போட்டி நிகழ்ச்சிகளும், உளவியல் பாதிப்பும் - இரா. நந்தகுமார்

சிஞ்சினி சென்குப்தா, கொல்கத்தாவைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி. படிப்புடன் நடனத்திலும் ஈடுபாடு கொண்ட சிஞ்சினி பல்வேறு போட்டிகளில் பங்குகொண்டு பரிசுகளைக் குவித்திருக்கிறாள். நடனத்தின் மீதிருந்த அதீத ஆர்வத்தாலும், கொடுத்த புகழுhழும் நடனமும் அவளது வாழ்வின் ஒரு அங்கமாகிப் போனது. வாழ்வும் மகிழ்ச்சியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில்தான் திடீரென வீசியது ஒரு பெரும்புயல். அதன் அதிதீவிரத் தாக்குதல் சிஞ்சினியை தற்போது ஒரு மனநோயாளியாக மருத்துவமனையில் முடக்கிப்போட்டுள்ளது. மேடைகளில் பம்பரமாகச் சுழன்று ஆடிய கை, கால்கள் இப்போது அசைவற்றுக் கிடக்கின்றன. பேச்சும் வருவதில்லை. அப்படி என்னதான் நடந்ததது சிஞ்சினியின் வாழ்வில்?
'ரியாலிட்டி ஷோ' எனப்படும், தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும் போட்டி நிகழ்ச்சிகள் மக்களிடையே தற்போது வெகு பிரபலம். எப்பாடுபட்டாவது இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வெல்லவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். துவக்கத்தில் பொது அறிவுப் போட்டிகள் என்று ஆரம்பித்து பாட்டுப்போட்டி, நடனப்போட்டி என்று புதிய புதிய வடிவங்களில் இந்நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை மக்களிடையே இந்தளவுக்கு வரவேற்பு பெறக்காரணம் மிகுந்த ஆடம்பரமாக அவை நடத்தப்படுவதுதான். சினிமா பிரபலங்கள் வேறு நடுவர்களாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்று மேலும் விளம்பரங்களை நிகழ்ச்சிக்குத் தருகிறார்கள். போட்டியில் வெற்றிபெற்றால் கோடீஸ்வரர்களாகலாம் என்றும், தங்கத்திலேயே குளிக்கலாம் என்றும் தொலைக்காட்சிகள் அளிக்கும் விளம்பரங்களில் மயங்கி போட்டியாளர்களும் அதிகளவில் பங்கேற்கிறார்கள். விளைவாக, பங்கேற்பாளர்கள் ஆகிறார்களோ இல்லையோ, நிகழ்ச்சி நடத்துபவர்கள் எளிதாக பல கோடிகளுக்கு அதிபதிகளாகிவிடுகிறார்கள்.
இத்தகைய போட்டிகளில் எப்படியும் வெற்றிபெற்று பரிசுகளை வாங்கிவிடவேண்டும் என்ற தன்முனைப்பு மக்களுக்கு ஏற்படுவது என்பது இம்முதலாளித்துவ சமூக அமைப்பில் சாதாரணமானதுதான். ஆனால் உண்மையில் இதனை சாதாரணமானது என்று ஒதுக்கிவிடமுடியாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புடன் போட்டியில் கலந்து கொள்வதும், அதில் தோற்றுவிட்டால் நிலைகுலைந்து விடுவதும் இந்நிகழ்ச்சிகளில் சாதாரணமாக நாம் காணும் காட்சிகள் என்று கூறும் அவர்கள் என்பதுதான் ஆனால் உண்மையில் அவை மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள். யார் கண்டுகொள்கிறார்கள் இந்தக் கருத்துக்களை? தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
முதலில் வயது வந்தவர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டுவந்த இத்தகைய போட்டிகள் தற்போது சிறுவர், சிறுமிகளுக்காகவும் பிரத்யேகமாக நடத்தப்படுகின்றன. இங்குதான் நாம் சிஞ்சினி சென்குப்தாவை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். அப்பெண்ணும் இதுபோன்ற ஒரு போட்டியில் பங்கேற்கச் சென்றிருந்தாள். முதல் இரண்டு சுற்றுகளில் எளிதாக வெற்றி பெற்றவளுக்கு மூன்றாவது சுற்றில் வந்தது சோதனை. போட்டிக்கு நடுவர்களாக வந்திருந்த சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் சிஞ்சினியின் ஆட்டத்திறனை மதிப்பீடு செய்து அவளைப் போட்டியிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். அப்போது அவர்கள் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் சிஞ்சினியை கடுமையாக பாதித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டாள். முன்பே சொன்னவாறு அவளால் கை, கால்களை அசைக்க முடியவில்லை. முதலில் உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர், அங்கிருந்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிஞ்சினியை பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் மருத்துவமனையில் தற்போது சேர்த்துள்ளனர். மருத்துவர்களின் கூற்றுப்படி சிஞ்சினி ஒருவித நரம்புக்கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரியவந்துள்ளது. சிகிச்சை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்ற உள்ளுணர்வோடு பணம் சம்பாதிக்கும் வெறியும் சேர்ந்து மக்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது என்பது இதுபோன்ற சம்பவங்கள் மூலம் நிரூபணமாகிறது. ஒருபுறம் பெற்றோரின் இத்தகைய பேராசை, மறுபுறம் போட்டி நடுவர்களின் அதிமேதாவித்தனம் நிறைந்த விமர்சனங்கள் ஆகியவை சேர்ந்து குழந்தைகளைத் தாக்குகின்றன. இதனால் அவர்களுக்கு ஒருவித பயம் உருவாகி மன அழுத்தமும், மனரீதியான வேறுவகை பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
துள்ளித்திரிய வேண்டிய வயதில், தேவையற்ற சுமைகளைத் தந்து குழந்தைகளைத் துவளச்செய்யும் இதுபோன்ற நடவடிக்கைகள் இனிமேலும் தொடரக்கூடாது என்பதே சிஞ்சினி சென்குப்தாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம். Related Posts with Thumbnails

"விலைவாசி ஏறிப்போச்சுல்ல..." - ஏ.ஆர்.ராஜா

கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாரெனின்

கல்வி என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று என அரசு பல்வேறு ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறது. ஆனால் கல்வி இன்று எல்லோருக்கும் எட்டும் தூரத்தில் உள்ளதா என்பது கேள்விக்குறியே. கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. ஒரு காலத்தில் தன்னுடைய மகளோ அல்லது மகனோ தேர்ச்சி பெறவேண்டும் என வேண்டிய பெற்றோர்கள், தற்சமயம் இன்னும் பத்து மதிப்பெண்கள் ஏன் குறைவாகப் பெற்றாய் என பிள்ளைகளை குட்டுகின்ற சபாக்கேடான நிலை உருவாகியுள்ளது.

இத்தகைய குட்டு என்பது அடுத்தமுறை அந்த பத்து மதிப்பெண்களைச் சேர்த்து பெறவேண்டி தருகின்ற உற்சாகக் குட்டு அல்ல. மாறாக பத்து மதிப்பெண் குறைவாக பெற்றதால் பத்தாயிரம் ரூபாய் அதிகமாக கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும் என்கின்ற ஆவேச குட்டு ஆகும்.

இத்தகைய சூழ்நிலையில் எனக்கு அறிமுகமான நண்பர் ஒருவரின் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக கோவையில் உள்ள ஒரு சில தனியார் கலைக் கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவிற்கு எத்தகைய கல்வி கட்டணங்கள் பெறப்படுகின்றன. இக்கட்டணங்கள் எந்த அளவுகோலில் நிர்ணயிக்கப்படுகின்றன என தெரிந்துகொள்ள ஒர சிறு விசாரிப்பை தொடர்ந்தபோது அவர்கள் கூறிய கட்டணங்களைக் கேட்டு பிரமித்துப்போனேன்.

கோவையின் மையப்பகுதி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் பாடப்பிரிவிற்கு கல்வி கட்டணம் விசாரித்தபோது, கல்லூரியில் சேர்க்கை கட்டணம் 23,050 ரூபாய் முதல் தவணையாகவும், பிறகு ஆறு மாதத்திற்கு ஒருமுறை 8,000 ரூபாய் கல்விக் கட்டணமாக செலுத்தவேண்டும் என்றும் தெரிவித்தனர். அப்பா(டா) சாமி காப்பாத்து!

அடுத்து கோவையில் மிக பிரபலமான மூன்று எழுத்து இனிசியல் கொண்ட கல்லூரி பீளமேடு பகுதியில் அமைந்துள்ளது. இதில் அதே பாடப்பிரிவிற்கு விசாரித்தபோது, ஆண்டுக் கட்டணம் ரூ.21,000. இதில் இரண்டு வகையுண்டாம். ஒன்று மெரிட், மற்றொன்று சுயநிதி. இரண்டுக்கும் ஆண்டுக் கட்டணம் ஒன்று என்றாலும் சுயநிதி பிரிவிற்கு கூடுதலாக சேர்க்கை கட்டணம் செலுத்தவேண்டுமாம்.

சரி, சேர்க்கைக் கட்டணம் எவ்வளவு என விசாரித்ததில் அது ஆண்டுக் கட்டணத்தைவிட சுமார் 10 முதல் 20 மடங்குவரை தகுதிக்கு தகுந்தவாறு இருக்குமாம் (சுமார் 2 லட்சம் முதல் 5 லட்சம்).

எதற்கும் ஒரு நப்பாசை என கூறுவார்களே அதேபோல மெரிட் சீட் எப்படி நிர்ணயிப்பார்கள் என்று கேட்டபோது, மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவனைவிட இரண்டு மூன்று மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் மட்டும்தான் இந்த கோட்டாவில் அடங்குவார்களாம். அப்படி யாரும் விண்ணப்பம் அளிக்கவிலை என்றால் மெரிட் சீட்களும் சுயநிதியாய் மாறிவிடுமாம் என்றார் கல்லூரி பிரதிநிதி.

இதற்கடுத்து கோவை பாலக்காடு ரோடு கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விசாரித்தபோது, அவர்கள் கூறிய பதிலைக் கேட்டு நிஜமாகவே பயந்துபோனேன்.

நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் எந்த பாடப்பிரிவு எடுத்து படித்திருந்தாலும் பரவாயில்லை, எங்கள் கல்லூரியில் உள்ள அறிவியல், கணினி, வணிகவியல், கணிதவியல் என நீங்கள கேட்கும் எந்த பாடப்பிரிவும் உடனடியாக கொடுக்கிறோம் என்றனர். எத்தனை சீட்டுகள் ஒரு பாடப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எத்தனை காலியாக உள்ளது என எந்த கணக்கும் கிடையாது. சேருபவர்கள் சேரும்வரை சேர்த்துக்கொண்டே இருப்பார்கள் போலிருக்கிறது.

சரி எங்களுக்கு தேவையான வணிகவியல் பாடப்பிரிவிற்காண கட்டணமாக அவர்கள் சொன்னது, சேர்க்கை கட்டணம் ரூ.23,500. பிறகு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பருவக் கட்டணம் ரூ.10,500ம் கூடுதலாக ரூ.2500. எதற்கு இந்த ரூ.2500 என்று கேட்கிறீர்களா? துடைப்பம் வாங்கவாம். அதாங்க பராமரிப்பு செலவிற்காம்.

அடுத்து இதே பாலக்காடு மெயின் ரோட்டில் உள்ள மற்றொரு கல்லூரியில் விசாரித்தபோது, ஏதோ சந்தைக் கடைக்குள் நுழைந்தது போல இருந்தது அவர்களது அணுகுமுறை. நாங்கள் விரும்பிய வணிகவியல் பாடப்பிரிவை கேட்டதும், "அச்சச்சோ! இப்பத்தான் சார் இந்த குரூப் அட்மிஷன் முடிஞ்சுது. ம்! பரவாயில்ல, உங்களுக்காக ஒரு சீட் கஷ்டப்பட்டு (?!) ஏற்பாடு பண்ணித் தர்றோம்" என்றனர் நம்மிடம் கரிசனமாக. சரி, கட்டணம் எவ்வளவு எனக் கேட்டோம். சேர்க்கை கட்டணம் ரூ.24,500. பிறகு ஆறு மாதத்திற்கு ஒருமுறை பருவக் கட்டணமாக ரூ.11,500 கட்ட வேண்டுமாம். ஆளை விட்டால் போதுமடா கிருஷ்ணா! என வெளியேறினோம்.

காலையிலிருந்து அலைந்த சோர்வில் அப்படியே கோவை விமான நிலையத்திற்கு அருகே காளப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் விசாரிக்கச் சென்றோம். அவர்கள் கூறிய கட்டணம் தலையையே சுற்றவைத்துவிட்டது. சேர்க்கை கட்டணம் ரூ.29,000. பிறகு ஆறு மாதத்திற்கொருமுறை ரூ.14,000 பருவக் கட்டணமாம்.

இதற்கே தலையில் கையைவைத்துக் கொண்டிருக்கையில் எங்கள் கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பும் உண்டு என கூடுதல் தகவல் சொன்னார். சரி, அதற்கு எவ்வளவு கட்டணம் என்று விசாரித்தோம். அவர்கள் கூறிய பதில் எங்களை மேலும் ஆச்சரியப்படவைத்தது. பட்டப்படிப்பிற்கு அவர் கூறிய கட்டணத்தில் 3ல் 1 பங்குதான் கட்டணமாம். ஏன் என்று விசாரித்ததில் இப்போதெல்லாம் முதுநிலைப் படிப்பிற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம். அதனால்தான் நாங்களும் கட்டணத்தை குறைத்துவிட்டோம் எனக் கூறினார்கள்.

இப்படிக் கொள்ளையடித்தால் யார்தான் சேர்வார்கள் என மனதில் எண்ணியபடியே வெளிவந்தோம். தொடர்ந்து எங்கு செல்லலாம் என்று யோசித்துவிட்டு, அரசு கலைக் கல்லூரியிலும் சென்று விசாரிப்போம் என்று முடிவு செய்து புறப்பட்டோம். அரசு கலை அறிவியல் கல்லூரியில் அதே வணிகவியல் பாடப்பிரிவிற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பருவக் கட்டணமாக வெறும் ரூ.325 மட்டும் கட்டினால் போதும் என்றபோது எங்களுக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவே இல்லை. அப்போதுதான் அரசின் கையில் இருக்கும் நிறுவனத்திற்கும், தனியார் வசம் இருக்கும் நிறுவனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்திப் பார்க்கமுடிந்தது.

மேலே குறிப்பிட்ட தனியார் கல்லூரிகள் அனைத்திற்கும் 80 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தால் பெறப்படுகின்ற கட்டணங்கள். மதிப்பெண்கள் குறைய குறைய கட்டணம் கூடிக்கொண்டே செல்லும். இது தவிர மேற்கொண்டு போக்குவரத்து கட்டணம், கல்லூரி நடத்தும் விழாக்களுக்கு நன்கொடைக் கட்டணம் எனச் சேர்ந்து மேலும் ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையில் தனியாக பெறப்படும். இத்தனை கட்டணம் வாங்கினாலும் இன்னும் பல கல்லூரிகளுக்கு சுற்றுச்சுவர் கூட கட்டப்படவில்லை. அரசுப் பேருந்து வசதி இல்லாத பாதைகளில் அல்லது பிரதான சாலையிலிருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் நடந்து அல்லது தனியாக வாகன வசதி இருந்தால் மட்டுமே செல்லமுடியும் என்கிற நிலையும் உள்ளது. மலையடிவாரங்களில் அமைந்துள்ள சில கல்லூரிகளில் யானைகள் வந்து போகும் பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது.

சரி, அப்படியிருந்தும் ஏன் இவ்வளவு கட்டணம் பெறப்படுகிறது என்று தனியார் கல்லூரி ஊழியர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் ஒன்றுதான் "விலைவாசி ஏறிப்போச்சுல்ல..."

கடந்த சில மாதங்களாக நமது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது, வளர்ச்சியடைந்துள்ளது என தொடர்ந்து ஒவ்வொரு தொலைக்காட்சியாய் தேடித்தேடி பேட்டி அளித்துக்கொண்டிருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆமாம், இக்கல்லூரிகளில் கட்டணங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என இப்போதுதான் கண்கூடாகக் காணமுடிகிறது. இந்திய தேசத்தின் கல்விக் கொள்கையை தனியாரிடம் அளித்ததன் மூலம் கல்வி கொள்ளைக்கு வித்திட்டுள்ளது அரசு. கொள்ளை கொள்ளையாய் பணம் பிடுங்கும் தனியார் கல்வி நிறுவனங்களால் காசு இருப்பவனுக்கே கல்வி என்றொரு எழுதப்படாத விதி உருவாகியிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு வரும் காலத்திலாவது இக்கொள்ளையை தடுத்து நிறுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.

மேலும், மத்திய அரசு ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி வரை இலவசக் கல்வி என்பதை உத்திரவாதப்படுத்தவேண்டும். கல்விக்கென மத்திய அரசு நிதியில் 6 விழுக்காடு மாநில அரசு நிதியில் 10 விழுக்காடும் ஒதுக்கி அவற்றை உறுதிப்படுத்தவேண்டியதும் அவசியமாகும்.

"இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்"
-பாரதியார் Related Posts with Thumbnails

உணவு நெருக்கடியும் உலக நிலவரமும்... - இரா. நந்தகுமார்

"தென் அமெரிக்க நாடான ஹெய்ட்டியில் ஒரு மதிய உணவு நேரம்...
சார்லின் டூமாஸ் என்னும் 16 வயது ஏழைப்பெண்ணின் வீடு. குடும்பத்தினர் உணவு உண்ணத் தயாராகிறார்கள். உணவும் பரிமாறத் தயாராக இருக்கிறது. நீங்கள் நினைப்பது போல் 16 வகைக் குழம்பு, கூட்டுகளுடன் ஆவி பறக்கும் அரிசிச் சாப்பாடல்ல அவர்கள் உண்டது. மாறாக மண்ணால் செய்யப்பட்ட ஒரு வகைக் கலவையையே அவர்கள் உணவாக உட்கொண்டனர். ஆம்... வெறும் மண்தான், அதற்கு மேலாக எதுவும் இல்லை."
-மேற்கண்ட செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்திரிகைகளில் வெளியாகி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உணவுப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள சூழலில் தங்களுக்கு மண்ணைத் தவிர வேறு புகலிடம் இல்லை என்கின்றனர் ஹெய்ட்டி மக்கள். அங்கு ஒரு படி அரிசியின் விலை குறுகிய காலத்தில் இரண்டு மடங்கிற்கும் மேலாக உயர்ந்துவிட்டது. அதனால் மண்ணைத் தின்னும் அவல நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
பிரச்சனையின் தீவிரத்தை எடுத்துக்காட்ட ஹெய்ட்டி ஒரு சிறு உதாரணம் மட்டுமே. உலக நாடுகள் பலவற்றிலும் இதே நிலைமைதான். அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை விண்ணை முட்டிக்கொண்டு பறக்கும் சூழலில், வாயையும், வயிற்றையும் கட்டிக் கொண்டு வாழ்வதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். பட்டினிச் சாவுகளும், ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்படும் சாவுகளும் நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கின்றன. ஐ.நா. சபையின் அதிகாரப்பூர்வ புள்ளி விபரப்படி, உலகில் வாழும் 6 பில்லியன் மக்களில் ஆறில் ஒரு பங்கினர் (1 பில்லியன்) கடுமையான பட்டினியால் வாடுகின்றனர். ஆனால் இந்தப் புள்ளி விபரத்தில் வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அவர்களையும் கணக்கில் கொள்வோமேயானால், உலக மக்கள் தொகையில் சரிபாதிப்பேர், அதாவது 3 பில்லியன் மக்கள் போதுமான உணவின்றி வாடுவதாகத் தெரியவந்துள்ளது.
ஐ.நா சபையின் மற்றொரு அறிக்கையைப் பார்த்தோமேயானால் இது மிகையான அளவல்ல என்பது உறுதியாகும். உலகில் தினமும் 18 ஆயிரம் குழந்தைகள் (தோராய அளவு) ஊட்டச்சத்துக் குறைவால் மரணமடைகின்றனர் என்று அவ்வறிக்கை கூறுகிறது. (ஐ.நா, 2007 அறிக்கை)
உற்பத்திக் குறைவு காரணமா?
உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கும், அதனால் ஏற்படும் பட்டினிச் சாவுகளுக்கும் உணவு உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமா என்றால் இல்லை என்பதே பதிலாகும். ஏனெனில் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடுகள், உபரியாக உணவு உற்பத்தி செய்யும் நாடுகளில் கூட உணவுக்கும், மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்துதான் காணப்படுகிறது. உலகின் வளமை மிக்க நாடாகக் கருதப்படும் அமெரிக்காவின் வேளாண்மைத்துறை அந்நாட்டில் 35 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உணவுப் பாதுகாப்பற்ற சூழலில் வாழ்வதாகக் கூறுகிறது. இதில் சுமார் 13 மில்லியன் பேர் குழந்தைகளாவர். ஒருபுறம் மிதமிஞ்சிய உணவு உற்பத்தி, மறுபுறம் கடும் பட்டினி. இன்று பல நாடுகளில் இதுதான் நிலைமை.
உணவு பெறுவது அடிப்படை உரிமையே!
பளபளக்கும் தங்க வைர நகைகள், டி.வி., ஃபிரிட்ஜ் போன்ற எலக்ட்ரிக் சாதனங்கள், கார்கள், டூ வீலர்கள் போன்றவற்றை ஒரு வகையில் ஆடம்பரப் பொருட்கள் என்று கூறலாம். வசதிகளைப் பெருக்குமே தவிர, ஒருவர் உயிர்வாழ இப்பொருட்கள் இன்றியமையாத் தேவைகள் அல்ல. ஆனால் உணவு இவை போன்றதல்ல. அது ஒரு மனிதன் உயிர்வாழ அடிப்படைத் தேவையாகும். இருந்தபோதிலும் உணவு மற்ற ஆடம்பரப் பொருட்களுடன் சேர்த்து ஒரே தராசில் வைத்து நிறுக்கப்படுகிறது. அதாவது நகை, கார்களைப் போலவே காசிருப்பவர்கள் மட்டுமே உணவுப் பொருட்களையும் வாங்க முடியும் என்ற நிலைமை நடைமுறையில் இருக்கிறது. பணம் படைத்தவர்கள் தின்று கொழுக்க, வறியவர்கள் அரை வயிறும், கால் வயிறுமாக உழன்று கொண்டிருக்கிறார்கள். உணவுக்கான அடிப்படை உரிமைகூட மறுக்கப்படுகிறது. முதலாளித்துவ சமூக அமைப்பில் வியாபித்திருக்கும் இலாப வெறி இவ்வாறு மனிதர்களை மவுனமாக வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. இன்று நேற்றல்ல பல்லாண்டு காலமாக இந்நிலை தொடர்கிறது. இப்போது ஓரளவு முற்றிவிட்டதுதான் அனைவரது கவனமும் உணவுப் பிரச்சனை மீது திரும்ப உடனடிக் காரணம் ஆகும்.
இந்த உணவு நெருக்கடி பொருளாதார வல்லுனர்களால் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது.
1. குறுகிய கால உணவு நெருக்கடி
2. நீண்ட கால உணவு நெருக்கடி
குறுகிய கால நெருக்கடி அல்லது தற்போதைய நெருக்கடி
தற்போதைய கடும் உணவு நெருக்கடி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. விளைவுகள் வேகமாகவும், அதிதீவிரமாகவும் இருந்ததால் அனைவரது பார்வையும் இதன் மேல் விழுந்தது.
உலகச் சந்தையில் சுமார் 60 விவசாய விளைபொருட்களின் விலைவாசி கடந்த ஆண்டு 37 சதவீதமாக அதிகரித்துக் காணப்பட்டது. முந்தைய ஆண்டைக் காட்டிலும் இது 23 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்தமாக 37 சதவீதம் என்றாலும் அடிப்படை உணவுப் பொருட்களான தானியங்களின் விலைவாசி மிகக்கடுமையாக உயர்ந்தது. சோளத்தின் விலை 70 சதவீதம், அரிசி 100 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து காணப்பட்டது. கோதுமை மற்றும் சமையல் எண்ணெயின் விலைகள் சாதனை அளவை எட்டின. இன்னும் தொடர்ந்து எகிறிக்கொண்டே இருக்கின்றன. வரலாறு காணாத இந்த விலை உயர்வுக்குக் காரணங்கள்தான் என்ன?
1. பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு:
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வில் பெரும்பங்கு வகிக்கிறது. விவசாயம் இயந்திரமயமாக்கப்பட்டதன் காரணத்தால் விவசாயக்கருவிகளை இயக்குவதற்கும், விளைபொருட்களை மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்திற்கும் பெட்ரோலியம் அவசியத் தேவையாகும். எனவே அதில் ஏற்பட்டுள்ள கடும் விலை உயர்வு உணவுப்பொருட்களின் விலை உயர்வில் எதிரொலிக்கிறது.
2. உயிர்ம எரிபொருட்களின் உற்பத்தி
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது, பெட்ரோலியப் பொருட்களுக்கு மாற்று என்பது போன்ற பிரச்சாரங்களுடன் ஊக்குவிக்கப்படும் உயிர்ம எரிபொருட்களின் உற்பத்தியும் உணவுப் பொருட்களின் விலை உயர்விற்குக் காரணமாகும். பலர் நினைத்துக் கொண்டிருப்பதுபோல் வெறும் காட்டாமணக்குச் செடியிலிருந்து மட்டும் இந்த எரிபொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. அத்தியாவசிய உணவுப் பொருட்களான மக்காச்சோளம், சோளம், சோயா மற்றும் உணவு எண்ணெயிலிருந்தும் இவை பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் கடந்த ஆண்டு உற்பத்தியான சோளத்தில் 20 சதவீதம் எத்தனால் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது. இன்னும் 10 ஆண்டுகளில் தான் உற்பத்திசெய்யும் மொத்த சோளத்தில் மூன்றில் ஒரு பங்கை உயிர்ம எரிபொருள் தயாரிப்புக்கு ஒதுக்கவும் அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. அமெரிக்க மக்களின் பிரதானமான உணவான சோளம் இவ்வாறு வேறு வகையில் பயன்படுத்தப்படுவது ஒருவகையான உணவுத் திருட்டே என்று குமுறுகிறார்கள் மக்கள். அமெரிக்கா மட்டுமல்ல ஐரோப்பிய யூனியன் நாடுகளிலும் உயிர்ம எரிபொருள் உற்பத்தி ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் மூன்றாம் உலக நாடுகளும் மெதுவாக தங்கள் கவனத்தை இந்த மாற்று சக்தியிடம் செலுத்தத் துவங்கியுள்ளன.
உயிர்ம எரிபொருட்கள் உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதா என்றால் இல்லை. சுற்றுச்சூழல் மாசுபாட்டைப் பெருமளவில் குறைக்கின்றன என்று பரவலாகப் பிரச்சாரம் செய்யப்பட்டாலும், மாசுபாட்டைக் குறைப்பதில் அவ்வளவு சிறப்பான வகையில் இவை செயல்படுவதில்லை என்கின்றனர் வல்லுனர்கள். படிம எரிபொருட்களுக்குச் சமமான அளவிலோ அல்லது அதைவிட அதிகமாகவோகூட உயிர்ம எரிபொருட்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டை விளைவிக்கின்றன என்கிறார்கள் அவர்கள்.
உயிர்ம எரிபொருளுக்காக வளர்க்கப்படும் தாவரங்கள் கரியமில வாயுவை (கார்பன்-டை-ஆக்ஸைடு) பெருமளவில் கிரகித்துக் கொள்கின்றன என்பது உண்மைதான். எனினும் பல தாவரங்கள் தாம் கிரகித்ததைவிட அதிக அளவில் கரியமில வாயுவை வெளிவிடுகின்றன. மேலும் நச்சு உரங்களைப் பயன்படுத்துவது, அறுவடை முறை மற்றும் உயிர்ம எரிபொருள் சுத்திகரிப்பு முறை ஆகியவற்றின் மூலமும் குறிப்பிடத்தக்க அளவு கரியமில வாயு வெளியேறுகிறது. இதைத் தவிர எரிபொருளுக்கான செடிகளை வளர்ப்பதற்காகக் காடுகளும் பெருமளவில் அழிக்கப்படுவதால் இவற்றை (உயிர்ம எரிபொருட்கள்) சுற்றுச் சூழலுக்கு நண்பன் என்று கூறுவதைவிட பகைவன் என்று கூறுவதே சாலப்பொருந்தும்.
உயிர்ம எரிபொருள் தொழில்நுட்பத்தில் இவ்வளவு பின்னடைவுகள் இருந்தாலும் அவற்றின் உற்பத்தி ஊக்குவிக்கப்படுவது ஏன்? இலாப வேட்கையே காரணம் என்று ஒற்றை வரியில் பதில் கூறிவிடலாம். இந்த வகை எரிபொருட்களின் உற்பத்தியில் ஈடுபடும் பகாசுர நிறுவனங்கள், தங்களின் குறுகிய நோக்கத்திற்காக மக்களை ஏமாற்றும் வாதங்களுடன் உற்பத்தியைக் குவிக்கின்றன. மேலும் விளைநிலங்களின் மீதும், சந்தையிலும் இவை ஒரு ஏகாதிபத்தியப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. எனவே இந்த இலாபபெறி பிடித்த பன்னாட்டு நிறுவனங்களிடம் வளரும் நாடுகள் சிக்கிக் கொள்வது ஒருவகையான காலனியாதிக்கத்தையே ஏற்படுத்தும். எனவே எந்த வகையிலும் சிறப்பாக இல்லாத உயிர்ம எரிபொருட்களை உற்பத்தி செய்யாமலிருப்பதே நல்லது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொருளாதார அறிஞர்களும் தெரிவிக்கிறார்கள்.

3. அதிகரிக்கும் இறைச்சித் தேவை
உலக அளவில் இறைச்சித் தேவை அதிகமானதும் உணவு தானியங்களின் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகும். 1961ல் வெறும் 71 மில்லியன் டன்களாக இருந்த இறைச்சித் தேவை, 2007ல் 284 மில்லியன் டன்களாக உயர்ந்துவிட்டது. எனவே இறைச்சிக்காக அதிக அளவில் விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றிற்குத் தீனியாகப் பல இடங்களில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இது தானியங்களின் விலை உயர்வில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
4. இழக்கப்படும் விளைநிலங்கள்
பெரும் எண்ணிக்கையில் விளைநிலங்கள் இழக்கப்படுவதன் காரணமாகவும் உணவு உற்பத்தி குறைந்து விட்டது. இது உணவுப் பொருட்களின் விலை உயர்விற்கு முக்கியக் காரணமாகும். கடந்த சில ஆண்டுகளுக்குள்ளாக சீனாவில் 70 இலட்சம் ஏக்கர் விளைநிலமும், வியட்நாமில் 7 இலட்சம் ஏக்கரும் இழக்கப்பட்டுள்ளன. மேலும் ஏக்கருக்கான உற்பத்தித் திறனும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இந்நிலைமையானது உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடுகள் மற்றும் ஏற்றுமதி செய்த நாடுகளைக்கூட இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளியுள்ளது. இதுவும் உணவுப்பொருட்களின் விலை உயர்வில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
5. இயற்கைப் பேரிடர்கள்
வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைக் காரணங்களும் உணவு உற்பத்தியில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. அதிகளவில் கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடான ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வறட்சி, அரிசி ஏற்றுமதி நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட புயல் ஆகியவை இந்தத் தானியங்களின் விலை உயர்வில் எதிரொலித்தன. மேலும் இதே காலகட்டத்தில் (2007) வடசீனாவின் ஒரு பகுதியிலும் வறட்சி ஏற்பட்டு பெருமளவில் உணவு தானியங்கள் இறக்குமதி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
6. கள்ளச்சந்தையும், ஊக வணிகமும்
எல்லாவற்றிற்கும் மேலாக ஊகவணிகமும், கள்ளச் சந்தையும் உணவுப் பொருட்களின் விலையை எட்டா உயரத்திற்கு கொண்டு சென்று, அப்பாவி மக்களை வாட்டி, வதைத்து வருகின்றன. ஆன்லைன் முறையில் நடத்தப்படும் இந்தக் கொள்ளையை (ஊக வணிகம்) நிறுத்தாவிட்டால் விலைவாசி என்றென்றைக்கும் கட்டுக்குள் வராது என்பது நிதர்சனம்.
கண்டனக்குரல்களும், குறுகிய காலத் தீர்வுகளும்
விலைவாசி உயர்வுக்கெதிராக உலகம் முழுவதும் கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன. போராட்டங்கள் பெருமளவில் நடத்தப்பட்டு வருகின்றன. மெராக்கோ, செனகல், மெக்சிகோ, உஸ்பெகிஸ்தான், ஏமன் போன்ற நாடுகளிலும், அண்டை நாடான பாகிஸ்தானிலும் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்றுள்ளன. இந்தியாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிகளின் தலைமையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்கள் சில குறுகிய காலத் தீர்வுகளை எட்ட உதவியுள்ளன.
சீனா அடிப்படை உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியா, எகிப்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளன. ஐரோப்பிய யூனியன் நாடுகள் பல உயிர்ம எரிபொருள் குறித்த தங்கள் பார்வையை ஓரளவாவது மாற்றிக் கொண்டுள்ளன. ஆனால் இவை மட்டுமே உணவுப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தாது. அரசுகள் என்றைக்கு மக்கள் நலனுக்கான பொருளாதாரக் கொள்கைகளைச் செயல்படுத்துகின்றனவோ அன்றுதான் இப்பிரச்சனை முடிவுக்கு வரும்.
இது நீண்டகால நெருக்கடியின் பிரதிபலிப்பே!
தற்போதைய உணவு நெருக்கடியானது ஆண்டுக்கணக்காக நிலை பெற்றிருக்கும் நீண்டகால நெருக்கடியின் பிரதிபலிப்பாகும். உணவு உற்பத்தி முறையில் ஏற்பட்டுள்ள விரும்பத்தகாத அடிப்படை மாற்றங்களே இத்தகைய நெருக்கடியை உருவாக்கியுள்ளன. 1990களில் மூன்றாம் உலக நாடுகளில் அமல்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சந்தையைத் திறந்துவிட்டது. இந்த திறந்த சந்தைப் பொருளாதாரம் விவசாயத்துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலக வங்கி, ஐ.எம். எஃப் போன்ற அமைப்புகளால் பரிந்துரை செய்யப்பட்ட வழிகாட்டுதல்களை மூன்றாம் உலக நாடுகள் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றத் துவங்கின. விளைவு? விவசாயிகள் நசுக்கப்பட்டனர். சிறுவிவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
விவசாயத்துறையில் அரசின் தலையீடு இருக்கவேகூடாது என்பதே திறந்த சந்தைப் பொருளாதாரத்தின் நிர்பந்தமாகும். விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் இடையேயான உறவில் அரசின் தலையீடு இல்லாமலிருப்பதே சிறந்த பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று இவர்கள் கூறுகிறார்கள். ஆனால் உரங்கள், விதைகள் மற்றும் மின்சாரத்திற்கு மானியம் அளிப்பது, விளைபொருட்களைக் கொள்முதல் செய்வது ஆகியவை முதல் உச்சகட்டமாக நிலச்சீர்திருத்தம் செய்வதுவரை அனைத்திற்கும் அரசின் தலையீடு அவசியம். அத்தலையீடுகள்தான் சாமானிய விவசாயிகளின் நலன்களைக் காக்கும். மாறாக, தலையிடாமல் இருப்பது பகாசுர விதைக்கம்பெனிகள் மற்றும் உரக்கம்பெனிகளின் இலாப வேட்டைக்கு விவசாயத்தை இரையாக்குவதேயாகும்.
இரு உதாரணங்கள்:
இத்தகைய தீமை விளைவிக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்திய ஹெய்ட்டி நாட்டில் உணவுப் பற்றாக்குறை நிலவுவதை ஏற்கனவே பார்த்தோம். அந்நாட்டின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் இதற்குக் கூறும் காரணத்தைக் கேளுங்கள்.
"நாங்கள் (ஹெய்ட்டி அரசு) உணவுப் பொருட்களின் விலையுயர்வுப் பிரச்சனையில் தலையிட்டுத் தீர்வுகாண முடியாது. ஏனெனில் நாங்கள் சந்தை நிர்பந்தங்களுக்கு ஆட்பட வேண்டியுள்ளது", என்கிறார் அவர். (ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம். டிச.9, 2007)
அதே வேளையில் தான் கடைப்பிடித்த புதிய பொருளாதாரக் கொள்கைகளைக் கைவிட்டு, புதிய பாதையில் செல்லத் துவங்கிய ஆப்பிரிக்க நாடான மாலவி (ஆயடயஎi) நாட்டில் மிகவிரைவான முன்னேற்றங்கள் ஏற்படத்துவங்கின. உரங்களுக்கும், விதைகளுக்கும் கொடுக்காமல் நிறுத்திய மானியத்தை அந்நாடு திரும்ப வழங்கத் துவங்கியது. விவசாயிகள் புது உத்வேகத்துடன் உற்பத்தியில் ஈடுபட்டனர். உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியது. அந்நாட்டின் உணவுத் தேவை பூர்த்தியடைந்ததுடன் அண்டை நாடான ஜிம்பாப்வேக்கும் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்கிறது அந்நாடு! (நியூயார்க் டைம்ஸ். டிச.2, 2007)
வல்லரசு நாடுகளின் இரட்டை வேடம்
அனைத்து வளரும் நாடுகளிலும் திறந்த சந்தை முறையை அமல்படுத்த துடிக்கும் பொருளாதார வல்லரசுகள் தங்கள் நாட்டில் இந்த முறையைப் பின்பற்றுகின்றனவா என்றால் இல்லை. அந்த நாடுகளில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் கிடைக்கின்றன; உரங்கள் கிடைக்கின்றன; அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்கின்றன. இந்த நாடுகள்தான் மூன்றாம் உலக நாடுகளை விவசாயத்திற்கு மானியம் தரவேண்டாம் என்கின்றன. ஏன் இந்த இரட்டை நிலை? தங்கள் நாட்டின் பன்னாட்டுக் கம்பெனிகளைப் பாதுகாப்பதற்காகத்தான். கார்கில், மான்சாண்டோ மற்றும் பல பகாசுர நிறுவனங்கள் வளரும் நாடுகளில் விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விற்கின்றன. மானியங்களால் இந்நிறுவனங்களின் சந்தைகள் பாதிக்கப்படாமல் இருக்கவே அந்நாடுகள் இவ்வித இரட்டை நிலையை எடுக்கின்றன.
இப்பன்னாட்டுக் கம்பெனிகள் விற்கும் மரபணு மாற்ற விதைகளைப் பயன்படுத்துவது பெரு விவசாயிகளுக்கு மட்டுமே இலாபமளிக்கிறது. சிறு விவசாயிகள் விவசாயத்தைத் தொடரமுடியாமல் தவிக்கிறார்கள். கடன் சுமை வேறு கழுத்தை நெரிக்கிறது. தற்கொலைகள் தொடர்கதைகளாகின்றன. இந்தியாவில் கடந்த ஓராண்டில் மட்டும் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பல விவசாயிகள் நிலங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கிப் படையெடுக்கிறார்கள். விளைவாக, நகர்ப்புறங்களில் சேரிகள் பெருகுகின்றன. மக்களின் வாழ்நிலையோ அதலபாதாளத்திற்குச் செல்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் புதிய ஆர்வம்
விதைகளையும், உரங்களையும் விற்பதுடன் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் திருப்தியடையவில்லை. அவை மூன்றாம் உலக நாடுகளில் விவசாய நிலங்களை வாங்கிக் குவிப்பதில் பெருமுனைப்பு காட்டுகின்றன. குளோபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் பிரேசில் நாட்டில் 34,000 ஏக்கர் விளைநிலத்தை வாங்கியுள்ளது. அதில் சுமார் 1600 ஏக்கர் பரப்பளவில் வெறும் சோயாபீன்ஸ் மட்டுமே பயிரிடப்பட்டுள்ளது! உருகுவேயில் ஒரு நியூசிலாந்து நிறுவனம் ஏறக்குறைய 1 லட்சம் ஏக்கர் விளைநிலத்தை வளைத்துப் போட்டுள்ளது. இதே போல பிரேசில், அர்ஜென்டினா மற்றும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் பெருமளவில் விளைநிலங்களை வாங்கிக் குவித்துள்ளன. இது சிறு விவசாயிகளை மட்டுமல்ல பெரு விவசாயிகளையும் பாதிக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மேலும் இவ்வாறு மிகப்பெரிய பரப்பளவில் பயிரிடப்படும் விளைபொருட்கள் உயிர்ம எரிபொருள் தயாரிப்புக்கே அர்ப்பணிக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
அக்கரைமிக்க தீவிரமான செயல்பாடுகள்:
கருத்தியல் ரீதியாக பசியை வெற்றி கொள்வது மிக எளிது. ஆனால் நடைமுறையிலோ அது மிகவும் கடினமான ஒன்றாகும். முதலில் உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். மேம்போக்காக அன்றி உண்மையிலேயே அக்கறையுடன் அரசுகள் இப்பிரச்சனையை அணுகவேண்டும்.
இங்கு ஹியூகோ சாவேஸின் வெனிசுலா அரசு பட்டினிக்கு எதிராக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை எடுத்துக்கூறுவது பொருத்தமாக இருக்கும். அந்நாட்டில் ஏழை மக்களின் குடியிருப்புகள்தோறும் உணவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உண்மையிலேயே இத்திட்டம் மிகச்சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. ஏழைகளின் நலனைக் காக்கும் அக்கறையுடன் செயல்படுத்துவதால், பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் அரசுக்கு ஒத்துழைக்கிறார்கள். ஓரளவு வசதி படைத்தவர்கள்கூட தன்னெழுச்சியாகத் தங்கள் வீடுகளில் உணவு சமைத்து உணவு மையங்களுக்குத் தருகிறார்கள். முழுக்க முழுக்க அரசே இத்திட்டத்தைச் செயல்படுத்தினாலும், பொதுமக்களின் ஆர்வத்திற்கு அணை போடாமல் அவர்களையும் சேர்த்துக்கொண்டு திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திவருகிறது. உணவு மையங்களுடன் மலிவு விலை விற்பனைக் கூடங்களும் அதிகளவில் அமைக்கப்பட்டுள்ளன.
பிரேசில் நாட்டில் குடும்ப நிதித்திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நாளுக்கு 2 டாலருக்கும் குறைவாகச் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு 53 டாலர் வழங்கப்படுகிறது. ஓரளவு வெற்றிகரமாகவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போதைய கடும் நெருக்கடியைச் சமாளிக்க இதுபோன்ற தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் சில தொலைநோக்குத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.
கியூபாவைப்போல் நகரத் தோட்டங்களை அமைத்து உணவு உற்பத்தி செய்வது ஒரு தொலை நோக்குத் திட்டமாகும். இதன் மூலம் நகர மக்களின் காய்கறித் தேவையை ஓரளவு முழுமையாக நிறைவு செய்யமுடியும். மிகத் தீவிரமான நிலச்சீர்திருத்தம் மேற்கொள்வதும் இன்றைய அவசர, அவசியத் தேவையாகும். இதன்மூலம் ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் விவசாயத்துறை இருப்பதை முடிவுக்குக் கொண்டுவந்து சிறு விவசாயிகளைக் காக்கமுடியும். மேலும் இங்கு இன்னொன்றையும் வலியுறுத்துவது பொருத்தமாக இருக்கும். பணப்பயிர்களுக்குக் கொடுப்பதைவிட அதிகமான முக்கியத்துவத்தை உணவுப் பயிர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதே அது. Related Posts with Thumbnails

wibiya widget