'பாஸ்' சொல்றதக் கேளுங்க

அரசின் சி-டாக் நிறுவனம் பாஸ் (BOSS)என்ற ஆப்பரேடிங் சிஸ்டத்தை உருவாக்கியுள்ளது. பாரத் ஆப்பரேடிங் சிஸ்டம் சொல்யூசன்ஸ் (Bharat Operating System Solutions) என்பதன் சுருக்கமே பாஸ். நாம் பெரும்பாலோனோர் பயன்படுத்தும் விண்டோஸ் மற்றும் மேக் கட்டமைப்பிற்கு மாற்றாக ஓப்பன் சோர்ஸ் முறையில் இந்திய அரசின் சி-டாக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இயங்கு தள (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) மென்பொருளாகும் இது.
தற்போது விலைகொடுத்து வாங்கும் எந்தவொரு வணிகரீதியான மென்பொருளுக்கும் நீங்கள் பயனாளராக மட்டுமே இருக்கிறீர்கள். அவை உங்களுக்கு சொந்தமானதல்ல. அதில் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற மாறுதல்கள் செய்யவோ, உங்கள் தேவைக்குப் பிறகு நண்பருக்கோ, மற்றொரு பயனருக்கு மறு விற்பனை அல்லது இலவசமாக தருவதற்கோ இயலாதவை. அப்படிப் பயன்படுத்துவதும், விற்பதும் காப்பிரைட் சட்டப்படி குற்றமாக கருதப்படும். இதற்கு சம்மதித்தே நீங்கள் பல ஆயிரமும் லட்சங்களையும் செலவழித்து மென்பொருள்களை வாங்கிப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள். அப்படி விலை கொடுக்காமல் ஏதாவது காப்பிரைட் மென்பொருளை தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி வந்தால் அது பைரேட்டட் அதாவது திருடப்பட்ட மென்பொருளாக கருதப்படும்.
இதற்கு மாறாக, அறிவு மனிதர்களுக்கு பொதுச்சொத்து, அந்த அறிவால் உண்டாகும் நன்மையும் பயனும் அந்தந்த மனிதர்களின் தேவைக்கு உட்பட்ட மாற்றங்களுடன் பயன்படுத்திக் கொள்வதற்கும் பிறருடன் பகிர்ந்து
கொள்வதற்குமான சுதந்திரத்தை வழங்கவேண்டும் என்ற அறைகூவலுடன் திறந்த மூல மென்பொருள்களுக்கான இயக்கம் 1983ல் துவங்கியது.  இதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மென்பொருளும் காப்பி
லெப்ட் செய்யப்படவேண்டும் என்பதை இவ்வியக்கம் வலியுறுத்துகிறது.
மென்பொருள் பயன்படுத்துபவருக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவதே இவ்வியக்கத்தின் குறிகோளாகும்.  பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல், மாற்றியமைத்தல், மேம்படுத்துதல் என்பதுடன் வைரஸ்கள், தகவல் திருட்டு, கிரிடிட் கார்டு மோசடி போன்ற தொழில்நுட்ப எதிரிகளிடமிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள திறந்த மூல கட்டமைப்பே உதவும் என்று உவகின் பல நாடுகள் கருதுகின்றன.
ஆகவேதான் ஒவ்வொரு நாடும் தனக்கான மென்பொருளை திறந்தமூலநிரல் அடிப்படையிலேயே உருவாக்கி வருகின்றன. பிரேசில், லத்தீன் அமெரிக்க நாடுகள், ஜெர்மனி, ரஷ்யா, டென்மார்க், இங்கிலாந்து போன்ற பல நாடுகளும் தங்களுக்கான ஓப்பன் சோர்ஸ் இயங்குதளத்தையும், மென்பொருட்களையும் உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
உலகளவில் கோலோச்சி வரும் மைக்ரோசாப்ட், அடோப், ஆப்பிள், மேக் போன்ற நிறுவன காப்பிரைட் மென்பொருள்களுக்கு மாற்றாக பல்வேறு நாடுகளும் தன்னார்வ அமைப்புகளும் காப்பிலெப்ட் மென்பொருட்கள் பலவற்றை  உருவாக்கி வருகின்றன. ஓப்பன் சோலாரிஸ், உபுண்டு லினக்ஸ், மற்றும்  கியூபாவின் நோவா  (Nova)ஓஎஸ், சைனாவின் கைலின் (Kylin) ஓஎஸ் மற்றும் ஆஸ்திரேலியா, ஐரோப்பா, அரேபிய நாடுகளின் அரசு சார் இயங்கு தளங்கள் இதில் குறிப்பிடத்தக்கவையாகும். விண்டோசில் பழகிய நமக்கு பாஸ் ஆப்பரேடிங் சிஸ்டம் எவ்வாறு உதவும் என்ற கேள்வி எழலாம். ஆனால் கடந்த 25 ஆண்டிற்கும் மேலாக லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில் வெற்றிகரமாக பல்லாயிரம் கணினி வல்லுனர்களின் பங்களிப்பில் மேம்படுத்தப்பட்ட ஓப்பன் சோர்ஸ் நிரலில், இந்திய சூழலுக்கு ஏற்றவகையிலான மாற்றங்களை செய்து  வெளிவந்திருப்பதுதான் பாஸ் ஜிஎன்யு /லினக்ஸ் (அப்படித்தான் அழைக்கிறார்கள்). பாஸுடன் கூடுதலாக தரப்படும் 22 பயன்பாட்டு மென்பொருள்களில் பல விண்டோஸ் பயனாளர்களால் மிகவும் விரும்பிப்பயன்படுத்தப்படுபவை என்பதும் குறிப்பிடத்தக்கது..  ஆகவே பாஸின் செயல்திறன் குறித்து நாம் அச்சப்படவேண்டியதில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மென்பொருள் தயாரிப்புத் திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும் அதிகாரப்பூர்வ இயங்கு தள மென்பொருள் ஒன்று வெளியாவது தற்போதுதான்.  இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ஆங்கிலம் மட்டுமல்லாது தமிழ், இந்தி, பஞ்சாபி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, சமஸ்கிருதம், தெலுங்கு, உருது, போடோ, காஷ்மீரி, மைதிலி, கொங்கனி, மணிபூரி போன்ற இந்தியாவின் பல்வேறு மக்கள் பேசும் மொழியிலும் இவ்வியங்குதளம் வெளியிடப்பட்டிருப்பதுதான்.
நீங்களும் பாஸ் ஜிஎன்யு / லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்த நினைத்தால் இலவச சிடியை அருகிலுள்ள சி-டாக் அலுவலகத்தில் நேரிலோ அல்லது பாஸ் லினக்ஸ் (http://bosslinux.in/) இணையதளம் மூலமாக  உங்கள் முகவரியை அளித்து பெற்றுக்கொள்ளலாம் அல்லது அத்தளத்திலிருந்து நேரடியாக பதிவிறக்கியும் நமது கணினியில் நிறுவிக்கொள்ளமுடியும். இதற்கான வழிகாட்டிக் கையேடும் அந்த இணையதளத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது. முன்பு வெளியிடப்பட்ட அலுவலக பயன்பாட்டு மென்பொருள் பாரதீய ஓப்பன் ஆஃபிஸ் தொகுப்பு அரசு அலுவலகங்கள் தவிர்த்து இன்னும் தனியாரிடமும், பெரும்பாலான மக்களிடமும் சென்று சேராத நிலையில் பாஸ் ஓஎஸ் மக்களின் பயன்பாட்டிற்கு எப்போது முழுமையாக வரும் என்ற கவலையும் ஏற்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசுசார் நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் பாஸ் பயிலரங்குகளை சி-டாக் நிறுவனம் தற்போது நடத்தி வருகிறது. அதனை மேலும் விரிவாக்கி பொதுமக்களுக்கும் இதன் பயன் கிடைக்கச்செய்யவேண்டும் என்பதே நமது விருப்பம் Related Posts with Thumbnails

wibiya widget