நேரத்தை விரையமாக்கும் தொழிற்நுட்ப சாதனங்கள்

புதிய தொழில்நுட்பங்கள் உருவாவது வேலையை எளிதாக்கவும், விரைவாக செயல்படவும்தான் என்ற எண்ணத்தை மாற்றும் வகையில் இன்றைய டிஜிட்டல் சாதனங்கள் நமது கவனத்தை சிதறடித்து நேரத்தை விரையமாக்குவதாக பல நாடுகளிலும் நடைபெற்ற ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அயல் நாட்டு மக்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தாலும் அதன் முடிவுகள் இந்தியாவிற்கும் பொருந்தக் கூடியதாகவே இருக்கிறது.

உடல் உறுப்பா கைபேசி?
கைபேசிகள் அத்தியாவசியத் தகவல் தொடர்பு கருவியாக இருந்தாலும், பணி புரியும் இடங்கள் மற்றும் வகுப்பறைகளில் கைபேசியின் உபயோகம் குறித்துப் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.பெரும்பாலான ஆசிரியர்கள் கல்வி நிலையங்களில் கைபேசிகளை அணைத்து விட்டு வகுப்பறைக்குள் வரும்படி ஆணை இடுகிறார்கள். வேறு சிலர் வகுப்பறைக்குள் எந்தவிதமான சாதனங்களையும் அனுமதிப்பதில்லை. பாடம் நடத்தும்போது எத்தொல்லையும் இல்லாவிடில் சாதனப் பயன்பாட்டை மிகவும் திறந்த மனதுடன் அனுமதிக்கும் சிற்சில ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.நியூயார்க் பல்கலைக்கழகத்தில் சமூக ஊடகங்கள் கோட்பாடும் செயல்முறையும் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர், திரு. க்ளே ஷர்க்கி என்பவர் அண்மைக் காலத்தில் வகுப்பறைகளில் மடிக்கணினிகள் மற்றும் இதர சாதனங்களின் பயன்பாட்டை ஒட்டு மொத்தமாகத் தடைசெய்யும் முடிவை எடுத்திருக்கிறார். 

லேப்டாப், டேப்லட் மற்றும் கைப்பேசிகளை உபயோகிக்கும்போது மாணவர்களின் கவனம் சிதறலுக்குள்ளாகிறது என்றும் கவன சிதறலைக் குறைப்பது கடினமாக இருப்பதையும் அனுபவத்தில் கண்டார். கைபேசி போன்ற சாதனங்களை வகுப்புகளில் தடை செய்தபோது மாணவர்களின் கவனமும், கலந்துரையாடல் தரமும் உயர்ந்தது என்றும் குறிப்பிடுகிறார்.இந்த அனுபவத்தைப் பற்றி அவர், “யாரோ ஒருவர் புத்தம் புதியக் காற்றை வகுப்பறைக்குள்ளே நுழையவிட்டது போல இருந்தது” என்று கூறுகிறார். டிஜிட்டல் சாதனங்கள் நம்முடைய கவனத்தை திசை திருப்புவதற்காகவே வடிவமைக்கப்பட்டவை என்றும், ஆசிரியர்கள் எந்திரங்களுக்கு எதிராகப் போராடிட வேண்டும் என்றும் கூறுகிறார்.

கவனச் சிதறல்
தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாட்டை வகுப்பறைக்குள் ஓரளவு கட்டுப்படுத்திவிட முடியும் என்றாலும், மாணவர் விடுதிகள், படிக்கும் மேசை, உணவகங்கள், மாணவர்கள் குழுக்களாகப் பங்கேற்று கலந்துரையாடும் இடங்களில் நாம் என்ன செய்ய இயலும்?சிணுங்கும் கைபேசிகள், பளிச் பளிச்சென்று மின்னும் திரைகள், குறுஞ்செய்தியின் வருகையை அறிவிக்கும் சமிக்ஞைகள், ஃபேஸ்புக் கணக்கில் தோன்றும் புது வரவு செய்திகள், நேரடி ஒளிக் காட்சி அழைப்புகள் என இவற்றிலிருந்து நம்மை எப்படி ஒதுக்கி வைப்பது?

நம்மில் பெரும்பாலோர் முழுமையான பணி ஈடுபாட்டுடன்தான் கணினிக்கு முன்பாக அமர்கிறோம். வேலையை இன்று முடித்துவிடவேண்டும் என்று திட்டமிட்டுத் தொடங்குகிறோம்.
 கணினியில் இணைய பிரௌசரை தேவை கருதித் திறக்கிறோம். தகவலைத் தேடும் பொருட்டு நுழைந்து அடுத்தடுத்து பல திரைகளைத் திறக்கிறோம். கைகள் ஓய்வின்றி மௌசைக் கிளிக் செய்வதிலும், கீபோர்டைத் தட்டுவதையும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், செய்ய வேண்டிய வேலை மட்டும் தொடங்கிய இடத்திலேயே நின்று கொண்டிருக்கும். நேரம் மட்டும் மணிக்கணக்கில் கரைந்து போயிருக்கும். 

இதில் அபாயகரமான அம்சம் என்னவென்றால் நமது கவனம் சிதறடிக்கப்படுகிறது என்பதை நாம் உணராமல் இருப்பதுதான்.பணியை விரைவாக முடிப்பதற்கு பல்வேறு வழிமுறைகளைக் கையாள்கிறோம், திட்டமிடுகிறோம்.ஆனால், கவனச்சிதறல் நமது மூளைக்குள்ளிருந்து வருகிறபோது, அதை கட்டுப்படுத்துவது மிக மிகக் கடினமாக இருக்கிறது.
இதனை உணர்வதற்குள்ளாக நமக்கு சில மணித்துளிகள் கடந்துவிடுகின்றன.

வேலை செய்து கொண்டிருக்கும்போது சிலர் தொலைக்காட்சி பார்ப்பதும், கைபேசி மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பதையும் வாடிக்கையான நிகழ்வாக்கிவிட்டனர்.வகுப்பறைகளில் தரப்படும் குறிப்புகளைப் படிப்பதற்கும், பாடம் நடத்தும்போது கேட்பதற்கும், கட்டுரைகள் எழுதவும் முழுமையான கவனமும் அறிவுப்பூர்வமான ஈடுபாடும் அவசியம். கவன சிதறலுக்கு மின்னணு சாதனங்கள்தான் முழுமையான காரணம் என்றும் கூறிவிட இயலாது. நமக்கு விருப்பம் இல்லாத ஒன்றின் மீதோ அல்லது வேலையின் மீதோ கவனத்தை முழுமையாக செலுத்துவது கடினமானது என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.இயற்கையாகவே அலைபாயும் நிலை கொண்ட நமது மனத்தை இத்தகைய டிஜிட்டல் சாதனங்கள் தூண்டிவிட்டு அங்கும் இங்குமாக இழுத்துத் செல்கின்றன.
இதனை சரியாக உணர்ந்து கொண்டால் கவனம் சிதறுவதை தடுத்திட முடியும்.

உங்களிடம் நீங்களே சில கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள்: 

உடனடியாகக் கவனத்தை நிலைநிறுத்த செய்ய வேண்டியவை என்ன?

மின்னஞ்சல் வந்திருக்கிறதா என்றும், சமூக வலைத்தளத்தில் ஸ்டேட்டஸ் அப்டேட் என்ன என்றும் அடிக்கடி பார்த்துக் கொண்டிருப்பது அவசியமா? 

வேலையில் ஈடுபட்டிருக்கும் போது வலைத்தளங்களில் கவனம் செலுத்துவதால் நமக்கு ஏற்படும் நன்மை என்ன?

இந்தக் கேள்விகளுக்கான விடைகள் உங்களுக்குச் சாதாரணமாகத்தான் இருக்கும்.

கவனச் சிதறல் மற்றும் நேரத்தை சரியாகப் பயன்படுத்த நீங்களாகவே சுயக்கட்டுப்பாட்டை உருவாக்கிக் கொள்ளவேண்டும். நீங்கள் மாணவராக இருந்தால் உங்களுடைய ஆசிரியர்கணினி, டேப்லட், கைபேசி ஆகியவற்றிற்கு தடைபோடாவிட்டாலும், நீங்களாகவே அந்தத் தடையை போட்டுக்கொள்ளுங்கள்.

பணிபுரிபவராக இருந்தால் கொடுக்கப்பட்ட பணியை முடிப்பதற்குத் தேவையான விபரங்களை முதலில் சேகரித்துக் கொள்ளவும். பணி முடியும் வரை தேவையான ஒரு இணைய தளத்தின் திரையை மட்டும் திறந்து வைத்துக் கொண்டு பணியாற்றவும். வேறு திரைகள் அனைத்தையும் மூடிவிடவும்.
Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget