"விலைவாசி ஏறிப்போச்சுல்ல..." - ஏ.ஆர்.ராஜா

கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாரெனின்

கல்வி என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று என அரசு பல்வேறு ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறது. ஆனால் கல்வி இன்று எல்லோருக்கும் எட்டும் தூரத்தில் உள்ளதா என்பது கேள்விக்குறியே. கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. ஒரு காலத்தில் தன்னுடைய மகளோ அல்லது மகனோ தேர்ச்சி பெறவேண்டும் என வேண்டிய பெற்றோர்கள், தற்சமயம் இன்னும் பத்து மதிப்பெண்கள் ஏன் குறைவாகப் பெற்றாய் என பிள்ளைகளை குட்டுகின்ற சபாக்கேடான நிலை உருவாகியுள்ளது.

இத்தகைய குட்டு என்பது அடுத்தமுறை அந்த பத்து மதிப்பெண்களைச் சேர்த்து பெறவேண்டி தருகின்ற உற்சாகக் குட்டு அல்ல. மாறாக பத்து மதிப்பெண் குறைவாக பெற்றதால் பத்தாயிரம் ரூபாய் அதிகமாக கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும் என்கின்ற ஆவேச குட்டு ஆகும்.

இத்தகைய சூழ்நிலையில் எனக்கு அறிமுகமான நண்பர் ஒருவரின் மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக கோவையில் உள்ள ஒரு சில தனியார் கலைக் கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவிற்கு எத்தகைய கல்வி கட்டணங்கள் பெறப்படுகின்றன. இக்கட்டணங்கள் எந்த அளவுகோலில் நிர்ணயிக்கப்படுகின்றன என தெரிந்துகொள்ள ஒர சிறு விசாரிப்பை தொடர்ந்தபோது அவர்கள் கூறிய கட்டணங்களைக் கேட்டு பிரமித்துப்போனேன்.

கோவையின் மையப்பகுதி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் பாடப்பிரிவிற்கு கல்வி கட்டணம் விசாரித்தபோது, கல்லூரியில் சேர்க்கை கட்டணம் 23,050 ரூபாய் முதல் தவணையாகவும், பிறகு ஆறு மாதத்திற்கு ஒருமுறை 8,000 ரூபாய் கல்விக் கட்டணமாக செலுத்தவேண்டும் என்றும் தெரிவித்தனர். அப்பா(டா) சாமி காப்பாத்து!

அடுத்து கோவையில் மிக பிரபலமான மூன்று எழுத்து இனிசியல் கொண்ட கல்லூரி பீளமேடு பகுதியில் அமைந்துள்ளது. இதில் அதே பாடப்பிரிவிற்கு விசாரித்தபோது, ஆண்டுக் கட்டணம் ரூ.21,000. இதில் இரண்டு வகையுண்டாம். ஒன்று மெரிட், மற்றொன்று சுயநிதி. இரண்டுக்கும் ஆண்டுக் கட்டணம் ஒன்று என்றாலும் சுயநிதி பிரிவிற்கு கூடுதலாக சேர்க்கை கட்டணம் செலுத்தவேண்டுமாம்.

சரி, சேர்க்கைக் கட்டணம் எவ்வளவு என விசாரித்ததில் அது ஆண்டுக் கட்டணத்தைவிட சுமார் 10 முதல் 20 மடங்குவரை தகுதிக்கு தகுந்தவாறு இருக்குமாம் (சுமார் 2 லட்சம் முதல் 5 லட்சம்).

எதற்கும் ஒரு நப்பாசை என கூறுவார்களே அதேபோல மெரிட் சீட் எப்படி நிர்ணயிப்பார்கள் என்று கேட்டபோது, மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவனைவிட இரண்டு மூன்று மதிப்பெண் குறைவாக பெற்றவர்கள் மட்டும்தான் இந்த கோட்டாவில் அடங்குவார்களாம். அப்படி யாரும் விண்ணப்பம் அளிக்கவிலை என்றால் மெரிட் சீட்களும் சுயநிதியாய் மாறிவிடுமாம் என்றார் கல்லூரி பிரதிநிதி.

இதற்கடுத்து கோவை பாலக்காடு ரோடு கோவைப்புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விசாரித்தபோது, அவர்கள் கூறிய பதிலைக் கேட்டு நிஜமாகவே பயந்துபோனேன்.

நீங்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் எந்த பாடப்பிரிவு எடுத்து படித்திருந்தாலும் பரவாயில்லை, எங்கள் கல்லூரியில் உள்ள அறிவியல், கணினி, வணிகவியல், கணிதவியல் என நீங்கள கேட்கும் எந்த பாடப்பிரிவும் உடனடியாக கொடுக்கிறோம் என்றனர். எத்தனை சீட்டுகள் ஒரு பாடப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எத்தனை காலியாக உள்ளது என எந்த கணக்கும் கிடையாது. சேருபவர்கள் சேரும்வரை சேர்த்துக்கொண்டே இருப்பார்கள் போலிருக்கிறது.

சரி எங்களுக்கு தேவையான வணிகவியல் பாடப்பிரிவிற்காண கட்டணமாக அவர்கள் சொன்னது, சேர்க்கை கட்டணம் ரூ.23,500. பிறகு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பருவக் கட்டணம் ரூ.10,500ம் கூடுதலாக ரூ.2500. எதற்கு இந்த ரூ.2500 என்று கேட்கிறீர்களா? துடைப்பம் வாங்கவாம். அதாங்க பராமரிப்பு செலவிற்காம்.

அடுத்து இதே பாலக்காடு மெயின் ரோட்டில் உள்ள மற்றொரு கல்லூரியில் விசாரித்தபோது, ஏதோ சந்தைக் கடைக்குள் நுழைந்தது போல இருந்தது அவர்களது அணுகுமுறை. நாங்கள் விரும்பிய வணிகவியல் பாடப்பிரிவை கேட்டதும், "அச்சச்சோ! இப்பத்தான் சார் இந்த குரூப் அட்மிஷன் முடிஞ்சுது. ம்! பரவாயில்ல, உங்களுக்காக ஒரு சீட் கஷ்டப்பட்டு (?!) ஏற்பாடு பண்ணித் தர்றோம்" என்றனர் நம்மிடம் கரிசனமாக. சரி, கட்டணம் எவ்வளவு எனக் கேட்டோம். சேர்க்கை கட்டணம் ரூ.24,500. பிறகு ஆறு மாதத்திற்கு ஒருமுறை பருவக் கட்டணமாக ரூ.11,500 கட்ட வேண்டுமாம். ஆளை விட்டால் போதுமடா கிருஷ்ணா! என வெளியேறினோம்.

காலையிலிருந்து அலைந்த சோர்வில் அப்படியே கோவை விமான நிலையத்திற்கு அருகே காளப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மற்றொரு தனியார் கல்லூரியில் விசாரிக்கச் சென்றோம். அவர்கள் கூறிய கட்டணம் தலையையே சுற்றவைத்துவிட்டது. சேர்க்கை கட்டணம் ரூ.29,000. பிறகு ஆறு மாதத்திற்கொருமுறை ரூ.14,000 பருவக் கட்டணமாம்.

இதற்கே தலையில் கையைவைத்துக் கொண்டிருக்கையில் எங்கள் கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்பும் உண்டு என கூடுதல் தகவல் சொன்னார். சரி, அதற்கு எவ்வளவு கட்டணம் என்று விசாரித்தோம். அவர்கள் கூறிய பதில் எங்களை மேலும் ஆச்சரியப்படவைத்தது. பட்டப்படிப்பிற்கு அவர் கூறிய கட்டணத்தில் 3ல் 1 பங்குதான் கட்டணமாம். ஏன் என்று விசாரித்ததில் இப்போதெல்லாம் முதுநிலைப் படிப்பிற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாம். அதனால்தான் நாங்களும் கட்டணத்தை குறைத்துவிட்டோம் எனக் கூறினார்கள்.

இப்படிக் கொள்ளையடித்தால் யார்தான் சேர்வார்கள் என மனதில் எண்ணியபடியே வெளிவந்தோம். தொடர்ந்து எங்கு செல்லலாம் என்று யோசித்துவிட்டு, அரசு கலைக் கல்லூரியிலும் சென்று விசாரிப்போம் என்று முடிவு செய்து புறப்பட்டோம். அரசு கலை அறிவியல் கல்லூரியில் அதே வணிகவியல் பாடப்பிரிவிற்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை பருவக் கட்டணமாக வெறும் ரூ.325 மட்டும் கட்டினால் போதும் என்றபோது எங்களுக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவே இல்லை. அப்போதுதான் அரசின் கையில் இருக்கும் நிறுவனத்திற்கும், தனியார் வசம் இருக்கும் நிறுவனத்திற்கும் உள்ள வித்தியாசத்தை வேறுபடுத்திப் பார்க்கமுடிந்தது.

மேலே குறிப்பிட்ட தனியார் கல்லூரிகள் அனைத்திற்கும் 80 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றிருந்தால் பெறப்படுகின்ற கட்டணங்கள். மதிப்பெண்கள் குறைய குறைய கட்டணம் கூடிக்கொண்டே செல்லும். இது தவிர மேற்கொண்டு போக்குவரத்து கட்டணம், கல்லூரி நடத்தும் விழாக்களுக்கு நன்கொடைக் கட்டணம் எனச் சேர்ந்து மேலும் ரூ. 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையில் தனியாக பெறப்படும். இத்தனை கட்டணம் வாங்கினாலும் இன்னும் பல கல்லூரிகளுக்கு சுற்றுச்சுவர் கூட கட்டப்படவில்லை. அரசுப் பேருந்து வசதி இல்லாத பாதைகளில் அல்லது பிரதான சாலையிலிருந்து ஒரு சில கிலோ மீட்டர்கள் நடந்து அல்லது தனியாக வாகன வசதி இருந்தால் மட்டுமே செல்லமுடியும் என்கிற நிலையும் உள்ளது. மலையடிவாரங்களில் அமைந்துள்ள சில கல்லூரிகளில் யானைகள் வந்து போகும் பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது.

சரி, அப்படியிருந்தும் ஏன் இவ்வளவு கட்டணம் பெறப்படுகிறது என்று தனியார் கல்லூரி ஊழியர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் ஒன்றுதான் "விலைவாசி ஏறிப்போச்சுல்ல..."

கடந்த சில மாதங்களாக நமது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் இந்தியா வளர்ச்சியடைந்துள்ளது, வளர்ச்சியடைந்துள்ளது என தொடர்ந்து ஒவ்வொரு தொலைக்காட்சியாய் தேடித்தேடி பேட்டி அளித்துக்கொண்டிருப்பது ஞாபகத்திற்கு வந்தது. ஆமாம், இக்கல்லூரிகளில் கட்டணங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்தளவிற்கு வளர்ச்சியடைந்துள்ளது என இப்போதுதான் கண்கூடாகக் காணமுடிகிறது. இந்திய தேசத்தின் கல்விக் கொள்கையை தனியாரிடம் அளித்ததன் மூலம் கல்வி கொள்ளைக்கு வித்திட்டுள்ளது அரசு. கொள்ளை கொள்ளையாய் பணம் பிடுங்கும் தனியார் கல்வி நிறுவனங்களால் காசு இருப்பவனுக்கே கல்வி என்றொரு எழுதப்படாத விதி உருவாகியிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு வரும் காலத்திலாவது இக்கொள்ளையை தடுத்து நிறுத்தும் வகையில் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும்.

மேலும், மத்திய அரசு ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி வரை இலவசக் கல்வி என்பதை உத்திரவாதப்படுத்தவேண்டும். கல்விக்கென மத்திய அரசு நிதியில் 6 விழுக்காடு மாநில அரசு நிதியில் 10 விழுக்காடும் ஒதுக்கி அவற்றை உறுதிப்படுத்தவேண்டியதும் அவசியமாகும்.

"இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் கனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம்பதி னாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல்"
-பாரதியார் Related Posts with Thumbnails

2 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

Unknown said...

migavum unmaiyana karuthukkalai soneergal anal ithil arasukkalluri galai palgalaikalagamaga matruvathai patrium kurippidungal.
migavum nandraga unmaiyai solli irukkirergal.ungalukku enathu manamarntha vazhthukal

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது சின்ன வகுப்பிலிருந்தே ஆரம்பிக்கும் விசயம்.. முதலில் நர்சரிக்கு 10000 கட்டுபவர்கள் இப்படியே தொடர்ந்து கட்டிக்கொண்டிருப்பார்கள்.

வேர்ட் வெரிபிகேஷன் எடுத்துவிடுங்களேன்.

wibiya widget