கணினியுகமும் கழுத்துவலியும்


கணினியில் தொடர்ந்து பணியாற்றுபவர்களுக்கு கழுத்து வலி மற்றும் பார்வைக் குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக சமீபத்தில் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. கணினிகளால் நாளுக்கு நாள் ஏற்படும் பல்வேறு விதமான புதிய நோய்கள் குறித்த தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அப்படிப்பட்டதொரு தகவல்தான் சப்தர்ஜங் மருத்துவ மைய மருத்துவர்களின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இவ்வாய்வு சப்தர்ஜங் நகரைச் சேர்ந்த கணினித் துறை பணியாளர்கள் மத்தியில் எடுக்கப்பட்டது. இதன் முடிவின்படி 80 சதவீதம் பேர் கண்பார்வை மற்றும் கழுத்து வலி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.
76.5 சதவீதம் பேர் கழுத்துவலியால் பாதிக்கப்பட்டிருந்தனர். சாதாரணமாக மனிதர்களின் கண்கள் சுமார் ஆறு மீட்டர் தொலைவிலுள்ள பொருட்களையே எளிதில் அடையாளம் காணும் தன்மை கொண்டது. ஆனால் கணினியை நாம் ஒரு சில அடி தூரத்திலிருந்தே பார்க்கிறோம். இதனால் கண் தசை நார்களுக்கு மிகுந்த வலியும், சோர்வும் ஏற்படுகிறது. மேலும் இவ்வாய்வின் மூலம் அதிகமாக கணினியை பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் நீர்வடிதல், கண் வலி, கண் உறுத்தல், சிவந்து போதல், கண் பார்வை மங்குதல், தலைவலி என்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவிக்கிறது.
தொடர்ந்து அமர்ந்தபடியே வேலை செய்வதால் முதுகு மற்றும் தண்டுவட பாதிப்புகளும் அதைத் தொடர்ந்து கழுத்து வலியும் வருகிறது. இத்தகைய வலிகள் குறித்த ஆய்வின்படி கழுத்து வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 48.6 சதவீதமும், தோள்பட்டை வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 15.7 சதவீதமும், முதுகு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 35.6 சதவீதமும், கை, விரல், மணிக்கட்டு பகுதிகளில் அயற்சியுடன் கூடிய வலியால் 23.1 சதவீதம் பேர் அவதிப்பட்டதாக தெரிவிக்கிறது. மேலும் கணினி அலுவலகங்களில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் மூலமாக ஆராய்ந்ததில் கணினி பயன்படுத்துபவர்கள் சரியான தூரத்தில், உயரத்தில், சரியான நாற்காலியில் உட்காரததும் முதுகுவலி மற்றும் தலைவலிக்கு காரணம் என்று தெரியவந்தது.
அதேபோல அதிக நேரம் கணினியின் முன் அமர்வதால் ஒருவித மன இறுக்கத்திற்கு ஆளாவதும், அதிக ஒளி உமிழும் கணினித் திரைகள், கணினி திரைக்கு நேர் எதிர்திசையில் விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பது, நாற்காலிகள் நேராக, சீராக இல்லாமலிருப்பது, பயன்படுத்துவதற்கு கடினமான விசைகளைக் கொண்ட கீபோர்டுகள் ஆகியவையே கண், கை, கால் முதுகு மற்றும் கழுத்து வலிகளுக்கு காரணமாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்போது 18 லட்சத்திற்கும் அதிகமான கணினிகள் புழக்கத்தில் உள்ளன. சராசரியாக 1000 பேருக்கு 6 கணினி என்ற விகிதத்தில் தற்போது உள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் பல மடங்கு உயரும். அப்போது கணினி சார்ந்த பாதிப்புகளால் பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, காற்றோட்டமான அறையில், தெளிவான, சரியான வெளிச்சம், அளவான ஒளியுடன், ஒரு அடி தூரத்தில் இருக்கும்படியான கணினித்திரையும், பயன்படுத்துவதற்கு எளிதான கீபோர்டு மற்றும் மௌஸ், முதுகுப்பகுதி ஒரே நேர்கோட்டில் இருக்கும்படியாக சாய்வதற்கு ஏற்ற நாற்காலியையும் பயன்படுத்த வேண்டும். அதே போல தொடர்ந்து கணினி முன்பாகவே அமர்ந்திருக்காமல் சற்றே ஓய்வெடுப்பதும், அடிக்கடி இமைகளை மூடித்திறப்பதும் நல்ல பலன் தரும் என்கின்றனர் மருத்துவர்கள். Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget