்கறையுடன் செயல்படுத்துவதால், பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அரசுக்கு ஒத்துழைக்கிறார்கள். ஓரளவு வசதி படைத்தவர்கள்கூட தன்னெழுச்சியாகத் தங்கள் வீடுகளில் உணவு சமைத்து உணவு மையங்களுக்குத் தருகிறார்கள். முழுக்க முழுக்க அரசே இத்திட்டத்தைச் செயல்படுத்தினாலும், பொதுமக்களின் ஆர்வத்திற்கு அணை போடாமல் அவர்களையும் சேர்த்துக்கொண்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திவருகிறது. உணவு மையங்களுடன் மலிவு விலை விற்பனைக் கூடங்களும் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன.
பிரேசில் நாட்டில் குடும்ப நிதித்திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நாளுக்கு 2 டாலருக்கும் குறைவாகச் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு 53 டாலர் வழங்கப்படுகிறது. ஓரளவு வெற்றிகரமாகவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போதைய கடும் நெருக்கடியைச் சமாளிக்க இதுபோன்ற தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சில தொலைநோக்குத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.
கியூபாவைப்போல் நகரத் தோட்டங்களை அமைத்து உணவு உற்பத்தி செய்வது ஒரு தொலை நோக்குத் திட்டமாகும். இதன் மூலம் நகர மக்களின் காய்கறித் தேவையை ஓரளவு முழுமையாக நிறைவு செய்யமுடியும். மிகத் தீவிரமான நிலச்சீர்திருத்தம் மேற்கொள்வதும் இன்றைய அவசர, அவசியத் தேவையாகும். இதன்மூலம் ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் விவசாயத்துறை இருப்பதை முடிவுக்குக் கொண்டுவந்து சிறு விவசாயிகளைக் காக்கமுடியும். மேலும் இங்கு இன்னொன்றையும் வலியுறுத்துவது பொருத்தமாக இருக்கும். பணப்பயிர்களுக்குக் கொடுப்பதைவிட அதிகமான முக்கியத்துவத்தை உணவுப் பயிர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதே அது. Related Posts with Thumbnails

wibiya widget