கடன் தள்ளுபடியா? விவசாயம் தள்ளுபடியா?

இந்தியா மத்திய பட்ஜெட் 2008 ல் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விவசாயிகளுக்கு 60,000 கோடி அளவிளான கடன் தள்ளுபடியை அறிவித்திருக்கிறார். வரவேற்கத்தக்க அம்சம்தான் ஆனால் அதனுடைய பின்புலம் எது என்று யாரும் யோசிக்கிறோமா? அதுதான் தெரியவில்லை. அடுத்த தேர்தலுக்கு வாக்களிக்கவிருக்கும் 4 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் குடும்பங்களையும், வருமான வரி செலுத்தும் பெரும்பான்மை நடுத்தர வர்கத்தையும் குறிவைத்துத்தான் வருமான வரி உச்ச வரம்பு உயர்வும், கடன் தள்ளுபடியும் என்பது ஒரு பாமரனின் பார்வையாக இருக்கிறது. ஆனால் பசுமை புரட்சி என்று சொல்லி இந்தியாவெங்கும் விதைக்கப்பட்ட பன்னாட்டு விதைக் கம்பெனிகளின் பலனற்ற ஒருமுறை மட்டுமே பலன் தரும் விதைகளும், நிலத்தை உயிறற்தாக; வி்ஷமானதாக மாற்றும் பூச்சிக்கொல்லி ரசாயண உரங்களும்தான் இந்தியா விவசாயிகளை பிச்சைக்காரர்கள்போல் மாற்றியது என்பதுவே உண்மை. அவ்வப்போது கடன் தள்ளுபடி என்ற சிறு சிறு ஆசைகளைக் காட்டி வாக்கு வங்கிகளைத் தக்கவைத்துக்கொண்டு இந்தியாவின் முதுகெலும்பை முறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கட்சி வித்தியாசம் என்றெல்லாம் பொதுவாக இல்லை. எல்லோரும் புதிதாகத் திட்டங்கள் உருவாக்க மட்டுமே தெரிந்தவர்கள். தவறான திட்டங்களை திருத்த யாரும் தயராக .இல்லை. விவசாயத்தை வளர்க்க என்ன வழி என்றும் அதற்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகள் என்ன என்பதைப் பற்றியும் பெரிதாக அக்கறை காட்டுபவர்கள் அரசியலில் குறைவு. உலக வங்கியும் அமெரிக்காவும் சொல்வதுதான் அவர்களுக்கு தெரிந்த திட்டங்கள். இப்படித்தான் ஒரு விவசாயி சொன்னாராம் இங்க மனுசனாப் பொறந்ததுக்கு அமெரிக்காவுல மாடாப் பொறந்திருக்கலாம் என்று. எதையெதையோ அவுட் சோர்சிங் செய்யும் இந்தியாவிற்கு மாடு வளர்ப்பதை அவுட்சோர்சிங் பணியாக அமெரிக்கா தந்தால் நிச்சயம் பெரும்பாலான இந்திய விவசாயிகள் மாடு மேய்த்துப் பணக்காரர்களாகக்கூடும்.
சாதாரண விவசாயி 5 ஏக்கர் நிலம் வைத்து உழுது பயிரிட்டு அறுவடை செய்து 6 மாதத்தில் பெரும் லாபம்(?!) இன்று இந்தியாவின் ஐ.டி. துறையில் பணியாற்றும் சாதாரண கடைநிலை ஊழியனின் ஒரு மாத சம்பளம். (அப்பா 6 மாதம் கல்லிலும் முள்ளிலும் போராடி வியர்வை சிந்தி சம்பாரிப்பதைவிட மகன் ஏசி ரூமில் அமர்ந்துகொண்டு ஒரு மாதத்தில் சம்பாதித்துவிடுகிறான் எனும்போது அந்த தந்தையும் மகனும் விவசாயத்தை ஒரு பொருட்டாக மதிப்பார்களா?) இப்படிப்பட்ட சூழலில் நிலத்தை விற்றுவிட்டு பெருநகரம் ஒன்றில் அடுக்கமாடிக் குடியிருப்பு ஒன்றை சொந்தமாக்கிக்கொண்டு வாழத்தான் எந்த மனிதனும் விரும்புவான். அதுதான் நிதர்சனம். அதுதான் தற்போதைய விவசாய சூழலும். போட்ட விதை முளைக்குமா? தெரியாது. மழை வருமா? தெரியாது. பக்கத்து மாநிலத்திலிருந்து தண்ணீர் கிடைக்குமா? தெரியாது. பூச்சிக்கொல்லி அடித்தால் அது நிலத்தை மட்டும் பாதிக்குமா அல்லது நம்மையும் சேர்த்து பாதிக்குமா? தெரியாது. இபபடி பல தெரியாதுகளுக்கு மத்தியில்தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பணமுதலை நிறுவனங்கள் மேலும் பணம் குவிக்க விவசாயத்தையும் விட்டுவைக்காமல் படையெடுத்துவிட்டன. வேளாண் நிலங்கள் இப்போது பெருமளவில் அவர்கள் பெயரிருக்கு மாறிக்கொண்டிருப்பதாக தகவல். தானியங்களை பண்ட மாற்றாக பயன்படுத்திய தேசம். நெல், கேழ்வரகு, கோதுமை, சாமை, ஏலம், மா, பலா, வாழை என்று ஏற்றுமதி செய்த கதையை பன்னெடுங்கால இந்திய வரலாறு பெருமையாக பேசும். ஆனால் இனி அது வரலாறாக மட்டுமே மாறக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. வருங்காலம் நாம் இறக்குமதி செய்யும் கதையை பேசினால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. எங்க அப்பாவோட பாட்டி தாத்தாவெல்லாம் அரிசி செஞ்சவங்களாம் அதை எங்க தாத்தா பார்த்திருக்கிறாராம் என்று நமது சந்ததிகள் சொல்லும் காலம் விரைவில் வரக்கூடும். Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget