
இந்த வி்ஷயத்தில் அரசை மட்டும் குறை கூறுவதில் பயனில்லை. குடிமக்களாகிய நமக்குத்தான் அதில் முழுமையான அக்கறை வேண்டும். குப்பைகளை உருவாக்குபவர்களாக இருப்பவர்கள் நாம்தான். நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டை சுத்தமாக வைத்திருப்பதில் எத்தனை அக்கறை செலுத்துகிறோம். ஆனால் வாசலைத் தாண்டி அதனை நாம் நடைமுறைப்படுத்தியிருக்கிறோமா என்று நமக்கு நாமே கேள்வி கேட்டுக்கொள்வோம். பெரும்பாலும் இல்லை என்பதுதான் பதில். இங்கு வெளிநாடுகளில் ஒரு துண்டு காகிதத்தைக் கூட கீழே போடத்தயங்கி பாக்கெட்டில் போட்டுக்கொண்டு போய் வழியில் குப்பைத் தொட்டியைப் பார்த்து வீசிவிட்டுச் செல்கிறோம். ஆனால் அதே நாம் இந்தியாவில் போய் இறங்கியவுடன் என்ன செய்கிறோம். சர்வ சாதாரணமாக சாக்லெட்டைத் தின்றுவிட்டு காகிதத்தை அப்படியே வீசிவிட்டுச் செல்கிறோம், சிகரட்டை குடித்துவிட்டு காலுக்கடியில் போட்டு நசுக்கிவிட்டு சாவகாசமாக நடக்கிறோம். ஏதோ ஒரு நாட்டில் சரியாக இருக்கும் நாம், நமது தாய்நாட்டில் இப்படி நடப்பது எந்த விதத்தில் நியாயம்.
சரி இந்தியாவிற்கு வருவோம். இந்தியா சுதந்திர நாடு அங்கே எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம், நாம் நினைத்தபடி நடக்கலாம் என்பதாக நினைப்பதும், மேற்கண்ட செயல்களில் ஈடுபடுவதும் நமக்கான மதிப்பை மட்டுமல்ல நமது சந்ததிகளை நம் செய்கையால் சிறிது சிறிதாகஅழிப்பது போன்றதுதான். நானும் கூட இதுபோன்ற தவறுகளை சில மாதங்களுக்கு முன்பு வரை செய்ததுண்டு. ஆனால் இதன் அபாயத்தை முழுமையாக உணர்ந்தபோதுதான் எனக்கும் புரிந்தது. என் போன்றே தவறு செய்பவர்களும் இதைப் படித்த பிறகாவது தங்களது தவறை திருத்திக்கொள்வார்கள் என்பது எனது நம்பிக்கை. ஆம் எல்லா பிரச்சனைகளுக்கும் அரசே திட்டங்களையும் சட்டங்களையும் ஏற்படுத்திக்கொண்டிருக்க முடியாது. அப்படி திட்டமும் சட்டமும் இயற்றினால் எத்தனைபேர் அதன்படி நடக்கிறோம் என்பதும் கேள்விக்குறிதான். ஆகவே எல்லாவற்றிற்கும் அரசை குறை கூறுவதும் சரியல்ல. பொது இடங்களில் புகை பிடிக்கக்கூடாது, எச்சில் துப்பக்கூடாது போன்ற சட்டங்கள் கூட தமிழகத்தில் கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால் அவை நம்மால் கடைபிடிக்கப்படுகிறதா அல்லது அதன் பேரில் எவர் மீதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால் எதுவும் இல்லை. அப்படியானால் சட்டம் இயற்றியதே கேலிக்குறியதாகிவிட்டதே.
