தொழில்நுட்ப உலகில் நாம் அறிந்ததும் அறியாததும்


கணினி, கைபேசி, டிஜிட்டல் கடிகாரம் எனப் பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளன. அவற்றில் உள்ள சில நுணுக்கமான விஷயங்களைப் பற்றி நாம் அறிந்து கொண்டிருப்பதில்லை.கணினியின் விசைப்பலகையில் f மற்றும் j எழுத்துக்கள் உள்ள கீகளில் மட்டும் சிறு மேடு போன்ற அமைப்பு ஏன் தரப்பட்டுள்ளது? குவெர்ட்டி கீபோர்டு என்று ஏன் குறிப்பிடப்படுகிறது? விண்டோஸ் எக்ஸ்பியில் புகழ்பெற்ற பசுமை சமவெளியும் நீலவானமும் கொண்ட பின்புலக் காட்சியை உருவாக்கியது யார்? இதுபோன்ற அன்றாடப் பயன்பாட்டில் இருக்கக்கூடிய பல வியப்பிற்குரிய விஷயங்களுக்கான பின்னணிக் காரணத்தை அறிந்து கொள்வதும் அவசியமானதுதானே!

குவெர்ட்டி கீபோர்டு


கணினிகள் கண்டுபிடிக்காத அக்காலத்தில் தட்டச்சு இயந்திரத்தில் சுத்தி போன்றிருக்கும் டைப்ரைட்டர் கீகளை வழக்கமான A, B, C, D என்ற அகர வரிசையில் அமைத்துத் தட்டும்போது ஒன்றுக்கொன்று உரசி இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனை இயந்திரத்திற்கு ஏற்ற முறையில் 1872 ஆம் ஆண்டில் கிறிஸ்டோபர் ஷோல்ஸ் என்பவர் மாற்றியமைத்தார். அவர் அமைத்த வரிசையின் தொடக்க எழுத்துக்கள் Q, W, E, R, T, Y ஆகும். இந்த எழுத்துக்களை இணைத்தே QWERTY கீபேட் என்று அழைக்கப்படுகிறது. கணினி உருவாக்கப்பட்ட பிறகும் இந்த வகை  கீபேட் அமைப்பே உலக அளவில் அதிகமாகப் பயன்பாட்டில் உள்ளது.

கீபோர்டில் F J கீகளின் முக்கியத்துவம்.


தட்டச்சு பயிற்சியில் அடிப்படைப் பாடமாக அமைவது இந்த f மற்றும் j எழுத்துக்களை உபயோகிப்பதுதான். இடது கையின் ஆள்காட்டி விரல் f எழுத்தையும், வலது கை ஆள்காட்டி விரல் j என்ற எழுத்தையும் முதல் எழுத்தாக கொண்டு பாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கீபோர்டிலுள்ள எழுத்துக்களை அடையாளம் காண இந்த இரு எழுத்துக்களை அடையாளம் கண்டு கொண்டாலே போதும். மற்ற எழுத்துக்கள் உள்ள இடங்களை விரைந்து உணர்ந்து கொள்வர் என்பதற்காகவே அனைத்து தட்டச்சு விசைப்பலகைகளிலும் இவ்விரு எழுத்துக்களிலும் மேடு போன்ற அமைப்பு தரப்பட்டுள்ளது.

விண்டோஸ் எக்ஸ்பி திரைக்காட்சி

விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்திய அனைவருக்கும் மறக்க முடியாதது அதன் திரைக்காட்சிதான். பசுமைப் புல்வெளியும், நீலவானமும் கொண்ட அப்படத்தை எடுத்தது நேஷனல் ஜியோகிராபியின் புகைப்படக்காரர் சார்லஸ் ஓ ரியர் என்பவர்தான்.1996ஆம் ஆண்டு தன் மனைவியை காண்பதற்காக வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது சோனோமோ என்ற இடத்தில் இக்காட்சியை படமெடுத்தார். பின்னர், மைக்ரோசாப்டின் புகைப்படம் மற்றும் உரிம சேவைகளை வழங்கும் கோர்பிஸ் என்ற துணை நிறுவனத்திடம் அளித்தார். அப்படம் பெரும்பான்மை மைக்ரோசாப்ட் நிர்வாகிகளால் கவரப்பட்டு 2001ஆம் ஆண்டு வெளியான எக்ஸ்பி இயங்குதளத்தின் அதிகாரப்பூர்வ வால்பேப்பராக ‘பிலிஸ்’ என்ற பெயரில் இடம்பெற்றது.

கார்னிங் கொரில்லா கிளாஸ்

பெரும்பாலான முன்னணி மொபைல், டேப்ளட் போன்ற சாதனங்களின் திரைக்கு கவசமாக இருப்பது கார்னிங் நிறுவனத்தின் கொரில்லா கிளாஸ் என்ற கண்ணாடியாகும். ரேஸ் கார்களுக்கு உடையாத உறுதியான கண்ணாடிகளை உருவாக்கிவந்த கார்னிங் நிறுவனத்திடம் ஆப்பிள் நிறுவனம் தன் ஐபோனுக்கான மேற்புறக் கண்ணாடிகளை உருவாக்கித்தரக் கோரியது. அதன்பிறகு, அந்நிறுவனம் மொபைல் சாதனங்களுக்கு ஏற்ப மெல்லியதாகவும், உறுதிமிக்கதாகவும், மற்றும் கீறல் விழாத வகையிலும் பல்வேறு இரசாயனங்களைப் பயன்படுத்தி இக்கண்ணாடிகளை உருவாக்கி வருகிறது.“கொரில்லாவைப் போன்ற பலமும் கடினத்தன்மையும் கொண்டிருப்பது” என்ற பொருளில் கொரில்லா கிளாஸ் என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
. Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget