ஓப்பன் சோர்ஸ்: மென்பொருள் சுதந்திரம்


நம் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ கணினி வாங்குவதாக இருந்தால் என்ன செலவாகும், கணினி வன்பொருட்கள் (ஹார்டுவேர்ஸ்) வாங்க குறைந்தபட்சம் ஒரு இருபதாயிரம்... அப்புறம் கம்ப்யூட்டர் இயங்குவதற்கான இயங்குதள மென்பொருளும் (ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர்) உங்கள் தேவைக்குகந்த பிற மென்பொருட்களையும் பதிந்து கொடுப்பதற்கு நீங்கள் எவ்வளவு செலவழிப்பீர்கள். ஒரு ஐநூறு அல்லது ஆயிரம் இப்படித்தான் பொதுவாக கணக்கிடுவோம். ஆனால் உண்மையில் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதள மென்பொருளான விண்டோஸின் குறைந்தபட்ச விலை ரூ. நான்காயிரத்து ஐநூறு, கடிதம் எழுத, கணக்கீடுகள், பிரசண்டேசன் போன்ற அன்றாட பயன்பாடுகளுக்கான எம்எஸ் ஆபிஸ் தொகுப்பின் குறைந்தபட்ச விலை ரூ.நான்காயிரத்து சொச்சம், கணினி பாதுகாப்புக்கு வைரஸ் தடுப்பு மென்பொருளுக்கென்று தனியாக ஒரு ஆயிரம் என இதற்கே பத்தாயிரம் ரூபாய் வரை செலவழிக்கவேண்டியிருக்கிறது. இது கூட வீட்டுக்கணினிக்கானதுதான். அலுவலகக் கணினி என்றால் மென்பொருள்களுக்கான செலவு இன்னும் சில ஆயிரங்களை விழுங்கும். ஒரு கணினிக்கு வாங்கியதையே மற்றொரு கணினிக்கும் பயன்படுத்தலாமே என்று நினைத்தால் அது மென்பொருள் நிறுவன பதிப்புரிமை சட்டப்படி குற்றம்.
இது எப்படி இருக்கிறதென்றால், நம் வீட்டில் பழச்செடி வளர்க்க விரும்பி ஒருவரிடமிருந்து விதைகளை வாங்கி பயிரிட்டு வளர்ப்போம். அதிலிருந்து பழம் பறிப்போம், சுவைப்போம் அல்லது விற்போம். இது நடைமுறை. ஆனால் அந்த செடியின் விதைகளை வேறொருவருக்கு விற்கவோ, அல்லது நண்பருக்கு இலவசமாக கொடுக்கவோ நமக்கு உரிமை கிடையாது. என்ன இது அபத்தம் என்கிறீர்களா? அதுதான் இன்றைய வர்த்தக காப்புரிமை சட்டங்களின் லட்சணங்கள்.
ஒவ்வொரு முறையும் கட்டாயம் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு பயன்பாட்டுக்கான கட்டணத்தை கணினி எண்ணிக்கைக்கு ஏற்றவாறு செலுத்தவேண்டும். அப்பொழுதும்கூட அந்த மென்பொருள் நம்முடையதாகாது. பயன்படுத்துவதற்கான கட்டணம் மட்டுமே என்று பதிப்புரிமை சட்டம் சொல்கிறது. பதிப்புரிமைச் சட்டங்களைப் பற்றி மார்க் ட்வைன் இவ்வாறு குறிப்பிடுகிறார். கடவுளால் முடியாதது ஒன்று மட்டுமே; அஃது இந்த உலகத்தில் உள்ள பதிப்புரிமை சட்டங்களில் உள்ள அர்த்தத்தை அறிந்துகொள்வதே. (பதிப்புரிமை சட்டங்கள் யாவும் அனர்த்தமானவை என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.)
இத்தகைய காப்பிரைட் மென்பொருள்களுக்கு மாற்றாக உருவானதுதான் தற்கால காப்பிலெப்ட் (பொதுவுடைமை) மென்பொருள்கள். ஓப்பன் சோர்ஸ் (கட்டற்ற மென்பொருள்) என்ற பொதுவான பெயரிலேயே தற்போது இவை அழைக்கப்படுகின்றன. தொடக்க காலத்தில் அதாவது 1984ல் முதன் முதலாக திறந்த மூல நிரல் (ஜிஎன்யு) திட்டத்தை வெளியிட்டார் ரிச்சர்ட் ஸ்டால்மேன். இவரே இன்றைய ஓப்பன் சோர்ஸ் திட்டத்திற்கு தந்தை என்றும் போற்றப்படுகிறார்.
யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளத்தினை (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) உருவாக்கிட 1984 ம் ஆண்டு துவக்கப்பட்டத் திட்டம் குனுத் திட்டமாகும். இவ்வியங்கு தளம் கட்டற்ற மென்பொருளாகும். இதற்கு குனு அமைப்பென்று பெயர். குனுவின் கரு பூர்த்தியடையாததால் லினக்ஸ் கருவுடன் பயன்படுத்தப் படுகிறது. இன்று பலக் கோடிப் பேர் பயன்படுத்தும் இந்த குனு மற்றும் லினக்ஸின் கூட்டமைப்பிற்கு குனு/ லினக்ஸ் என்று பெயர். (சில நேரங்களில் இக்கூட்டமைப்பு லினக்ஸ் எனத் தவறாக அழைக்கப்படுகின்றது.)
ஓப்பன் சோர்ஸ் (தமிழில் கட்டற்ற மென்பொருள்) என்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாமல் சுதந்திரத்தினை அடிப்படையாகக்கொண்டது. இதனை இலவசமாகக் கருதாமல் சுதந்திரமாக கருத வேண்டும் என்கிறார் முதல் ஓப்பன் சோர்ஸை வெளியிட்ட ரிச்சர்ட் ஸ்டால்மேன்.
இது மென்பொருளை பயன்படுத்தும் ஒருவருக்கு அம்மென்பொருளை இயக்க, படியெடுக்க, விநியோகிக்க, கற்க, மாற்றியமைத்து மேம்படுத்தக் கூடிய உரிமைகளைப் பற்றியது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாயின் மென்பொருளொன்றைப் பயன்படுத்தும் பயனொருவருக்கு அதன் மீதுள்ள நான்கு வகையான சுதந்திரத்தைப் பற்றியது:
1. எப்பொருட்டும் நிரலினை இயக்கக் கூடிய சுதந்திரம்
2. நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்று தமது தேவைக்கேற்றாற் போல் ஆக்கிக் கொள்ளக் கூடியச் சுதந்திரம். முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
3. பிறரும் பயனுற வேண்டி படியெடுத்து விநியோகிப்பதற்கான சுதந்திரம்.
4. ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்திரம். முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
மைக்ரோசாப்ட், அடோப், ஆப்பிள், மெஸிண்டோஸ் என்று எண்ணற்ற நிறுவனங்களின் வர்த்தக அறைகூவல்களுக்கு மத்தியில் அனைத்து வசதிகளுடன் ஒரு மென்பொருள் எப்படி கிடைக்கும்? அது நமக்கு எளிதானதாக இருக்குமா? இப்படி நமக்கு எழும் பல கேள்விகளுக்கும் ஏன் முடியாது என்று கேட்டு பல்வேறு மென்பொருட்களையும் உருவாக்கி சாதித்துக் கொண்டிருக்கிறது குனு/லினக்ஸ்.
அப்படியானால் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்கள் இலவசமாக கிடைப்பவை என்றோ அல்லது இணை யத்தில் நமக்கு இலவசமாக கிடைக்கும் (ஃபிரிவேர்) எண்ணற்ற மென்பொருள் கள் யாவும் ஓப்பன் சோர்ஸ் என்றோ நினைத்தால் அது தவறு. ஓப்பன் சோர்ஸ் என்பது பயன்படுத்துபவருக்கான சுதந்திரத்தை பற்றியது. அதனாலேயே சுதந்திர மென்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது.
ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்கள் அனைத்தும் உலகிற்கும் உலக மக்களுக் கும் பொதுவானவை. தேவைப்படுபவர் கள் இலவசமாகவோ, கட்டண முறையிலோ பெறலாம், உபயோகிக்க லாம் பிறருக்கு விற்பனை செய்யலாம் அல்லது இலவசமாகவும் கொடுக்கலாம். அதில் உங்களது தேவைக்கேற்றவாறு மாற்றங்களும் செய்து கொள்ளலாம். படியெடுக்கலாம். மாற்றியமைத்ததை விற்பனை செய்யலாம் (மூல நிரல்களுடன் கொடுப்பது கட்டாயம்).
இது வியாபாரத்திற்கு உதவாதே என்று நீங்கள் நினைக்கலாம். இது புத்திசாலித்தனத்திற்கும், மென்பொருள் உருவாக்குபவர்களின் திறமைக்குமான விசயம். ஆம், இன்று இணைய உலகின் தகவல் களஞ்சியம் விக்கிபீடியாவும், இணையதளங்களை பார்க்க உதவும் இண்டெர்நெட் பிரௌசரான ஃபயர் பாக்ஸ் -ம் ஓப்பன் சோர்ஸ்-க்கு மிகச்சிறந்த உதாரணங்கள். இவை மட்டுமல்ல விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற்றாக லினக்ஸ், ப்ரீஸ்பையர், எம்எஸ் ஆபிஸ் மென்பொருளுக்கு மாற்றாக ஓப்பன் ஆபிஸ், இணைய தளங்களை பதிவேற்ற இறக்க உதவும் பைல்ஜில்லா, இ-மெயில்களை நிர்வகிக்கும் அவுட்லுக் எக்ஸ்பிரசுக்கு மாற்றாக தண்டர்பேர்டு, வைரஸ்களை நீக்கும் கிளாம்வின், இணையத்தில் கருத்து, கட்டுரை, கவிதை போன்ற நம் சொந்த படைப்புகளை வெளியிட உதவும் வேர்ட்பிரஸ் தளம் என்று இதுபோல இன்னும் இன்னும் பல நூறு மென்பொருட்கள் இலவசமாகவே இணையத்தில் கிடைக்கின்றன. இந்த மென்பொருள்கள் குறித்த தகவல்களைப்பெறுவதற்கு இந்த இணையதளம் உங்களுக்கு உதவும். http://www.fsf.org
Related Posts with Thumbnails

புதிய பிரௌசர் - கூகுள் குரோம் (google chrome)

இண்டெர்நெட் உலகில் தேடல், மெயில், ஆன்லைன் டாக்குமெண்ட், விளம்பரம், சேட்டிலைட் மேப்பிங் என்று பல துறைகளிலும் முன்னணி வகிக்கும் கூகுள் நிறுவனம் தனது அடுத்த படைப்பாக கூகுள் குரோம் என்ற இண்டெர்நெட் பிரவுசரை நேற்று அறிமுகப்படுத்தியது. இன்டர்நெட் பயன்பாட்டுக்கு மிகவும் முக்கியமானது, அடிப்படையானது பிரௌசர். இது தற்போது சோதனை பதிப்பாக (Beta) வெளியிடப்பட்டிருக்கிறது.
தற்போது பல வகையான பிரௌசர்கள் வலையுலகில் உலவிக் கொண்டுள்ளன. அதில் அதிகம் பிரபலமானது இன்டர்நெட் எக்ஸ்புளோரர்தான். ஆகஸ்ட் மாத சந்தை நிலவரப்படி இன்டர்நெட் பயன்பாட்டாளர்களில் 73 சதவீதம் பேர் இதைத்தான் பயன்படுத்துகின்றனர். இதுதவிர
பயர்பாக்ஸ் (19.73 சதவீதம் ), சஃபாரி (6.73 சதவீதம் ), ஒபேரா (0.74 சதவீதம் ) ஆகிய பிரவுசர்களும் புழக்கத்தில் உள்ளன. முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பங்கு 90 சதவீதமாக இருந்தது. ஆனால்
பயர்பாக்ஸ் வந்த பின்னர் எக்ஸ்புளோரரின் பங்கு குறைந்து விட்டது. இந்நிலையில் மைக்ரோசாப்ட்டுக்கு இன்னொரு அடியாக கூகுளும் பிரௌசர் உலகில் கால் எடுத்து வைக்கிறது. இந்த பிரௌசர் பல சிறப்புகளை உள்ளடக்கியதாக உள்ளது. தேடுதல், வீடியோ ஸ்ட்ரீமிங், இமேஜ் சர்ச், இமெயில் உள்ளிட்ட பல பயன்பாடுகளை தற்போது கூகுள் தன் பக்கம் வைத்துள்ளது. இந் நிலையில் தனது 'குரோம் பிரௌசர்' மூலம் இன்டர்நெட் பயன்பாட்டாளர்களை ஒட்டுமொத்தமாக தன் பக்கம் இழுக்க திட்டமிட்டுள்ளது கூகுள்.
இன்டர்நெட் உலகம், குரோம் 'பேட்டை' ஆகுமா, கூகுள் சவாலை எக்ஸ்புளோரரும், பயர்பாக்ஸும் சமாளிக்குமா என்பதை என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். குரோம் பிரவுசர் உபயோகித்ததில் சாதாரணமாக தெரிந்த சில நல்ல விஷயங்கள்: தரவிறக்கம் எளிதில் ஆகிறது. தரவிறக்கம் செய்வதற்கு ஃபயர் பாக் போலவே தனி தரவிறக்க அமைப்பு. அட்ரஸ் பாரில் வலை முகவரி தட்டச்சு செய்யும் பொழுதே நாம் தேடும் வலைத்தளம் இதுவா எனும்படி (கூகிள் தேடல் டூல்பார் மாதிரி) குறிப்புகள் பட்டியலிடப்படுகின்றன. ஒரே சன்னலில் பல பக்கங்கள் திறக்கும் வழி (டேப் பிரௌசிங்) இதிலும் இருக்கிறது. வேகமாக வலைகள் திறக்கின்றன.
அப்புறம் சில குறைகளும் தெரிகின்றன. அதில் குறிப்பாக, தமிழ் இணைய பயன்பாட்டாளர்களுக்கு உதவும் இ-கலப்பையை இதில் உபயோகப்படுத்த முடிவதில்லை. பிரௌசர் வழி செயல்படும் மென்பொருள்கள் (அப்ளிக்கேஷன்கள்), குறிப்பாக ஜாவாவினால் இயங்கும் மென்பொருள்கள் செயல்படுவதில்லை. (உதாரணமாக ஆரக்கிள் இ-பிஸினஸ் சூட்). இன்னும் மற்ற குறைகள் இனிமேல்தான் கவனிக்கவேண்டும்.
குரோம் பிரவுசர் தற்போது சோதனை வெளியீடு என்பதால் இந்த குறைகள் முழுப்பதிப்பில் சரிசெய்யப்படலாம் என்று நம்பலாம்.
சரி... ஏன் இந்த பிரௌசரை கூகிள் அவசரம் அவசரமாக வெளியிட்டது தெரியுமா? புதிதாக வெளிவந்துள்ள மைக்ரோசாப்ட் இண்டர்னெட் எக்ஸ்புளோரர்-8 -ல் விளம்பரங்கள் ஆகியவற்றை வடிகட்ட (Filter) செய்யும் வசதி உள்ளது. இதனால் கூகிள் விளம்பரங்கள் (கூகுள் ஆட்சென்
ஸ்) பாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதன் காரணமாகவே இண்டர்நெட் எக்புளோரர் பயன்பாட்டை குறைக்கும் வகையில் தனது பிரவுசரை களத்தில் இறக்கியிருக்கிறது கூகுள் என்று வியாபார வட்டாரங்கள் கூறுகின்றன.
கூகுள் பிரவுசரை தரவிறக்கம் செய்ய:http://www.google.com/chrome
Related Posts with Thumbnails

60 ஆண்டு கால இந்திய பொருளாதார வரலாறு

Related Posts with Thumbnails

நூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்!

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் உள்ள துங்குஸ்கா ஆற்றுப்படுகை அருகே 1908 ம் ஆண்டு நடந்த ஒரு இயற்கை அதிசயம் 100 ஆண்டுகளாக மர்மமாகவே நீடிக்கிறது. ‘துங்குஸ்கா நிகழ்வு’ என்று அறிவியலறிஞர்களால் குறிப்பிடப்படும் இந்நிகழ்வைப் பற்றிய மிகச்சரியான விளக்கம் இதுவரை யாராலும் அளிக்கப் படாததே இதற்குக் காரணமாகும்.
1908ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி காலை 7.17 மணி. ரஷ்யாவின் மத்திய சைபீரியா பகுதியில் இருந்த மக்கள் அடிவானிற்கு மேலே நீலம் கலந்து வெண்மையுடன் ஒளிரும் பொருள் ஒன்றைக் கண்டனர். நீண்ட வால் போன்ற அமைப்புடன் எரிந்து கொண்டிருந்த அப்பொருளானது மிக வேகமாக வானின் குறுக்கே கடந்து சென்றது. நிலத்திலிருந்து சுமார் 5 லிருந்து 10 கி.மீ உயரத்தில் அது காணப்பட்டது. பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த மர்மப்பொருள் பொட்காமென்யா துங்குஸ்கா ஆற்றின் அருகே பெரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.வெடிச்சத்தம் ஏறக்குறைய 10 முறை சீரான இடைவெளியுடன் கேட்டதாக கூறப்பட்டது. நேரில் பார்த்தவர்கள் இச்சத்தத்தை பீரங்கி வெடிப்புடனும், இடியுடனும் ஒப்பிடுகின்றனர். இந்த வெடிப்பின் ஆற்றல் ஹிரோஷிமாவில் அமெரிக்கா வெடித்த அணுகுண்டைக் காட்டிலும் 1000 மடங்கு அதிகமானது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போது வெளியிடப்பட்ட ஆற்றல் 5 லிருந்து 30 மெகாடன் டிஎன்டி ஆகும். (டிஎன்டி என்பது ட்ரை நைட்ரோ பொலுவீன் என்ற வெடிபொருளைக்குறிக்கும். இது வெடிப்பின் போது வெளிப்படும் ஆற்றலின் அளவாகும்)
இந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட பூமி அதிர்வு அப்பகுதியில் மட்டுமல்லாது பலநூறு மைல்களுக்கு அப்பாலிருந்த இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளில் கூட உணரப்பட்டது. நிலநடுக்கத்தை அளக்கப்பயன்படும் ரிக்டர் அளவுகோல் அன்று கண்டறியப்பட வில்லை என்றாலும், சுமார் 5 புள்ளிகளாக அந்த அதிர்வு பதிவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. வளிமண்டல அழுத்தத்திலும் இந்த நிகழ்வு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் கூட இத்தகைய அழுத்த வேறுபாடு உணரப்பட்டது. பின்னர் சிறிது நேரம் கழித்து காந்தப்புயல் ஒன்று வீசியது. 4 மணி நேரம் நீடித்த இந்த காந்தப்புயல் பொதுவாக அணுகுண்டு வெடிப்புக்குப்பின்பு ஏற்படும் மாற்றங்களை ஒத்திருந்தது. பின்னர் பல நாட்களுக்கு வானம் வெள்ளிநிற மேகங்களுடன் காட்சியளித்தது. சைபீரியப் பகுதி முழுவதும் அதையொட்டிய ஐரோப்பிய எல்லைப்புறங்களிலும் இந்த மேகங்கள் உலாவந்தன. இந்த மேகங்களால் இரவு நேரம் கூட வெளிச்சமாகக் காணப்பட்டதால் அந்த இரவுகள் ‘வெள்ளை இரவுகள்’ என்றே பெயர் பெற்றன. வெடிப்பின் போது சிதறிய விண்பொருளின் துணுக்குகள் வானத்தில் பரவியிருந்ததாலேயே இந்த வெளிச்சம் நிலவியதாக கூறப்படுகிறது.
1921 ம் ஆண்டு முதல் ரஷ்யா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல்வேறு ஆய்வுக்குழுக்கள் துங்குஸ்கா நிகழ்வு பற்றிய அறிவியல் உண்மைகளை அறிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டன. வெடித்துச்சிதறிய அந்த மர்மமான விண்பொருள் பல மைல்கள் வானில் பயணம் சென்றதை உறுதிப்படுத்திய அவ்விஞ்ஞானிகள் அது விண்கல்லா அல்லது வால்மீனா என்பதில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தனர். விண்கல்லாக இருந்தால் வெடித்துச் சிதறிய போது அதன் துகள்கள் பூமியில் சிதறியிருக்கும். ஆனால் அப்படிப்பட்ட துகள்கள் எதுவும் ஆய்வுக்குழுவினரின் கண்ணில் படவில்லை. மிகக்குறைவான அளவில் சில விண்பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்றாலும் அவற்றைக்கொண்டு ஒரு உறுதியான முடிவுக்கு வர இயலவில்லை. அந்த மர்மமான விண்பொருளானது முற்றிலும் படிக அமைப்பு கொண்ட விண்கல்லாக இருக்க முடியாது என்று இதிலிருந்து தெளிவானது. ஏனெனில் விண்கல்லாக இருந்திருப்பின் நிச்சயமாக அதன் துணுக்குகள் பூமியில் சிதறியிருக்கும்.
1970 ல் ஆய்வு மேற்கொண்ட சோவியத் அறிவியல் மைய விஞ்ஞானி ஜார்ஜ் பெட்ரோவ் என்பவர் துங்குஸ்கா நிகழ்வு குறித்த தனது ஆய்வுமுடிவுகளை வெளியிட் டார். அந்த விண்பொருளானது வால்மீனின் அமைப்பை பெருமளவில் ஒத்திருந்ததாக அவர் தெரிவித் தார். (அதற்கு முன்பே வால்மீன் கொள்கை ஒன்று அறிவியலறிஞர்களால் உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது). அதன் அடர்த்தி 0.01 கிராம்/கன செ.மீ (புதிதாகப் பெய்யும் பனிக்கட்டியைக் காட்டிலும் 5-10 மடங்கு குறைவு) ஆக இருந் திருக்கும் என்றுகூறிய பெட்ரோவ், அது முழுக்க, முழுக்க வாயுவால் ஆன பொருளல்ல என்று கூறினார். பனிக்கட்டிகளாலும், சிலிக்கேட் மற்றும் இரும்புத்துகள்களாலும் அது ஆக்கப்பட்டிருக்கலாம் என யூகித்தார்.
வால்மீன் கொள்கை ஓரளவு சரியாக துங்குஸ்கா நிகழ்வை விளக்கினாலும் பல அம்சங்களை விளக்கவில்லை. உதாரணமாக வெளிச்சம் நிறைந்த வானம், வெடிப்புப் பகுதியில் விண்துகள்கள் இல்லாதது குறித்து சரியான விளக்கமளிக்கும் இக்கொள்கை, நில அதிர்வைப்பற்றியோ, உயிரினங்கள், குறிப்பாக தாவரங்களில், ஏற்பட்ட ஜீன் மாறுபாடுகள் குறித்தோ விளக்கவில் லை. அதனால் ‘துங்கஸ்கா நிகழ்வு’ 100 ஆண்டுகளாக ஒரு மர்மமாகவே உள்ளது.
இதன் நூற்றாண்டை நினைவுகூரும் விதமாக கடந்த ஜூன் மாதம் 26 முதல் 28 வரை ரஷ்யாவின் கிராஸ்னாயார்ஸ்க் நகரில் நூற்றாண்டு மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. Related Posts with Thumbnails

wibiya widget