நீங்களே சரிசெய்யக்கூடிய கணினிப் பிரச்சனைகள்..

கணினியில் திடீரென்று ஏற்படக்கூடிய பிரச்சனைகள் நம்மை திகைப்பில் ஆழ்த்திவிடக் கூடியவை. கடைசியா அணைக்கிற வரைக்கும் நல்லாத்தானே இருந்தது என்று நாம் புலம்புவதுண்டு.
கணினியில் ஏற்படக்கூடிய பொதுவான அடிப்படைப் பிரச்சனைகளுக்காக  கணினிப் பராமரிப்பாளரை அழைக்காமல், ஒரு சில நிமிடங்களில் நாமே சரி செய்ய முடியும். அத்தகைய  சரி செய்யக்கூடிய பிரச்சனைகள் சிலவற்றை பார்ப்போம்.
கணினியை தொடங்கும்போது (Power On) மூன்று பீப் ஒலி (Beep Sound) கேட்டால்:
ரேம் நினைவகம் சரியாக பொருத்தப்படாமல் இருக்கலாம் அல்லது பழுதடைந்திருக்கலாம். எனவே மதர்போர்டில் (Mother Board) மாட்டியுள்ள ரேம் நினைவகத்தை  (RAM Memory) கழற்றி மீண்டும் சரியாக அதன் ஸ்லாட்டில் பொருத்தி கணினியை இயக்கவும். 
கணினியை இயக்கும் போதெல்லாம் கணினிக் கடிகாரத்தில் நேரம் மாறிவிடுகிறதா?
 மதர் போர்டில் உள்ள 3 வோல்ட் மின்சக்தி கொண்ட சீமாஸ் (CMOS) பேட்டரி தீர்ந்து போயிருக்கலாம். புதிய பேட்டரி வாங்கிப் பொருத்திப் பார்க்கவும்.
மூன்று பீப் ஒலிகளில் ஒன்று நீளமாகவும், இரண்டு குறைவாகவும் கேட்டால்:
இத்தகைய ஒலி கேட்டால் கணினியின் டிஸ்பிளே கார்டில் (Display Card) பிரச்சினை என்பதை அறிந்து கொள்ளவும். இந்தக் கார்டை கழற்றி திரும்பப் பொருத்தவும். அப்பொழுதும் பிரச்சினை தொடர்ந்தால் அதனை மாற்ற வேண்டியதிருக்கும்.
இடைவிடாமல் பீப் ஒலி கேட்டால்:
இது விசைப் பலகையில் (கீ போர்ட் - Key Board) பிரச்சினை இருந்தால் தோன்றும் ஒலியாகும். ஏதேனும் ஒரு விசையோ, பல விசைகளோ தூசு படிந்ததன் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களால் மேலே எழாமல் இறுக்கமாக அழுந்தியிருந்தால் இந்த ஒலி தோன்றும். அதனை சரிசெய்தால் ஒலி நின்றுவிடும்.
கணினித் திரை (Monitor) மற்றும் சிபியூவில் ஷாக் அடித்தால்:
நேர், எதிர் மின் இணைப்புகளுடன் எர்த் (Earth) எனப்படும் மூன்றாவது இணைப்பு சரியாக கொடுக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்கவும். நிலத்தில் பதிக்கப்பட்ட சிறு குழாயின் மூலமாக இந்த இணைப்புக் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். அப்படிக் கொடுக்கப்படாமல் தொடர்ந்து ஷாக் அடிக்கும் நிலையிலேயே இருந்தால் கணினி விரைவிலேயே பழுதாகும் நிலை ஏற்படும்.
கணினியை இயக்கியதும் ஹார்ட் டிஸ்க் ஃபெயிலியர் (  HDD Error or Hard Disk Failure) என்பது போன்ற தகவல் திரையில் தோன்றினால்:
சிபியூ(CPU)வில் ஹார்ட்டிஸ்க்கிற்கு மின்சாரம் தரும் இணைப்பு (Power Card), டேட்டா கேபிள் (Data Card) இணைப்பு ஆகியவற்றை கழற்றி சரியாகப் பொருத்தவும். சிபியூவில் தூசிகள் படிந்திருந்தால் அதனை துடைத்துப் பிறகு இயக்கிப் பார்க்கவும். அல்லது சிடி டிரைவில் ஏதேனும் சிடிக்கள் இருந்தாலும் இதுபோன்ற பிரச்சனை எழும். சிடியை எடுத்துவிட்டு இயக்கிப் பார்க்கவும்.
சுவிட்ச் ஆன் செய்ததும் கணினி இயங்கவில்லையென்றால்:
கணினிக்கான மின் இணைப்புகள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். கணினியின்  மின்சார தொடர்பை நிர்வகிக்கும் எஸ்.எம்.பி.எஸ். (SMPS) பகுதி சரியாக வேலை செய்கிறதா என்பதையும், எஸ்.எம்.பி.எஸ்-லிருந்து மதர்போர்டிற்குச் செல்லும் மின் இணைப்பு சரியாக பொருத்தப்
பட்டுள்ளதா என்பதையும் பரிசோதித்துப் பார்க்கவும்.
மேற்கண்ட சோதனைகளைச் செய்யும்போது கண்டிப்பாக கணினிக்கான மின் இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்யவும்.
இவை அல்லாமல் வைரஸ் தாக்குதல், மின்னழுத்தம் ஆகியவற்றாலும் கணினி தாக்கப்படலாம். அவற்றை கணினிப் பராமரிப்பாளரிடம் சொல்லித்தான் சரி செய்யவேண்டும். Related Posts with Thumbnails

1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

middleclassmadhavi said...

பகிர்வுக்கு நன்றி

wibiya widget