ஹேக்கர்களிடமிருந்து உங்கள் தகவல்களைப் பாதுகாக்க..

இணையம் சார்ந்த பயன்பாட்டில் உள்ளவர்களுக்கு எப்போதும் ஒரு பயம் இருக்கும். அது நம்முடைய தகவல்களை எவரேனும் திருடிவிட்டால் (hacking) என்ன செய்வது என்பதுதான்.

நான் என்ன அவ்வளவு முக்கியமானவனா? என் தகவல்களை வைத்து என்ன செய்து விடமுடியும்? என்று சிலர் கேட்கலாம். தகவல் திருடர்களுக்கு (ஹேக்கர்) நீங்கள் யார் என்பதைவிட உங்களிடமுள்ள தகவலே முக்கியம். அவர்கள் தேடும் தகவல் உங்களிடம் உள்ளதா என்பதுதான் முதலில்.
அவர்களுக்குத் தேவையானது இல்லையென்றால் அவர்கள் உங்களிடமிருந்து விலகி விடுவார்கள். ஆனால், உங்களிடமிருந்து திருடப்பட்ட கடவுச் சொல், வங்கிக் கணக்கு ஆகிய விபரங்களை மாற்றிவிடவோ அல்லது உபயோகிக்க இயலாத வகையிலோ செய்து விடவோ கூடும். இங்குதான் உங்களுக்குப் பிரச்சனை தொடங்குகிறது.

தகவல் திருட்டைத் தடுக்க சில அடிப்படையான வேலைகளை உங்கள் கணினியில் செய்யவேண்டும்.

ஆண்டிவைரஸ் மற்றும் ஃபயர்வால் (Antivirus & Firewall)
கணினியில் நல்ல நிலையில் இயங்கக் கூடிய ஆண்டிவைரஸ் மென்பொருளைப் பயன்படுத்தவும். தினமும் அப்டேட் செய்வது அவசியம். அதே போல ஃபயர்வால் தொகுப்பும் சிறப்பாக இயங்கும் வண்ணம் இருக்கவேண்டும். விண்டோஸ் ஃபயர்வால் இருந்தாலும், அதைவிட சிறந்த வேறு பல உள்ளன. அவற்றைப் பயன்படுத்துவது நன்மை தரும்.

பதிவிறக்கம் மற்றும் இணைப்புகள் (Download & Attachments)
மின்னஞ்சல் விளம்பர இணைப்புகள், இலவச மென்பொருள்கள் மற்றும் பதிவிறக்க இணைப்புகளைக் கிளிக் செய்யும் முன் கவனமாக இருக்கவும். பதிவிறக்கினால் முழுமையான வைரஸ் சோதனைக்கு உட்படுத்தவும். அடுத்தது போலி மின்னஞ்சல்கள் உதாரணமாக கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து கணக்கு விபரங்களைக் கேட்டு வரும்  மின்னஞ்சல்
களைக் குறிப்பிடலாம். இவற்றில் வரும் இணைப்புகளைக் கிளிக் செய்தால் போலியான தளத்திற்கோ, கணினிக்கு தீங்கிழைக்கும் கோப்புகளோ பதிவிறக்கமாகக் கூடும். எனவே கவனம் தேவை.

கடவுச் சொல் (Password)
ஏற்கனவே நாம் குறிப்பிட்டு வருவதுதான். உங்கள் மின்னஞ்சல், சமூக வலைத்தளக் கணக்குகளில் உள்ள உங்கள் கடவுச்சொல்லை எளிதாக கண்டுபிடிக்கும்படியாக இல்லாமல் மூன்றடுக்குப் பாதுகாப்பாக உருவாக்கவேண்டும். அதாவது எண், எழுத்து மற்றும் புள்ளி, கோடு உள்ளிட்ட சிறப்புக் குறியீடுகள் கொண்டதாக உருவாக்க வேண்டும்.
விளக்கமாக அறிய  10 நிமிடம் போதும் உங்கள் பாஸ்வேர்டைத் திருட..  என்ற எனது முந்தைய பதிவைப் படிக்கவும்.

இணையக் கணக்கிலிருந்து பாதுகாப்பாக வெளியேறுதல் 
வங்கிக் கணக்கு, மின்னஞ்சல் கணக்கு, சமூக வலைத்தளக் கணக்கிலிருந்து வெளியேறும்போது அதற்கான கட்டளைகளைக் (Sign Out or Log Out) கொடுத்து வெளியேறவும். அதேபோல வெளியிடங்களில் பயன்படுத்தும் கணினிகளில் குக்கீகள், தற்காலிக இணையக் கோப்புகள் ஆகியவற்றை முழுமையாக நீக்கவும். இதற்கு இணைய உலாவி (பிரௌசர்) திறந்திருக்கும் நிலையில் Ctrl+Shift+Del கீகளை ஒரே நேரத்தில் அழுத்தவும்.  வரும் கிளியர் ஆல் ஹிஸ்டரி விண்டோ (Clear all history) வில் எவ்ரிதிங் (Everything) என்பதற்குக் கீழே உள்ள அனைத்தையும் டிக் செய்து கிளியர் நவ் (Clear Now) என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.

தகவல்களைப் பாதுகாத்தல் (Data Backup)
இவை எல்லாவற்றையும் விட உங்கள் தகவல்களை முறைப்படி எப்போதும் வேறு ஒரு இடத்தில் அதாவது சிடி, ஹார்ட்டிஸ்க் அல்லது வேறொரு கணினியில் பேக்கப் செய்து வைத்துக் கொள்ளவும். இச்செயலை முறைப்படி செய்யக் கூட நல்ல மென்பொருள்கள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றையும் பயன்படுத்தலாம்.
, Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget