போட்டி நிகழ்ச்சிகளும், உளவியல் பாதிப்பும் - இரா. நந்தகுமார்

சிஞ்சினி சென்குப்தா, கொல்கத்தாவைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி. படிப்புடன் நடனத்திலும் ஈடுபாடு கொண்ட சிஞ்சினி பல்வேறு போட்டிகளில் பங்குகொண்டு பரிசுகளைக் குவித்திருக்கிறாள். நடனத்தின் மீதிருந்த அதீத ஆர்வத்தாலும், கொடுத்த புகழுhழும் நடனமும் அவளது வாழ்வின் ஒரு அங்கமாகிப் போனது. வாழ்வும் மகிழ்ச்சியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. இந்நிலையில்தான் திடீரென வீசியது ஒரு பெரும்புயல். அதன் அதிதீவிரத் தாக்குதல் சிஞ்சினியை தற்போது ஒரு மனநோயாளியாக மருத்துவமனையில் முடக்கிப்போட்டுள்ளது. மேடைகளில் பம்பரமாகச் சுழன்று ஆடிய கை, கால்கள் இப்போது அசைவற்றுக் கிடக்கின்றன. பேச்சும் வருவதில்லை. அப்படி என்னதான் நடந்ததது சிஞ்சினியின் வாழ்வில்?
'ரியாலிட்டி ஷோ' எனப்படும், தொலைக்காட்சி நிறுவனங்கள் நடத்தும் போட்டி நிகழ்ச்சிகள் மக்களிடையே தற்போது வெகு பிரபலம். எப்பாடுபட்டாவது இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வெல்லவேண்டும் என்று ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். துவக்கத்தில் பொது அறிவுப் போட்டிகள் என்று ஆரம்பித்து பாட்டுப்போட்டி, நடனப்போட்டி என்று புதிய புதிய வடிவங்களில் இந்நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை மக்களிடையே இந்தளவுக்கு வரவேற்பு பெறக்காரணம் மிகுந்த ஆடம்பரமாக அவை நடத்தப்படுவதுதான். சினிமா பிரபலங்கள் வேறு நடுவர்களாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்று மேலும் விளம்பரங்களை நிகழ்ச்சிக்குத் தருகிறார்கள். போட்டியில் வெற்றிபெற்றால் கோடீஸ்வரர்களாகலாம் என்றும், தங்கத்திலேயே குளிக்கலாம் என்றும் தொலைக்காட்சிகள் அளிக்கும் விளம்பரங்களில் மயங்கி போட்டியாளர்களும் அதிகளவில் பங்கேற்கிறார்கள். விளைவாக, பங்கேற்பாளர்கள் ஆகிறார்களோ இல்லையோ, நிகழ்ச்சி நடத்துபவர்கள் எளிதாக பல கோடிகளுக்கு அதிபதிகளாகிவிடுகிறார்கள்.
இத்தகைய போட்டிகளில் எப்படியும் வெற்றிபெற்று பரிசுகளை வாங்கிவிடவேண்டும் என்ற தன்முனைப்பு மக்களுக்கு ஏற்படுவது என்பது இம்முதலாளித்துவ சமூக அமைப்பில் சாதாரணமானதுதான். ஆனால் உண்மையில் இதனை சாதாரணமானது என்று ஒதுக்கிவிடமுடியாது என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அளவுக்கு மீறிய எதிர்பார்ப்புடன் போட்டியில் கலந்து கொள்வதும், அதில் தோற்றுவிட்டால் நிலைகுலைந்து விடுவதும் இந்நிகழ்ச்சிகளில் சாதாரணமாக நாம் காணும் காட்சிகள் என்று கூறும் அவர்கள் என்பதுதான் ஆனால் உண்மையில் அவை மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்கள். யார் கண்டுகொள்கிறார்கள் இந்தக் கருத்துக்களை? தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
முதலில் வயது வந்தவர்களுக்கு மட்டுமே நடத்தப்பட்டுவந்த இத்தகைய போட்டிகள் தற்போது சிறுவர், சிறுமிகளுக்காகவும் பிரத்யேகமாக நடத்தப்படுகின்றன. இங்குதான் நாம் சிஞ்சினி சென்குப்தாவை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். அப்பெண்ணும் இதுபோன்ற ஒரு போட்டியில் பங்கேற்கச் சென்றிருந்தாள். முதல் இரண்டு சுற்றுகளில் எளிதாக வெற்றி பெற்றவளுக்கு மூன்றாவது சுற்றில் வந்தது சோதனை. போட்டிக்கு நடுவர்களாக வந்திருந்த சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் சிஞ்சினியின் ஆட்டத்திறனை மதிப்பீடு செய்து அவளைப் போட்டியிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர். அப்போது அவர்கள் முன்வைத்த கடுமையான விமர்சனங்கள் சிஞ்சினியை கடுமையாக பாதித்ததாக தெரிகிறது. இதையடுத்து அவள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டாள். முன்பே சொன்னவாறு அவளால் கை, கால்களை அசைக்க முடியவில்லை. முதலில் உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர், அங்கிருந்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிஞ்சினியை பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் மருத்துவமனையில் தற்போது சேர்த்துள்ளனர். மருத்துவர்களின் கூற்றுப்படி சிஞ்சினி ஒருவித நரம்புக்கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்று தெரியவந்துள்ளது. சிகிச்சை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்ற உள்ளுணர்வோடு பணம் சம்பாதிக்கும் வெறியும் சேர்ந்து மக்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது என்பது இதுபோன்ற சம்பவங்கள் மூலம் நிரூபணமாகிறது. ஒருபுறம் பெற்றோரின் இத்தகைய பேராசை, மறுபுறம் போட்டி நடுவர்களின் அதிமேதாவித்தனம் நிறைந்த விமர்சனங்கள் ஆகியவை சேர்ந்து குழந்தைகளைத் தாக்குகின்றன. இதனால் அவர்களுக்கு ஒருவித பயம் உருவாகி மன அழுத்தமும், மனரீதியான வேறுவகை பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
துள்ளித்திரிய வேண்டிய வயதில், தேவையற்ற சுமைகளைத் தந்து குழந்தைகளைத் துவளச்செய்யும் இதுபோன்ற நடவடிக்கைகள் இனிமேலும் தொடரக்கூடாது என்பதே சிஞ்சினி சென்குப்தாவின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம். Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget