இணைய உலகில் உள்ள நிறுவனங்களிடையே கடும் போட்டிகளும், அதனால் தோன்றும் புதிய புதிய வசதிகளும் பெருகிக் கொண்டே போகின்றன.
பத்தாண்டுகளுக்கு முன்பு ஆமை வேகத்தில் இருந்த இணையம் இன்று பல மடங்கு மேம்பட்டிருக்கிறது. இத்தகைய இணைய வேகம் கொடுத்த வசதிகளில் ஒன்று வீடியோக்களை பதிவேற்றும் வசதி.
வீடியோ பதிவுகளை வெளியிட பல இணையதளங்கள் இன்று தோன்றியிருந்தாலும் கூகுள் நிறுவனத்தின் யு ட்யூப் இணையதளம்தான் தற்போது முதலிடத்தில் இருக்கிறது.
அதிகம் பேர் பார்க்கும் இணையதளங்களின் வரிசையில் கூகுள், ஃபேஸ்புக்கிற்கு அடுத்து 3வது இடத்தை யு ட்யூப் தளம் பெற்றுள்ளது.
யு ட்யூப் இணையதளத்தைப் முதலில் உருவாக்கியது பேபால் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான சட் ஹர்லே, ஸ்டீவ் சான் மற்றும் ஜாவத் கரீம் ஆகிய மூவர்தான். 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று யுட்யூப் டாட் காம் என்ற பெயரில் இணையதளத்தை தொடங்கினர்.
இத்தளத்தை 2006 அக்டோபரில் 165 கோடிக்கு கூகுள் நிறுவனம் கையகப்படுத்தியது. அதன் பிறகு பல புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. இன்று வரை அதன் மேம்படுத்தும் பணி நிற்கவில்லை.
ஆரம்பத்தில் அடோப் ஃபிளாஸ் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்தளம் இன்று விண்டோஸ், ஆப்பிள், லினக்ஸ் வகைக் கணினிகளுக்கு ஏற்ற வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு தரப்படுத்தப்பட்டுள்ளது. மேம்பட்ட வீடியோ தரமான ஹெச்டி (HD) வடிவத்திலும், 3டி (3D) மற்றும் ஹெச்டிஎம்எல்5 (HTML 5) தொழில் நுட்பங்களும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
செல்பேசிகளில் பார்ப்பதற்கு வசதியாக 3ஜிபி (3gb) என்ற வீடியோ தரத்தைப் பின்பற்றுகிறது. இது இணைய வசதியுள்ள பெரும்பாலான செல்பேசிகளில் வீடியோக்களை காண உதவும் வசதியாகும்.
செல்பேசி வழியாக பயன்படுத்த விரும்புவோர் www.m.youtube.com என்று இணைய முகவரியைப் பயன்படுத்தவேண்டும்.
ஒவ்வொரு நொடியும் 1 மணி நேரத்திற்கு ஓடக் கூடிய வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.ஒரு நாளில் சுமார் 4 பில்லியன் வீடியோக்கள் யுட்யூப் இணையதளம் வழியாக பார்க்கப்படுகிறது.
இன்று முக்கிய நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகின்றன. வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்கள் தொடங்கி கல்வி கற்றுத்தர, குறும்படங்களைப் பகிர்ந்து கொள்ள, நம் இல்லங்களில் நடைபெறும் விழாக்களை வீடியோ பதிவாக்கி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள என்று பல வழிகளிலும் பயனுள்ளதாக யு ட்யூப் தளம் இருக்கிறது.
சமீபத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி சார்ந்த புதிய பகுதி ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு அறிவியல், கணிதம் என்று கற்பதற்கு கடினமான பாடங்கள் கூட எளிதாக கற்க வீடியோக்களாக்கி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தளத்தை www.youtube.com/education,
www.youtube.com/schools என்ற முகவரியில் சென்று பார்க்கலாம்.





0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment