வாட்ஸ்அப் அப்ளிகேஷனை ஏன் வாங்கியது ஃபேஸ்புக்

தொழில்நுட்ப உலகின் சமீபத்திய பரபரப்பாக பேசப்படுவது வாட்ஸ்அப் (whats up) மென்பொருளை ஃபேஸ்புக் 19 பில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி) வாங்கியது பற்றித்தான்.

இத்துறையில் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து ஒரு நிறுவனம் வாங்கப்படுவது இதுவே முதல் முறை என்பதுதான் பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் அப்படி என்ன இருக்கிறது? ஃபேஸ்புக் ஏன் இவ்வளவு பெரிய தொகை கொடுத்து அதனை வாங்கவேண்டும்? என்ற கேள்விகளுக்கு முன்பாக அந்த மென்பொருளைப் பற்றி நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

வாட்ஸ் அப் என்பது ஆண்ட்ராய்ட், ஆப்பிள், பிளாக்பெர்ரி, விண்டோஸ், சிம்பியன் ஆகிய இயங்குதள ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப் படக்கூடிய ஒரு அப்ளிகேஷன் புரோகிராமாகும்.

இந்த அப்ளிகேஷன் நிறுவப்பட்ட எந்தவொரு ஸ்மார்ட் போனிலிருந்தும் மற்றொரு வாட்ஸ்அப் நிறுவப்பட்ட போனுக்கு (இணையவசதி இருக்க
வேண்டும்) குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோக்கள், குரல் பதிவுகள் ஆகிய
வற்றை பரிமாறிக் கொள்வது எளிதானதாகும்.

இதனை உருவாக்கியவர்கள் பிரைன் அக்டன் மற்றும் ஜேன் கோம். பிரைன் அக்டன் யாகூ நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக  பணியாற்
றியவர். வாட்ஸ்அப் முதன்முதலில் குறுஞ்செய்திகளுக்கு மாற்றாகவே உருவாக்கப்பட்டது. சாதாரணமாக தங்கள் நண்பர்களுக்குள் செய்தி பரிமாறிக்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த அப்ளிகேஷன் இன்று எந்த விளம்பரமும் இன்றி ஐந்தே ஆண்டுகளில் 45 கோடிக்கும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படுவது ஆச்சரியப்படத்தக்கதாகும்.
அதற்குக் காரணம், குறுஞ்செய்தி அனுப்புவதில் இதன் எளிமையும் வேகமும்தான்.

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றவற்றை விட  ஸ்மார்ட் போனில் வாட்ஸ் அப் பயன்படுத்த எளிதானதாக இருக்கிறது. அத்துடன் பகிரப்படும் செய்தி மற்றும் அனுப்புபவரின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாகவும் இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் யார் வேண்டுமானாலும் போலியான பெயரில் கணக்குத் தொடங்கி செய்திகளை வெளியிட முடியும். ஆனால், வாட்ஸ் அப் அப்ளிகேஷனில் அவ்வாறு செய்வது எளிதல்ல. காரணம் உங்கள் தொடர்பில் உள்ள நண்பர்களின் மொபைல் எண்கள் அனைத்தும் உங்கள் ஃபோன்புக்கில் இருக்கும். ஃபேஸ்புக், கூகுள் பிளஸ், டிவிட்டர் போன்றவற்றில்  எண்ணற்ற நண்பர்கள் இருந்தாலும் அனைவருடனும் எப்போதும் தொடர்பில் இருக்க முடியாது. ஆனால், வாட்ஸ் அப் அப்ளிகேஷனின் குரூப் வசதி அனைவருடனும் தொடர்பில் இருக்கும் வசதியைத் தருகிறது.
அத்துடன் ஒருவர் வெளியிடும் செய்தியை மற்றொருவர் திருடி வெளியிடு
வது ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் எளிதில் நடைபெறக் கூடியது. வாட்ஸ் அப் பயன் படுத்துவோருக்கு அத்தகைய பிரச்சினை இல்லை.
ட்விட்டர் தளத்தில், வாட்ஸ் அப் வெளியிட்ட தகவலில், 24 மணி நேரத்தில், 2,700 கோடி செய்திகளும், 32 கோடியே 50 லட்சம் போட்டோக்களும் பரிமாறிக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வாட்ஸ் அப் அப்ளிகேஷனைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 2 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இன்று வாட்ஸ்அப் போலவே வேறு சில அப்ளிகேஷன்களும் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை ஸ்கைப் (Skype), வைபர் (Viber), வீசேட் (wechat) ஆகியவையாகும்.

வேகமாக வளர்ந்துவரும் ஸ்மார்ட் போன் சந்தையில் வாட்ஸ் அப் போன்ற ஒரு மென்பொருளை உருவாக்கி வெளியிடுவதொன்றும் ஃபேஸ்புக்கிற்கு பெரிய காரியமல்ல. ஆனால், ஏற்கனவே 45 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் வாட்ஸ் அப்பின் இடத்தை அடைய முடியமா என்பது சந்தேகம்தான்.

தொழிற் போட்டியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வலுவான பல சிறு சிறு நிறுவனங்களை கேட்கும் விலை எத்தனையாயினும் கொடுத்து வாங்குவதென்பது முதலாளித்துவ சூழலில் நாம் பார்க்கக்கூடிய நிகழ்வுதான்.
ஆன்லைன் வீடியோ உரையாடலுக்கு புகழ்பெற்ற ஸ்கைப் மென்பொருள் நிறு
வனத்தை மைக்ரோசாப்ட் 40 ஆயிரம் கோடிக்கு ஏற்கெனவே விலைக்கு வாங்கியிருக்கிறது. அந்த வகையில், ஃபேஸ்புக் இதனை வாங்கியிருக்காவிட்டால் கூகுளோ அல்லது வேறு ஒரு நிறுவனமோ இன்றோ அல்லது இன்னும் சில மாதங்களிலோ இதை விட நல்ல விலைக்கு வாங்கிவிடும் என்பதுகூட மறுக்க முடியாத விஷயம்தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால் வாட்ஸ் அப் அப்ளிகேஷனை உருவாக்கிய பிரைன் அக்டன் மற்றும் ஜேன் கோம் ஆகிய இருவரும் ஒருகாலத்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தால் வேலை வாய்ப்பு மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் என்பதுதான்.

வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தவும் அதனைப் பற்றி அறிந்து கொள்ளவும் www.whatsapp.com என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

. Related Posts with Thumbnails

wibiya widget