ஓப்பன் சோர்ஸ்: மென்பொருள் சுதந்திரம்


நம் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ கணினி வாங்குவதாக இருந்தால் என்ன செலவாகும், கணினி வன்பொருட்கள் (ஹார்டுவேர்ஸ்) வாங்க குறைந்தபட்சம் ஒரு இருபதாயிரம்... அப்புறம் கம்ப்யூட்டர் இயங்குவதற்கான இயங்குதள மென்பொருளும் (ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர்) உங்கள் தேவைக்குகந்த பிற மென்பொருட்களையும் பதிந்து கொடுப்பதற்கு நீங்கள் எவ்வளவு செலவழிப்பீர்கள். ஒரு ஐநூறு அல்லது ஆயிரம் இப்படித்தான் பொதுவாக கணக்கிடுவோம். ஆனால் உண்மையில் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் இயங்குதள மென்பொருளான விண்டோஸின் குறைந்தபட்ச விலை ரூ. நான்காயிரத்து ஐநூறு, கடிதம் எழுத, கணக்கீடுகள், பிரசண்டேசன் போன்ற அன்றாட பயன்பாடுகளுக்கான எம்எஸ் ஆபிஸ் தொகுப்பின் குறைந்தபட்ச விலை ரூ.நான்காயிரத்து சொச்சம், கணினி பாதுகாப்புக்கு வைரஸ் தடுப்பு மென்பொருளுக்கென்று தனியாக ஒரு ஆயிரம் என இதற்கே பத்தாயிரம் ரூபாய் வரை செலவழிக்கவேண்டியிருக்கிறது. இது கூட வீட்டுக்கணினிக்கானதுதான். அலுவலகக் கணினி என்றால் மென்பொருள்களுக்கான செலவு இன்னும் சில ஆயிரங்களை விழுங்கும். ஒரு கணினிக்கு வாங்கியதையே மற்றொரு கணினிக்கும் பயன்படுத்தலாமே என்று நினைத்தால் அது மென்பொருள் நிறுவன பதிப்புரிமை சட்டப்படி குற்றம்.
இது எப்படி இருக்கிறதென்றால், நம் வீட்டில் பழச்செடி வளர்க்க விரும்பி ஒருவரிடமிருந்து விதைகளை வாங்கி பயிரிட்டு வளர்ப்போம். அதிலிருந்து பழம் பறிப்போம், சுவைப்போம் அல்லது விற்போம். இது நடைமுறை. ஆனால் அந்த செடியின் விதைகளை வேறொருவருக்கு விற்கவோ, அல்லது நண்பருக்கு இலவசமாக கொடுக்கவோ நமக்கு உரிமை கிடையாது. என்ன இது அபத்தம் என்கிறீர்களா? அதுதான் இன்றைய வர்த்தக காப்புரிமை சட்டங்களின் லட்சணங்கள்.
ஒவ்வொரு முறையும் கட்டாயம் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திற்கு பயன்பாட்டுக்கான கட்டணத்தை கணினி எண்ணிக்கைக்கு ஏற்றவாறு செலுத்தவேண்டும். அப்பொழுதும்கூட அந்த மென்பொருள் நம்முடையதாகாது. பயன்படுத்துவதற்கான கட்டணம் மட்டுமே என்று பதிப்புரிமை சட்டம் சொல்கிறது. பதிப்புரிமைச் சட்டங்களைப் பற்றி மார்க் ட்வைன் இவ்வாறு குறிப்பிடுகிறார். கடவுளால் முடியாதது ஒன்று மட்டுமே; அஃது இந்த உலகத்தில் உள்ள பதிப்புரிமை சட்டங்களில் உள்ள அர்த்தத்தை அறிந்துகொள்வதே. (பதிப்புரிமை சட்டங்கள் யாவும் அனர்த்தமானவை என்பதையே அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.)
இத்தகைய காப்பிரைட் மென்பொருள்களுக்கு மாற்றாக உருவானதுதான் தற்கால காப்பிலெப்ட் (பொதுவுடைமை) மென்பொருள்கள். ஓப்பன் சோர்ஸ் (கட்டற்ற மென்பொருள்) என்ற பொதுவான பெயரிலேயே தற்போது இவை அழைக்கப்படுகின்றன. தொடக்க காலத்தில் அதாவது 1984ல் முதன் முதலாக திறந்த மூல நிரல் (ஜிஎன்யு) திட்டத்தை வெளியிட்டார் ரிச்சர்ட் ஸ்டால்மேன். இவரே இன்றைய ஓப்பன் சோர்ஸ் திட்டத்திற்கு தந்தை என்றும் போற்றப்படுகிறார்.
யுனிக்ஸ் போன்றதொரு இயங்கு தளத்தினை (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) உருவாக்கிட 1984 ம் ஆண்டு துவக்கப்பட்டத் திட்டம் குனுத் திட்டமாகும். இவ்வியங்கு தளம் கட்டற்ற மென்பொருளாகும். இதற்கு குனு அமைப்பென்று பெயர். குனுவின் கரு பூர்த்தியடையாததால் லினக்ஸ் கருவுடன் பயன்படுத்தப் படுகிறது. இன்று பலக் கோடிப் பேர் பயன்படுத்தும் இந்த குனு மற்றும் லினக்ஸின் கூட்டமைப்பிற்கு குனு/ லினக்ஸ் என்று பெயர். (சில நேரங்களில் இக்கூட்டமைப்பு லினக்ஸ் எனத் தவறாக அழைக்கப்படுகின்றது.)
ஓப்பன் சோர்ஸ் (தமிழில் கட்டற்ற மென்பொருள்) என்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாமல் சுதந்திரத்தினை அடிப்படையாகக்கொண்டது. இதனை இலவசமாகக் கருதாமல் சுதந்திரமாக கருத வேண்டும் என்கிறார் முதல் ஓப்பன் சோர்ஸை வெளியிட்ட ரிச்சர்ட் ஸ்டால்மேன்.
இது மென்பொருளை பயன்படுத்தும் ஒருவருக்கு அம்மென்பொருளை இயக்க, படியெடுக்க, விநியோகிக்க, கற்க, மாற்றியமைத்து மேம்படுத்தக் கூடிய உரிமைகளைப் பற்றியது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமாயின் மென்பொருளொன்றைப் பயன்படுத்தும் பயனொருவருக்கு அதன் மீதுள்ள நான்கு வகையான சுதந்திரத்தைப் பற்றியது:
1. எப்பொருட்டும் நிரலினை இயக்கக் கூடிய சுதந்திரம்
2. நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்று தமது தேவைக்கேற்றாற் போல் ஆக்கிக் கொள்ளக் கூடியச் சுதந்திரம். முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
3. பிறரும் பயனுற வேண்டி படியெடுத்து விநியோகிப்பதற்கான சுதந்திரம்.
4. ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்திரம். முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப் பட்டிருத்தல் வேண்டும்.
மைக்ரோசாப்ட், அடோப், ஆப்பிள், மெஸிண்டோஸ் என்று எண்ணற்ற நிறுவனங்களின் வர்த்தக அறைகூவல்களுக்கு மத்தியில் அனைத்து வசதிகளுடன் ஒரு மென்பொருள் எப்படி கிடைக்கும்? அது நமக்கு எளிதானதாக இருக்குமா? இப்படி நமக்கு எழும் பல கேள்விகளுக்கும் ஏன் முடியாது என்று கேட்டு பல்வேறு மென்பொருட்களையும் உருவாக்கி சாதித்துக் கொண்டிருக்கிறது குனு/லினக்ஸ்.
அப்படியானால் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்கள் இலவசமாக கிடைப்பவை என்றோ அல்லது இணை யத்தில் நமக்கு இலவசமாக கிடைக்கும் (ஃபிரிவேர்) எண்ணற்ற மென்பொருள் கள் யாவும் ஓப்பன் சோர்ஸ் என்றோ நினைத்தால் அது தவறு. ஓப்பன் சோர்ஸ் என்பது பயன்படுத்துபவருக்கான சுதந்திரத்தை பற்றியது. அதனாலேயே சுதந்திர மென்பொருள் என்றும் அழைக்கப்படுகிறது.
ஓப்பன் சோர்ஸ் மென்பொருட்கள் அனைத்தும் உலகிற்கும் உலக மக்களுக் கும் பொதுவானவை. தேவைப்படுபவர் கள் இலவசமாகவோ, கட்டண முறையிலோ பெறலாம், உபயோகிக்க லாம் பிறருக்கு விற்பனை செய்யலாம் அல்லது இலவசமாகவும் கொடுக்கலாம். அதில் உங்களது தேவைக்கேற்றவாறு மாற்றங்களும் செய்து கொள்ளலாம். படியெடுக்கலாம். மாற்றியமைத்ததை விற்பனை செய்யலாம் (மூல நிரல்களுடன் கொடுப்பது கட்டாயம்).
இது வியாபாரத்திற்கு உதவாதே என்று நீங்கள் நினைக்கலாம். இது புத்திசாலித்தனத்திற்கும், மென்பொருள் உருவாக்குபவர்களின் திறமைக்குமான விசயம். ஆம், இன்று இணைய உலகின் தகவல் களஞ்சியம் விக்கிபீடியாவும், இணையதளங்களை பார்க்க உதவும் இண்டெர்நெட் பிரௌசரான ஃபயர் பாக்ஸ் -ம் ஓப்பன் சோர்ஸ்-க்கு மிகச்சிறந்த உதாரணங்கள். இவை மட்டுமல்ல விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற்றாக லினக்ஸ், ப்ரீஸ்பையர், எம்எஸ் ஆபிஸ் மென்பொருளுக்கு மாற்றாக ஓப்பன் ஆபிஸ், இணைய தளங்களை பதிவேற்ற இறக்க உதவும் பைல்ஜில்லா, இ-மெயில்களை நிர்வகிக்கும் அவுட்லுக் எக்ஸ்பிரசுக்கு மாற்றாக தண்டர்பேர்டு, வைரஸ்களை நீக்கும் கிளாம்வின், இணையத்தில் கருத்து, கட்டுரை, கவிதை போன்ற நம் சொந்த படைப்புகளை வெளியிட உதவும் வேர்ட்பிரஸ் தளம் என்று இதுபோல இன்னும் இன்னும் பல நூறு மென்பொருட்கள் இலவசமாகவே இணையத்தில் கிடைக்கின்றன. இந்த மென்பொருள்கள் குறித்த தகவல்களைப்பெறுவதற்கு இந்த இணையதளம் உங்களுக்கு உதவும். http://www.fsf.org
Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget