கூகுளின் தனியுரிமைக் கொள்கை நன்மையா?


ணையதள உலகில் பெரியண்ணனாக இருக்கும் கூகுள் மார்ச் முதல் புதிய தனியுரிமைக் கொள்கைக்கு (google privacy policy) மாறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை சென்ற ஜனவரியில் தன் பயனர்கள் அனைவருக்கும் அனுப்பியிருந்தது.

அது என்ன பிரைவஸி பாலிசி? நாம் பயன்படுத்தும் இணையதளங்களில் பயனர் கணக்குத் தொடங்கும்போது எங்கள் கொள்கைகளைப் படித்துப் பார்த்து ஒத்துக்கொள்கிறீர்களா என்று மிக நீண்ட கட்டுரை போலக் கொடுத்து கேட்கும். அதுவே அந்த இணையதளத்தின் தனியுரிமைக் கொள்கைகளாகும்.
இக்கொள்கையைப் படித்துப் பார்த்து ஒத்துக் கொள்வதாக இருந்தால் அடைப்புக் கட்டத்தில் ‘டிக்’ செய்யவேண்டும். இதனை பெரும்பாலும் யாரும் படிப்பதில்லை. ‘டிக்’ மட்டும் கொடுத்து பயனர் கணக்கைத் தொடங்குவதே வழக்கமாக இருக்கிறது. இதை முழுமையாகப் படித்துப் பார்த்தால் தெரியும் நம்மை அந்நிறுவனத்திடம் ஒப்படைத்த கதை.
நமக்கு இலவச சேவை தருகிறார்கள். அவர்களுக்கு ஏதோ கொள்கை இருக்கிறது. அது நம்மை என்ன செய்து விடப்போகிறது? எங்கேயோ இருப்பவன் வந்து என்ன செய்துவிட முடியும்? நான் மட்டுமா, கோடிக்கணக்கான பேர் ஒத்துக்கொண்டுவிட்டார்களே? என்று கேட்கலாம்.எல்லாரும் ஒத்துக் கொண்டனர் என்பதுகூட தவறானதுதான். ஒரு நாலு வரியில் “உங்களைக் கண்காணிப்போம், உங்கள் விருப்பத்தை, உங்கள் தேவைகளை, உங்கள் சுய விபரத்தை கேட்பவர்களுக்கு விற்றுக் காசாக்குவோம்” என்று நாலு வரியில் கொடுத்திருந்தால் நீங்கள் ‘டிக்’ அடித்து ஓகே செய்திருப்பீர்களா?
ஆனால், அதுதான் நடந்துகொண்டிருக்கிறது. உங்களுக்குத் தேவையான சேவையை வழங்குவதில் போட்டி போடுகிறார்களே என்று சந்தோஷப்படாதீர்கள். உங்களிடம் பெரியதாக எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்பதே உண்மை.
நம்மை வைத்து இவர்கள் என்ன செய்வார்கள் என்று கேட்கிறீர்களா? நீங்கள் கூகுளின் ஆர்குட் அல்லது பிளஸ் சமூக இணையதளத்தில் நீங்கள் வாங்கிய புதிய கைபேசி குறித்து பகிர்ந்து கொண்டாலோ அல்லது கூகுள் தேடலில் குறிப்பிட்ட பொருள் குறித்து நீங்கள் தேடினாலோ அது உங்கள் கூகுள் கணக்கில் சேமிக்கப்படும். அடுத்த முறை கூகுளின் மற்றொரு சேவையைப் பயன்படுத்தும்போது உங்கள் விருப்பம் சார்ந்த விளம்பரங்கள் காட்டப்படும்.உங்கள் விருப்பத்திற்குரிய விஷயம் விளம்பரமாக மாறும் யுக்தி இதுதான். இப்படித்தான் உங்களை மற்றவர்களிடம் விற்கிறார்கள்.
தற்போது இக்கொள்கையில்தான் மாற்றம் கொண்டுவந்துள்ளது கூகுள். எப்படி என்றால், கூகுளில் கணக்குத் தொடங்கும் ஒருவர், அதன் மின்னஞ்சல் சேவை, கூகுள் தேடல் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட சேவைகளைப் பயன்படுத்தலாம். இச்சேவைகளுக்கென்று தனித்தனியாக இருந்த தனியுரிமைக் கொள்கையைத்தான் தற்போது அனைத்திற்கும் ஒரே மாதிரியாக மாற்றியமைத்திருக்கிறது.கூகுளின் சர்வரில் சேமிக்கப்படும் இத்தகவல்களை பயனர் விரும்பினால் ஹிஸ்டரி (History) பகுதியில் சென்று அழித்து விடலாம் என்பது கூடுதலாக கூகுள் செய்திருக்கும் ஒரு நன்மை.
ஆனால், அதற்கு முன்பாக அத்தகவல் மற்றவர்களுக்கு கடத்தப்பட்டிருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. இது கூகுளுக்கு மட்டுமல்ல ஃபேஸ்புக், டிவிட்டர், யாகூ உள்ளிட்ட அனைத்து இணையதளங்களுக்கும் பொருந்தும். இதை நியாயப்படுத்தும் விதமாக கூகுள் தலைவர் இப்படிக் கூறுகிறார் “ஒரு விஷயத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ளக்கூடாது என்று நீங்கள் நினைத்தால், அந்த விஷயத்தை நீங்கள் செய்திருக்கவே கூடாது” என்று. ஆம். உங்களைப் பற்றிய தனிப்பட்ட விபரங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும்போது கவனமாக இருக்கவேண்டும். உங்களுக்குத் தொல்லை தரும் என்று தோன்றினால் அதனை பதிவிடாமல் இருப்பதே நலம்.
,
Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget