திக்குத் தெரியாத காட்டில்..

ஜிபிஎஸ் தொழில்நுட்பம்

புதிய ஊர், அறிமுகமில்லாத மனிதர்கள், புரியாத மொழி என்று திக்குத் தெரியாத காட்டில் மாட்டிக்கொண்ட அனுபவம் நம்மில் பலருக்கு உண்டு. அத்தகைய சூழ்நிலையில் நாம் செல்ல வேண்டிய இடத்தை, மற்றவர் உதவியின்றி நாமே கண்டறிந்து செல்ல உதவும் தொழில்நுட்பம்தான் ஜிபிஎஸ்.

குளோபல் பொசிஸனிங் சிஸ்டம் (Global Positioning System) எனப்படும் இத்தொழில்நுட்பம் செயற்கைக்கோள்களைக் கொண்டு நீங்கள் இருக்கும் இடத்தை அறிந்து வழி காட்ட அல்லது நீங்களே வழியை அறிந்து செல்ல உதவுகிறது.
1940ஆம் ஆண்டில் திசை காட்டும் கருவிகளுக்கு தரைப்பகுதி இலக்குகளைக் காட்ட பயன்படுத்தப்பட்ட மின் காந்த அலை தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு 1960ல் அமெரிக்கக் கடற்படைக்காக செயற்கைகோள்களைப் பயன்படுத்தி திசை அறிய உருவாக்கப்பட்டது.
அமெரிக்க ராணுவத்தில் ஏவுகணைகளை துல்லியமாக ஏவவும், கடற்படை, விமானப்படைக்கு வழிகாட்டவும் பயன்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் 1983இல் பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கதவுகள் திறந்து விடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1989ஆம் ஆண்டு முதல் ஜிபிஎஸ் பயன்பாட்டிற்கான 60 செயற்கை கோள்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதில் 31 செயற்கைக் கோள்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் 24 மட்டுமே இச்சேவைக்கு பயன்படுத்தப்படுகின்றன. மற்ற செய‌ற்கைகோள்கள் ஸ்பேராக உள்ளன.
தற்போது இவைதான் வழிகாட்டும் சிக்னல்களை பூமிக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு இடத்தினை துல்லியமாக அறிய இந்த 24இல் 3  அல்லது 4 செயற்கைகோள்களின் மின் காந்த அலைகள் நமக்குத் தேவைப்படும். இவ்வலைகளின் வீச்சும், நேரமும் கணக்கிடப்பட்டு இருப்பிடம் கணிக்கப்படுகிறது.

ஜிபிஎஸ் நுட்பத்திற்கு அடிப்படையாக இருப்பது டாப்ளர் விதியாகும். அதன்படி ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கிச் செலுத்தப்படும் மின் காந்த அலை, குறைந்த தூரத்தில் உள்ள இடமாக இருந்தால் நெருக்கம் அதிகமான கதிர்வீச்சையும், அதிக தூரமாக இருந்தால் நெருக்கமற்ற கதிர்வீச்சையும் கொண்டிருக்கும் என்பதாகும்.
வாகனங்களில் செல்வோருக்கு வழிகாட்டியாகவும், வாகனங்களை நிர்வகிப்போருக்கு இருந்த இடத்திலிருந்தே கண்காணிக்கும் வகையில், வாகனம் செல்லும் பாதை, வேகம், எரிபொருள் அளவு, இடையில் நின்ற இடம், நேரம் உள்ளிட்ட பல கூடுதல் விபரங்களையும் சேர்த்து  வழங்கிடும்படியாக இத்தொழில்நுட்பம் இன்று பலவகையிலும் மேம்பட்டிருக்கிறது.  இப்பணியில் ஜிபிஎஸ் ரிசீவர்கள், ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட கருவிகள் நமக்கு உதவுகின்றன. (வாகனங்களுக்கான  ஜிபிஎஸ் ரிசீவரின் விலை சுமார் 7000 ஆகிறது. இச்சேவையை வழங்கும் தனியார் நிறுவனத்திற்கு மாதம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 200 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.)
உலகில் பல நாடுகளும் பொது மக்களுக்கான ஜிபிஎஸ் சேவையை அமெரிக்
காவிடமிருந்தே பெறுகின்றன. தவிர்க்க முடியாத, பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய இத்தொழில்நுட்பத்தை ஒவ்வொரு நாடும் தனக்கென்று தனியாக உருவாக்கிக் கொள்வது அவசியத் தேவையாகும். அவ்வகையில் தங்களுக்கென தனித் தொழில்நுட்பத்தை ரஷ்யா குளோனாஸ் (GLONASS) என்ற பெயரில் உருவாக்கிப் பயன்படுத்தி வருகிறது, சீனா பெய்டூ (Beidou) என்ற பெயரில் உருவாக்கியுள்ளது. கூடுதலாக காம்பஸ் (COMPASS) என்ற பெயரில் உலக அளவிலான ஜிபிஎஸ் சிஸ்டத்தை 2020ஆம் ஆண்டிற்குள் உருவாக்கும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளது. கலிலியோ (Galileo) என்ற பெயரில் ஜரோப்பிய யூனியனும், கியூஇசட்எஸ்எஸ் (QZSS) என்ற பெயரில் ஜப்பானும் உருவாக்கி வருகின்றன.

இந்தியாவில் ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இஸ்ரோ இந்தியன் நேவிகேஷனல் சிஸ்டம் (IRNSS) என்ற நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இதன்படி 6 மாதத்திற்கு ஒரு செயற்கைகோள் வீதம் அனுப்படும். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட விக்கி உரலிகளைப் பார்க்கவும்
http://en.wikipedia.org/wiki/Global_Positioning_System
http://en.wikipedia.org/wiki/U.S._Department_of_Defense
http://en.wikipedia.org/wiki/Indian_Regional_Navigational_Satellite_System
http://en.wikipedia.org/wiki/GLONASS
http://en.wikipedia.org/wiki/Galileo_(satellite_navigation)
http://en.wikipedia.org/wiki/QZSS
http://en.wikipedia.org/wiki/Beidou_navigation_system
.


Related Posts with Thumbnails

2 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

திண்டுக்கல் தனபாலன் said...

விள்ளகாமான பதிவு ! நன்றி நண்பரே !

திண்டுக்கல் தனபாலன் said...

விளக்கமான பதிவு ! நன்றி நண்பரே !

wibiya widget