கைபேசிகள் தோற்றுவிக்கும் புதிய உடல் நலக் குறைபாடுகள்


இன்று மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனமாக மாறியிருப்பது கைபேசிகள். சாதாரண கைபேசி தொடங்கி, ஸ்மார்ட்போன், டேப்ளட் எனப்படும் விலையதிகக் கணினிப் பயன்பாட்டுச் சாதனங்கள் வரை அனைத்தும் சிறுவர், பெரியவர் என்ற வயது வித்தியாசம் இல்லாமல்  அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றன.
அறிவியல் தொழில்நுட்பம் வழங்கிய அற்புதக் கண்டுபிடிப்பு இக்கைபேசிகள். ஆனால், அதனை அதிகம் உபயோகிப்பதால் ஏற்படும் எண்ணற்ற பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சிகளும் ஒருபக்கம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
முன்பு வந்த கைபேசிகளை விட இன்றுள்ள கைபேசிகள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவையாகவே உள்ளன. ஆனாலும், அதன் தீங்கு குறைந்திருக்கிறதே ஒழிய முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டதாக கூறமுடியாது.
கைபேசியில் தொடர்ந்து 6 நிமிடத்திற்கு மேல் பேசினால் கேன்சர் வரும் வாய்ப்புகள் உண்டென்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது. எனவே, தொடர்ந்து பேசுபவர்கள் இயர்போன்களைப் பயன்படுத்திப் பேசவேண்டும் என்றும், அப்போதுகூட கைபேசி உடலுக்கு அருகாமையில் இல்லாமல் தள்ளியிருக்கும்படியாக வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, கைபேசி கோபுரங்கள் மூலமாக பரவும் கதிர்வீச்சின் அளவை குறைக்கவேண்டும் என்றும், அருகருகே கோபுரங்கள் இல்லாமல் குறிப்பிட்ட இடைவெளியில்தான் அமைக்க வேண்டும் எனவும், மருத்துவமனை மற்றும் பொதுமக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளில் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. அது குறித்த ஆராய்ச்சி முடிவுகள் தங்களிடம் இல்லையென்றும் அது கூறிவிட்டது.
இப்படிக் கதிர்வீச்சு குறித்து எந்த முடிவும் சரிவர எடுக்க முடியாத நிலையில் புதியதாக கைபேசிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் கண்பார்வை குறை
பாடு ஏற்படும் என்ற அதிர்ச்சித் தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.
தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் கண் பரிசோத
னைக்கு வந்த ஜம்முவைச் சேர்ந்த 11 வயது சிறுவனைப் பரிசோதித்தபோது அவனுக்கு குறைந்த இடைவெளியில்  பாடப் புத்தகங்களைப் படிக்க முடிந்தது. ஆனால், தொலைவில் உள்ள பொருள்களை இனங்காண்பதில் குழப்பமும்,  கரும்பலகையில் எழுதியதைப் படிக்க முடியாத நிலையும் இருந்தது.
இத்தகைய நிலை ஏன் ஏற்படுகிறது என்று விசாரித்தபோது, அச்சிறுவன் கைபேசியில் தொடர்ந்து பல மணிநேரம் விளையாடிக் கொண்டிருப்பான் என்ற தகவலை அவனது பெற்றோர் தெரிவித்தனர்.
அச்சிறுவனை ஆராய்ந்த அம்மருத்துவமனையின் அனுபவமிக்க டாக்டர் ஹர்பன்ஸ் லால் கூறும்போது, சிறுவனின் பார்வை நிலை சரியாக இருக்கிறது. ஆனால், 7 வயது முதலே கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருவதாலும், தொடர்ந்து இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பதும் கண் தசைகளை தளர்ச்சியடையச் செய்து விட்டது என்று கூறினார்.
இதுபோன்ற பாதிப்புகள் இன்று சிறு குழந்தைகளிடமும், இளைஞர்களிடமும் அதிகமாக தோன்றி வருவதாகவும், இதற்கு காரணம் அதிகமாக கைபேசி விளையாட்டுக்கள் விளையாடுவது, குறுஞ்செய்திகளை அனுப்புவது, படிப்பது, இணையப் பக்கங்களைப் பார்ப்பது என்று எண்ணற்ற வேலைகளை கை பேசியின் ஒளி உமிழும் சிறு திரைகளில் பார்ப்பதால்தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், இத்தகு பாதிப்பு ஏற்படாமல் இருக்க கைபேசிகள், ஸ்மார்ட் போன்கள், டேப்ளட், கணினி ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது சற்று தள்ளி வைத்துப் பயன்படுத்தவேண்டும் என்றும், தொடர்ந்து திரையின் மீதே கவனம் செலுத்தாமல்  20 நிமிடங்களுக்கு ஒரு முறை பார்வையை நகர்த்தி 20 அடி தூரத்தில் உள்ள பொருட்களை 20 விநாடி நேரமாவது பார்ப்பதை பயிற்சியாகக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அறிவியல் தந்த வரமாக கைபேசி இருந்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.
. Related Posts with Thumbnails

நீங்களும் உருவாக்கலாம் பார்கோட்


வர்த்தகப் பயன்பாட்டில் தற்போது அதிக அளவில் பயன்படுத்தப்படுவது பார்கோடு முறையாகும். இன்று பல்பொருள் அங்காடிகள், துணிக் கடைகள் எனப் பல இடங்களிலும் பார்கோட் (Barcode) கள்  பயன்படுத்தப்படுகின்றன.

 பார்கோட் வடிவில் நதிக்கரை

பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள், புத்தகங்கள், வாழ்த்து அட்டைகள் என்று பலவற்றிலும் இக்கோடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
கீழே எண்களுடன், தடிமனான கோடு, மெல்லிய கோடு என்று பலவிதமான வடிவங்களில் செங்குத்து வரிசையில் கோடுகள்  சிறு இடைவெளியுடன் அமைக்கப்பட்டிருக்கும். இக் கோடுகளின் தொகுப்பையே பார்கோட்(Barcode) என்கின்றனர். இது ஒரு சர்வதேச குறியீட்டு முறையாகும்.

இம்முறை முதன்முதலில் ரயில் போக்குவரத்திற்காக 1949களில் அமெரிக்காவைச் சேர்ந்த பெர்னார்ட் சில்வர் மற்றும் ஜோசப் உட்லேண்ட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. அதில் மேலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு இன்றுள்ள பார்கோட் முறை உருவாக்கப்பட்டது.

PDF417 வடிவில் நதிக்கரை

ஒரு பொருளில் பதியப்படும் பார்கோடை வைத்து அப்பொருளைத் தயாரித்தவர், தயாரிப்பு தேதி, அதன் விலை, பொருள் எந்த வகையைச் சார்ந்தது, வரிசை எண் ஆகிய விபரங் களை எளிதில் தெரிந்து கொள்ளமுடியும்.

இக்குறியீட்டைப் படிக்க பார்கோட்ஸ்கேனர் என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. பார்கோடுகளின் மீது லேசர் ஒளிக் கற்றையை செலுத்திய விநாடி யில் அப்பொருள் குறித்த விபரம் கணினியில் காட்டும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கும்.

பார்கோட்களின் கீழாக கொடுக்கப்பட்டிருக்கும் எண்கள் நான்கு பிரிவு
களாக பிரிக்கப்பட்டிருக்கும். இதில் முதல் பிரிவு விற்கப்படும் பொருளின் வகையைக் குறிப்பதாகவும், இரண்டா வது பிரிவு தயாரிப்பாளரைக் குறிப்பதா கவும், மூன்றாவது பிரிவு பொருளின் தனித்த விபரத்தைக் குறிப்பதாகவும், நான்காவது பிரிவு மேற்கண்ட மூன்று பிரிவு விபரங்களும் சரிதானா என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.

பல வகையான பார்கோட் முறைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. பார்கோட்கள் பொதுவாக வர்த்தகப் பயன்பாட்டிற்கே அதிகம் பயன்படுத்துவதாகத் தோன்றினாலும், வேறு பல வகையிலும் அவை பயன்படுத்தப்படுகின்றன.

பார்கோட் முறையில் சாதாரண நேரோட்ட பார்கோட் மற்றும் 2டி பார்கோட் என இருவகை உண்டு.

வர்த்தகப் பயன்பாட்டில் உள்ள பார்கோட்கள் பொதுவாக யூ.பி.சி. என்ற வகை சார்ந்ததாக இருக்கும். மருத்துவமனைகளில் நோயாளிகள் குறித்த விபரம், நோய் மற்றும் சிகிச்சை தகவல்களைப் பதிந்து வைக்கவும், வங்கிகள், நூலகங்கள் ஆகிய இடங்களில் கோட்பார் என்ற பழைய பார்கோட் குறியீட்டு முறை சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பார்கோடில் இன்டர் லீவ்ட் 2 என்ற ஒரு வகை உண்டு. இது நூலகங்கள், மொத்த விற்பனை நிலையங்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

நான் இன்டர்லீவ்ட் 2 எனப்படும் மற்றொரு முறையை தொழில் துறையில் பின்பற்றுகின்றனர்.  இவை யனைத்தும் நேரோட்ட பார்கோடு வகை சார்ந்தவை.
QR Code வடிவில் நதிக்கரை

இதுபோல க்யூ.ஆர். குறியீடு (Q.R. Code) வகை ஒன்று உண்டு. இது டெயோட்டா நிறுவனத்தால் கார் பாகங்களை பிரித்துணர உருவாக்கப்பட்டது. தற்போது எவரும் பயன்படுத்திக் கொள்ள பொதுப் பயன்பாட்டில் உள்ளது.

க்யூ.ஆர்.கோடில் பெயர், முகவரி, தொலைபேசி எண், வசிக்கும் பகுதிக்கான பாகை அளவு எனப் பல விபரங்களைப் பதிந்திட முடியும். க்யூ.ஆர்.கோடில் அமைக்கப்பட்ட தகவலை அறிய மற்ற பார்கோடுகளுக்கு உள்ளதுபோல தனியாக ஸ்கேனர் கருவிகள் தேவையில்லை. நாம் பயன்படுத்தும் கேமராவுடன் கூடிய ஸ்மார்ட் போன்களே போதும். பயன்பாட்டில் இருக்கும் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் போன்களுக்கான க்யூ.ஆர். கோடு ரீடர் மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன.

யூ.பி.சி., க்யூ.ஆர். உள்ளிட்ட பார் கோடுகளை எளிதாக உருவாக்க இலவச இணையதளங்களும் உள்ளன.

பார்கோடு, கியூ.ஆர்.கோட் உருவாக்க
http://www.barcode-generator.org/
http://www.barcoding.com/upc/
http://zxing.appspot.com/generator/
http://barcode.tec-it.com/
http://www.racoindustries.com/barcodegenerator/2d/qr-code.aspx

பார்கோடு, கியூ.ஆர்.கோட் தகவல்களைப் படிக்கும் இணையதளங்கள்
http://www.onlinebarcodereader.com/
http://zxing.org/w/decode.jspx

மேற்கண்டவை அல்லாமல் மேலும் பல வகை பார்கோடு குறியீட்டு முறைகளும் பயன்பாட்டில் உள்ளன.
பார்கோடுகள் பற்றி மேலும் அறிந்துகொள்ள

en.wikipedia.org/wiki/Barcodeen.wikipedia.org/wiki/QR_code
www.barcodesinc.com
en.wikipedia.org/wiki/Barcode_reader
. Related Posts with Thumbnails

மனிதனையும், கணினியையும் வேறுபடுத்தும் "கேப்ட்சா"


இணையவழியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும்போதும், இணைய வங்கிக் கணக்கு, புதிய மின்னஞ்சல்   சேவையைப் பெறப் பதியும்போதும் கலைந்த நிலையில் வளைந்தும் நெளிந்தும் எழுத்துக்கள் சிறு படமாகக் கொடுக்கப்பட்டு அதனை சரியாக பூர்த்தி செய்யும்படிக் கேட்கப்படும். இந்த எழுத்துக்கள் அமைந்த படம்தான் கேப்ட்சா(CAPTCHA) வாகும்.

இது எதற்கு? இதனால் என்ன நன்மை? என்று கேள்வி தோன்றும். இந்த கேப்ட்சா அமைப்பு இணையக் கணக்குகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறையாகும்.

பலவகையான கேப்ட்சாக்கள்

கேப்ட்சா எப்படி பாதுகாக்கும்?
விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையிலோ, வங்கிக் கணக்கு அல்லது மின்னஞ்சல் கணக்கில் நுழையும்படியாகவோ மென்பொருள்களை உருவாக்கிட முடியும். அவற்றைக் கொண்டு தானியங்கி முறையில் குறிப்பிட்ட நேர இடைவெளியில் நமது கணக்குகளை நிர்வகிக்கும்படியாக மென்பொருள்களுக்கு கட்டளையிடுவது சாத்தியமாகும்.
இந்த வசதியை இணையத் திருடர்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றிப் பயன்படுத்தினால் எவரது கணக்கையும் ஹேக் செய்துவிட முடியும். இந்த பாதுகாப்புக் குறைபாட்டைப் போக்க, உருவாக்கப்பட்டதே கேப்ட்சா கோடாகும்.
இது கூகுள் கணக்கில் காட்டப்படும் கேப்ட்சா

ஆரம்ப காலத்தில் உருவாக்கப்பட்ட கேப்ட்சா எழுத்துக்களை தற்போதுள்ள எழுத்துக்களை படிக்கும் ஓசிஆர் (OCR) ஆப்டிகல் கேரக்டர் ரெககனேசன் (Optical character recognition) மென்பொருள்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிடும். எனவேதான் அதில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு தழைகீழாக, கோணல் மானலாக,   குறுக்குக் கோட்டுடன், ஒன்றோடு ஒன்று ஒட்டியபடி என பல வடிவங்களோடு இன்றைய கேப்ட்சாக்கள் உருவாக்கப்படுகின்றன.
இதன் மூலம் கணினியைப் பயன்படுத்துவது மனிதனா அல்லது மென்பொருளா என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

கேப்ட்சா (CAPTCHA) என்ற சொல்லின் முழு விரிவாக்கம்
Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart என்பதாகும்.


முக‌‌‌‌‌நூலில் காட்டப்படும் கேப்ட்சா

இந்த முறை அமெரிக்க பல்கலைக்கழகமான கார்னகி மெலனைச் சேர்ந்த பேராசிரியர்கள் லூயிஸ் வேன் ஆன், மேனுவல் பிளம், நிக்கோலஸ் ஜே.ஹாப்பர் மற்றும் ஐபிஎம் நிறுவனத்தைச் சேர்ந்த ஜான் லாங்போர்ட் ஆகியோரால் 2000ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு விண்ணப்பம் பூர்த்தி செய்யும்போது தோன்றும் கேப்ட்சா புரியவில்லை என்றால் கணினியில் உள்ள கண்ட்ரோல் பட்டனை கிளிக் செய்து மவுசிலுள்ள ஸ்குரோல் பட்டனை நகர்த்தி பெரிதுபடுத்திப் பார்க்கலாம். அப்பொழுதும் புரிந்து கொள்ளமுடியாவிட்டால் அந்த எழுத்துக்களுக்கு அருகில் இருக்கும் சுழலும் தோற்றத்தில் இருக்கும் இரு அம்புக்குறிகள் சின்னத்தை கிளிக் செய்து வேறு கேப்ட்சா குறியீட்டைப் பெறலாம்.
சில வகை கேப்ட்சாக்களில் ஒலிப்பெருக்கியின் படம் கொடுக்கப்
பட்டிருக்கும். அதனைக் கிளிக் செய்வதன் மூலமாக அந்த எழுத்துக்களை ஒலிக்கக் கேட்டும் பூர்த்தி செய்யலாம்.

ரீகேப்ட்சா (Re-Captcha)

கேப்ட்சாவில் ரீகேப்ட்சா (Re Captcha) என்ற ஒன்றும் உள்ளது. இதுவும் கார்னகி மெலன் பல்கலைக்கழகத் தயாரிப்புதான். இதில் என்ன புதுமை என்றால் இதில் கொடுக்கப்படும் எழுத்துக்களுடனான கேப்ட்சா பழைய புத்தகங்களிலிலிருந்து எடுக்கப்பட்டதாகும். கொடுக்கப்படும் ஸ்கேன் செய்யப்பட்ட எழுத்துக்களை சரியாக தட்டச்சு செய்யும்போது அந்த எழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுகின்றன. இதனால் ஒரே நேரத்தில் பாதுகாப்பும், பழைய புத்தகங்கள் கணினிமயமாக்கும் பணியும் நடைபெறுகிறது.
இதன்மூலம் ஒருநாளைக்கு சராசரியாக 160 புத்தகங்கள் வரை கணினி மயமாக்கப்படுவதாக கூறுகின்றனர்.
இன்றுள்ள பெரும்பாலான இணையதளங்களில் குறிப்பாக கூகுள், ஃபேஸ்புக், ஹாட்மெயில், யாகூ மற்றும் பிரபல வங்கி இணையதளங்கள், அரசு இணையதளங்கள் என்று அனைத்து விதமான தளங்களிலும் இந்த கேப்ட்சா படப் பாதுகாப்பு முறை பயன்படுத்தப்படுகிறது.
Related Posts with Thumbnails

பயன்பாட்டிற்கு வரும் புதிய IPv6 முகவரி முறை

இன்று முதல் இணையத்தின் புதிய முகவரி முறை அமலுக்கு வருகிறது. ஐபிவி 6 (IPv6) என்றழைக்கப்படும் இம்முறை இணைய வளர்ச்சியில் ஒரு புதிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
ஐபி முகவரி (Internet Protocol Address) என்பது கணினி, இணையதளம் மற்றும் இணையம் சார்ந்த சாதனங்களைத் தொடர்பு கொள்ள உதவும் எண்ணாகும். தற்போது உள்ள பழைய முறையான ஐபிவி4 (IPv4) என்பது 32 பிட் முறையில் உருவாக்கப்பட்டது. இதில் குறைந்த அளவு இணைய முகவரிகளையே வழங்க முடியும். அதாவது 430 கோடி (2 to the 32nd power, or 4,294,967,296) முகவரிகளை மட்டுமே வழங்கக்கூடியது.

இம்முறையை உருவாக்கியவர்கள் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி வேகம் பற்றிக் கனவிலும்  எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்கள். இன்றுள்ள எண்ணற்ற தொழில்நுட்ப சாதனங்களுக்கு ஐபி முகவரி என்பது மிக அத்தியாவசிமானது.
இணையத் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி கணினியைத் தாண்டி, ஸ்மார்ட் போன், இணைய வசதியுள்ள குளிர்சாதனப் பெட்டி, இணைய வழி பிரிண்டர், சர்வர்கள் என்று பல்கிப் பெருகிக் கொண்டிருக்கிறது. இத்தகு சாதனங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக இணைய முகவரி எண் கொடுக்க வேண்டு
மென்றால் 430 கோடி முகவரிகள் என்பது போதாது.

இப்பற்றாக்குறையைத் தீர்க்க உருவாக்கப்பட்டதுதான் ஐபிவி 6 எனப்படும் 128 பிட் முறையாகும். இம்முறையில் அதிகபட்சமாக 340 அன்டெசில்லியன் (Undecillion) அதாவது 340,282,366,920,938,463,463,374,607,431,768,211,456 (2 to the 128th power) அளவிலான இணைய முகவரிகளை வழங்க முடியும்.
இம்முறை ஜூன் 6 புதன்கிழமை அதாவது இன்று முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே யாகூ, காம்காஸ்ட், கூகுள், ஃபேஸ்புக், சிஸ்கோ உள்ளிட்ட பல முன்னணி இணைய தள நிறுவனங்கள் கடந்த ஓராண்டாக நடத்தி வந்த ஐபிவி 6 முகவரி சோதனைகளை தற்போது முடித்துவிட்டு செயல்பாட்டிற்கு தயாராகிவிட்டன.

முதற் கட்டமாக சுமார் 1500 இணையதளங்களும், 22 நாடுகளைச் சேர்ந்து இண்டெர்நெட் சேவை வழங்குனர்களான ஐஎஸ்பிக்களும் (Internet Service Provider) இப்புதிய முகவரிக்கு இன்று முதல் மாற உள்ளனர் என்று ஆர்பர் நெட்வொர்க் என்ற இணையப் பயன்பாட்டுக் கண்காணிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
மற்ற இணையதளங்கள் இம்முறைக்கு மாறுவது உடனடியாக சாத்தி
யமில்லை என்றும் அதற்கு சற்றுக் கால தாமதம் எற்படும். அதுவரை தற்போதுள்ள ஐபிவி 4 முறையும் பயன்பாட்டிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
IPv6 பற்றி மேலும் அறிந்து கொள்ள உதவும் தளங்கள்:
en.wikipedia.org/wiki/IPv6
ipv6.com/
www.ipv6.org/
www.worldipv6day.org/   
.. Related Posts with Thumbnails

wibiya widget