சதீஷ்தவானிலிருந்து சந்திரனுக்கு...

1963 ம் வருடம் உலக அளவில் அந்நாளைய சோவியத் யூனியனும், அமெரிக்காவும் மட்டுமே விண்வெளியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியிருந்தன. சீனா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எனப் பலவும் விண்வெளி ஆராய்ச்சியில் தங்களையும் இணைத்துக்கொள்ளத் துவங்கிய அதே நேரத்தில் இந்தியாவும் மற்ற நாடுகளைப்போல தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. இந்தியாவிற்கான ஏவூர்திகளை வடிவமைத்து தயாரிக்க வேண்டி அணுசக்தி துறையின் கீழ் புதிய ஆராய்ச்சி நிலையம் ஒன்றை 1963-ல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு அருகில் தும்பாவில் இந்தியா அமைத்தது. இங்கிருந்துதான் இந்தியாவின் விண்வெளிக் கனவுகள் சிறகடிக்கத் துவங்கின. விண்வெளி ஆய்வுப்பணிகளுக்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 1969ல் துவக்கப்பட்டது. இஸ்ரோவால் 1975ல் முதல் இந்திய செயற்கைகோள் ஆர்யபட்டா செலுத்தப்பட்டது. அதன்பிறகு பாஸ்கரா, ரோகிணி போன்ற செயற்கைகோள்களும் ஏவப்பட்டன, அதே நேரத்தில் செயற்கைகோள் ஏவுகலன்களை வடிவமைத்து தயாரிக்கும் ஆய்விலும் முன்னேற்றம் கண்டது. எஸ்எல்வி என்ற குறைந்த திறன் ராக்கெட்டுகளை உள்நாட்டிலேயே உருவாக்கி சோதனைகளை நடத்தத் துவங்கியது. சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநில கடலோரப்பகுதியில் உள்ள ஸ்ரீஹரிக்கோட்டா தீவில் இந்திய ராக்கெட்டுகளை சோதனை செய்வதற்கும், செயற்கைகோள்களை ஏவுதல் போன்றவற்றிற்காக சதீஷ்தவான் விண்வெளி ஆய்வுமையம் அமைக்கப்பட்டது. செயற்கைகோள்களை வடிவமைப்பதில் சிறப்பான வெற்றியையும் அதே தருணத்தில் இந்தியா அடைந்தது. தொலையுணர்வு செயற்கைகோள் ஐஆர்எஸ் மற்றும் தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கான இன்சாட் ரக செயற்கைகோள்களை வடிவமைப்பதில் உலக அளவில் சிறப்பான இடத்தை தற்போது இந்தியா பிடித்திருக்கிறது. இன்றுவரை 50க்கும் மேலான செயற்கைகோள்களை இந்தியா சொந்தமாக உள்நாட்டிலேயே தயாரித்திருக்கிறது. இதில் 10க்கும் மேற்பட்ட செயற்கைகோள்கள் இன்றும் பயன்பாட்டில் உள்ளன (தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் பல்வேறு இந்திய மற்றும் அயல்நாட்டு முன்னணி தொலைக்காட்சி நிறுவன சேனல்கள் அனைத்துமே இன்சாட் 2சி, 3ஏ, 4ஏ ரக செயற்கைகோள்களின் சி பேண்ட் மற்றும் கேயு பேண்ட் டிரான்ஸ்பேண்டர்களைப் பயன்படுத்தித்தான் அனலாக், டிஜிட்டல் மற்றும் டீடிஎச் போன்ற பல்வேறு முறைகளில் ஒளிபரப்பை செய்துகொண்டிருக்கின்றன. இதில் இன்சாட் 3ஏ டிரான்ஸ்பேண்டர் குத்தகை மூலமாக இஸ்ரோவிற்கு கிடைத்த வருமானம் 5 ஆண்டுகளுக்கு சுமார் 400 கோடி ). எஸ்எல்வி ராக்கெட்டுகள் தயாரிப்பு வெற்றி பெற்றவுடன் ஏஎஸ்எல்வி ராக்கெட்டும், துருவப்பாதை செயற்கைகோள் ஏவுர்தியான பிஎஸ்எல்வியும் அடுத்தடுத்து சோதனை செய்யப்பட்டன. இன்று பிஎஸ்எல்வி வகையில் இந்தியா 12 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அந்த நம்பிக்கையோடுதான் இதே வகை ராக்கெட்டைப் பயன்படுத்தித்தான் சந்திரயான்-1ம் ஏவப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நம்மிடம் பிஎஸ்எல்வியை விட மேம்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டும் உள்ளது. இதற்கான கிரையோஜெனிக் என்ஜின்களை இந்தியாவே வடிவமைத்துள்ளது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டிற்கான கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பு தொழில்நுட்பம் முன்பே எளிதாக சோவியத் ரஷ்யாவிடமிருந்து கிடைக்கவேண்டியது. அமெரிக்கத் தலையீட்டால் நமக்கு கிடைக்காமல் போனது. தற்போதைய ஜிஎஸ்எல்வி தொழில்நுட்பம் முழுக்க இந்தியாவினுடைய சாதனை. இதனை வடிவமைக்க நமக்கு 10 ஆண்டுகாலமானது. அதிக திறன் பெற்ற இன்சாட் மற்றும் கல்விக்கான எஜுசேட் செயற்கைகோளையும் ஜிஎஸ்எல்வி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது.
சந்திரன் ஆய்வுப்பணிக்கு அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா அனுப்பிய ராக்கெட்டுகளைவிட அளவில் சிறியது பிஎஸ்எல்வி. அதேபோல அதன் செயற்கைகோள் எடை தாங்கும் திறனும் குறைவாகும். ஆனால் நமக்கு எடையோ அளவோ பெரிய அளவில் தடையில்லை. காரணம் சந்திரயான்-1ன் எடை சுமார் 523 கிலோ கிராம். இதனை பூமிக்கு வெளியே தள்ளும் வேலையை மட்டுமே (புவி ஈர்ப்பு விசையிலிருந்து வெளியேறுவது) பிஎஸ்எல்வி ராக்கெட் செய்யப்போகிறது. பிறகு சந்திரயான்-1ல் பொருத்தப்பட்டிருக்கும் பூஸ்டர் ராக்கெட்டுகள் எரியூட்டப்பட்டு சந்திரனை நோக்கிய பயணத்தை விஞ்ஞானிகள் கட்டுப்படுத்தி வழி நடத்துவர். சந்திரயான் திட்டத்திற்கென்றே புதிதாக பெங்களூருக்கு 44 கி.மீட்டர் அருகில் அமைந்துள்ள பெய்லூலு என்ற இடத்தில் கட்டுப்பாட்டு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சந்திரயான்-1 (Chandrayaan-1)என்ன செய்யும்?
1967 முதல் ரஷ்யாவும், அமெரிக்காவும் பல்வேறு ஆய்வுகளை சந்திரனில் நடத்தியிருந்தாலும் இதுவரை சந்திரனின் முழு வடிவத்திற்கான வரைபடம் உருவாக்கப்படவில்லை. ஆய்வு செய்தவர்கள் சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே பயன்படுத்திக்கொண்டுள்ளனர். அதே போல் சந்திரனின் துருவப்பகுதிகளைப் பற்றி இதுவரை எவ்வித ஆய்வும் நடத்தப்படவில்லை. தற்போது அனுப்பப்படும் சந்திரயான் கலம்தான் துருவப்பகுதியை சுற்றிவந்து ஆய்வு செய்யவிருக்கும் முதல் கலம் என்பதும், சந்திரனுடைய முப்பரிமான தோற்றத்தை வரைவதற்கான முயற்சியை மேற்கொள்ளவிருக்கும் முதல் கலம் என்பதும் பெருமைக்குரிய விஷயமாகும். மேலும் சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா என்று ஆய்வதற்கென 4 கருவிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சந்திராயன் செயற்கைகோளிலிருந்து சந்திரனின் நிலப்பரப்பை தாக்கும் விண்கலத்தின் எடை சுமார் 7 கிலோவாகும். இந்த மோதல் மூலம் சந்திரனின் மண் தன்மை, மேடு, பள்ளம், நீர் ஆதாரங்கள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆய்விற்காக மோதும் கலத்தில் நான்கு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அதுமட்டுமல்லாது சந்திரனை ஆராய்வதன் மூலம் சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்த மேலும் பல தகவல்கள் கிடைக்கும என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரனில் உள்ள யுரேனியம், ஹீலியம்-3 போன்ற பல்வேறு கனிம வளங்களைப் பற்றிய ஆய்வையும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சந்திரயான் விண்கலம் 2 ஆண்டுகள் வரை சந்திரனை சுற்றி இத்தகைய பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ளவிருக்கிறது. இத்தகைய ஆய்வுகளுக்கென்று இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5 கருவிகளும், ஐரோப்யிய விண்வெளி கழகத்திடமிருந்து 3 கருவிகளும், நாசாவிடமிருந்து 2 கருவிகளும், பல்கேரியாவிடமிருந்து ஒன்று என மொத்தம் 11 கருவிகள் இடம் பெற்றுள்ளன.
2011-ல் சந்திரயான் -2 விண்கலத்தையும் அத்துடன் சேர்த்து ரோவர் என்ற ரோபோ வாகனத்தையும் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாகவும், சந்திரயான் திட்டத்தில் இந்தியா பெற்ற வெற்றி மிகப்பெரிய வரலாற்று முத்திரை என்றும் இதற்கு அடுத்து 2015-ல் சந்திரயான் -3 என்ற விண்கலத்தை அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், அதில் மனிதர்கள் பயணிப்பதற்கான வாய்ப்பும் உள்ளதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் வர்த்தக ரீதியான செயற்கைகோள்களை ஏவுவதில் 1999 முதல் இந்தியாவும் தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக சந்திரயான் பயணமும் நமக்கு எதிர்காலத்தில் விண்வெளி மூலமாக கிடைக்கவிருக்கும் வளங்களை பெற்றுத்தருவதற்கு உதவும் என்பதையும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். இத்திட்டத்தில் தொய்வோ தோல்வியோ நிகழுமானாலும் அது நம்மை மேம்படுத்திக்கொள்வதற்கானதாகவே இருக்கும். இதற்கு முந்தைய நம்முடைய தோல்விகளிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களே இதற்கு சாட்சிகள். சந்திரயானும் நமக்கு அப்படிப்பட்ட ஒரு சோதனைக்கட்ட முயற்சிதான். விண்வெளித் துறையில் நம்முடைய இடம் எது என்பதை அறிவதற்கானதாகவும், புதிய தலைமுறை இந்திய விஞ்ஞானிகளுக்கு புத்தாக்கத்தையும், நம்பிக்கையையும் உருவாக்குவதாகவும் அமையும் என்றே இஸ்ரோவும் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறது.

புள்ளி விவரம்...
  • பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரம் அதிக பட்சம் 3,84,000 கி.மீ
  • சந்திராயன் திட்டத்தின் இயக்குநராக மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திட்டத்திற்கான செலவு 380 கோடி
  • பிஎஸ்எல்வி - சி11 ன் உயரம் 44.4 மீட்டர்
  • சந்திராயன் விண்கலத்தின் மொத்த எடை 523 கிலோ
  • இதில் 11 ஆய்வுக் கருவிகளின் எடை மட்டும் 55 கிலோ
  • சந்திரனில் மோதும் கலத்தின் எடை 7 கிலோ.
  • சந்திரனில் மோதும் கலம் இந்திய தேசிய கொடியையும் சந்திரனில் பதிக்கும். அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பானுக்கு அடுத்து 4வதாக இந்தியக் கொடி சந்திரனில் காட்சியளிக்கப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • ராக்கெட் செலுத்தப்படுவதற்கு முந்தைய 49 மணி நேர கவுண்ட் டவுன் 20.10.2008 திங்கள் கிழமை அதிகாலை 5.20 மணிக்கு துவங்கியது. 22.10.2008 புதன் கிழமை காலை 6.20 மணிக்கு சந்திராயன் - 1 விண்கலத்துடன் பிஎஸ்எல்வி-சி11 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப்பாய்ந்தது.
  • தற்போது சந்திரயான் - 1 புவிவட்டப்பாதையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டுள்ளது.
Related Posts with Thumbnails

1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

நா. கணேசன் said...

இந்திய விண்கலனின் பெயர்
சந்த்ரயான் என்பதாகும்.
அதன் பொருளை விளக்கம்,
http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html

நன்றி,
நா. கணேசன்

wibiya widget