தொழில்நுட்ப உலகில் நாம் அறிந்ததும் அறியாததும் - 2

டிஜிட்டல் சாதனங்களின் தயாரிப்பிலும் பயன்பாட்டிலும் பின்னணியில் உள்ள சுவாரசியமான காரணங்களைப் பற்றி விளக்கியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் இணைய உலகிலும், மென்பொருள் துறையிலும் புகழ்பெற்ற முன்னணி நிறுவனங்களின் பெயர்கள் உருவான காரணங்களைப் பற்றிப் பார்ப்போம்.

கூகுள்
1998ல் கூகுளின் முதல் இணையதள வடிவமைப்பு

1996ம் வருடம் ஸ்டார்ன்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களான லாரி பேஜ், செர்ஜி பிரின் இருவரும் இணைந்து இணையத் தேடலில் கணிதத்தைப் பயன்படுத்துவது குறித்த ஆய்வை மேற்கொண்டனர். தங்களுடைய ஆய்வை 1998ல் இணையதளமாக பதிவு செய்ய எண்ணி பொருத்தமான பெயரைத் தேடினர். கூகோல் (Googol) என்ற பெயரைத் தேர்வு செய்தனர். கூகோல் என்பது ஒன்று என்ற எண்ணுக்கு பிறகு 100 பூஜியங்களைக் கொண்ட மிகப்பெரிய எண்ணைக் குறிப்பதாகும்.
(1 Googol =1.0 × 10100).
 கோடிக்கணக்கான இணையதளங்களிலிருந்து தகவல்களைத் தேடித்தருவது என்ற பொருளில் இந்தப் பெயரை அவர்கள் தேர்வு செய்தனர். ஆனால், அந்தப் பெயர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்ததால், அந்த வார்த்தையில் சிறு மாற்றம் செய்து கூகுள் (Google) உருவானது.

கூகுள் என்று பெயர் மாறியதற்கு இரண்டு சுவாரசியமான காரணங்கள் கூறப்படுகின்றன. கூகோல் என்று தட்டச்சு செய்யும்போது தவறுதலாக கூகுள் என்று தட்டச்சு செய்து பதிவு செய்துவிட்டனர் என்றும், ஆரம்ப காலத்தில் இணையதளம் தொடங்க போதிய பணம் இல்லாததால் நிதியாளர் ஒருவரிடமிருந்து பணம் பெற முயற்சித்தபோது அவர் அளித்த காசோலையில் கூகோல் என்பதற்கு பதிலாக கூகுள் என்று எழுதிக் கொடுத்துவிட்டார் என்றும் கூறப்படுகின்றன.

ஆனால், பொதுவாக வணிகப் பெயர்களை பதிவு செய்யும்போது பொதுப்பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் ஆங்கில சொற்கள் பதிவு செய்ய ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அதன் காரணமாக நிறுவனங்கள் சிறு அளவில் எழுத்து மாற்றங்களை செய்து புதிய வார்த்தையாக பெயர்களை உருவாக்குகிறார்கள். அதன் காரணமாகக் கூட கூகோல் என்பதற்குப் பதிலாக கூகுள் என்ற பெயர் உருவாகியிருக்கலாம். இருப்பினும் அவர்கள் தெரிந்து செய்தார்களா, தெரியாமல் நடந்ததா என்பதை லாரிபேஜ், செர்ரிபிரின் ஆகியோரின் முடிவுக்கே விட்டுவிடுவோம்.

யாகூ 
 
கூகுள் நிறுவனர்களைப் போலவே யாகூ நிறுவனர்களான ஜெர்ரி யங் மற்றும் டேவிட் ஃபிலோ இருவரும் ஸ்டார்ன்போர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்தான். 1994ல் “Jerry and David’s guide to the World Wide Web” என்ற பெயரில் இணையதளம் தொடங்கினர். ஓராண்டுக்குப் பிறகு 1995ல் அதற்கு யாகூ என்ற புதிய பெயர் சூட்டினர்.ஜொனதன் ஸ்விப்ட் (Jonathan Swift) என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள்(Gulliver’s Travels) என்ற நூலில் “Yet Another Hierarchical Officious Oracle” என்ற சொற்றொடரின் முதல் எழுத்துக்களை இணைத்து சுருக்கமாக YAHOO என்று உருவாக்கினர்.

இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிப்பதாகும். யாகூ நிறுவனர்களான ஜெர்ரியங் மற்றும் டேவிட் ஃபிலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்பதை வேடிக்கையாகக் குறிப்பிடும் வகையில் இந்தப் பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்வு செய்தனர்.

அடோப் சிஸ்டம்ஸ்
 
புகழ்பெற்ற போட்டோஷாப், அடோப் பிடிஎப் ரீடர் மற்றும் வரை கலை மென்பொருள்களை உருவாக்கிய நிறுவனம்தான் அடோப் சிஸ்டம்ஸ்(Adobe Systems inc.).

இந்நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவர் ஜான் வார்நாக். இவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரது வீட்டிற்குப் பின்புறம் ஓடும் நதியின் பெயர் அடோப் கிரிக்(Adobe Creek).. அந்தப் பெயரின் முதற் பகுதியையே தன் நிறுவனத்திற்கும் பெயராக தேர்வு செய்தார்.

பிளாக்பெர்ரி
 
கனடாவைச் சேர்ந்த ரிசர்ச் இன் மொபைல் (Research in Mobile) நிறுவனம் 2001ஆம் ஆண்டு தன் புதிய மின்னஞ்சல் பயன்பாட்டு சாதனத்திற்குப் பெயர் வைக்க லெக்ஸிகன் பிராண்டிங் என்ற நிறுவனத்தைக் கேட்டுக் கொண்டது.

பெயரில் இமெயில் என்ற வார்த்தை இடம் பெறக்கூடாது என்று விருப்பம் தெரிவித்தது. காரணம், இமெயில் என்பது ரத்த அழுத்தத்தைப் பாதிக்கும் சொல்லாக அந்நிறுவனம் கருதியதுதான். ஆகவே, சந்தோஷத்தையும் அமைதியையும் தரக் கூடிய சொல்லாக அச்சாதனத்தின் பெயர் இருக்க வேண்டும் என விரும்பியது.

அந்நிறுவனம் தயாரித்த சாதனத்தின் பொத்தான்கள் (Key Pad) ஒரு பழத்தின் விதைகள் போல இருப்பதாக ஒருவர் குறிப்பிட்டார். அதன் அடிப்படையில் பல்வேறு பழங்களின் பெயர்களை அந்நிறுவனம் ஆய்வு செய்தது.இறுதியில் பிளாக்பெர்ரி என்ற பழத்தின் பெயர் தேர்வு செய்யப்பட்டது. காரணம் சாதனம் கறுப்பு நிறத்தில் இருந்ததுதான்.
Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget