சமூக வலைத்தளங்கள் பொழுது போக்கிற்கானது என்பதையும் தாண்டி இன்று கருத்துப் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம், தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, சமூகப் பணிகளுக்கு என்று பல பரிமாணங்களுடன் மாறியிருக்கிறது.
தொடக்கத்தில் மின்னஞ்சல் கணக்கு வைத்திருப்பது கௌரவமாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று அந்நிலை மாறி சமூகவலைத்தளக் கணக்கு வைத்திருப்பதே ஒரு கௌரவமாக பார்க்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் மின்னஞ்சல் முகவரியை கேட்கும் இளைகஞர்களைவிட ஃபேஸ்புக், டிவிட்டர், ஜிபிளஸ், ஆர்குட், யுடியூப் கணக்கு குறித்த பேச்சே அதிகமாக இருக்கிறது.
வருங்காலத்தில் மின்னஞ்சல்களே இல்லாமல் போகும் சூழல்கூட ஏற்படலாம் என்று தொழில்நுட்பத் துறையினர் கூறும் அளவிற்கு சமூக வலைத்தளங்கள் வளர்ந்துள்ளன. இதற்குக் காரணம் மின்னஞ்சலை விட வேகமான செய்திப் பரிமாற்றம் சமூக வலைத்தளங்களில் நடைபெறுவது
தான். தற்போது கையடக்க கணினியாக வலம் வரும் ஸ்மார்ட் போன், டேப்ளட் பிசி ஆகியவற்றின் மூலமாகப் பெருமளவு சமூக வலைத்தள உறுப்பினர்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது அதிகரித்துள்ளது.
இன்று சுமார் 314 கோடி மின்னஞ்சல் கணக்குகள் உள்ளன. இதில் ஒரு நபரே நான்கு, ஐந்து மெயில் ஐடிகள் வைத்திருப்பதும் உள்ளடங்கும். சமூக வலைத்
தளங்களில் உறுப்பினராக உள்ளவர்களின் எண்ணிக்கை ஃபேஸ்புக்கில் 80 கோடியும், டிவிட்டரில் 20 கோடியும், லிங்க்டு இன் தளத்தில் 13.5 கோடிப் பேரும், குரூப்ஆன் தளத்தில் 11.5 கோடிப் பேரும், கூகுள் பிளஸ்ஸில் 9 கோடிப் பேரும், சீனாவைச் சேர்ந்த சமூக வலைத் தளங்களான ரென்ரென் 17 கோடிப் பேரையும், கியூ ஜோன் 50 கோடிப் பேரையும், சினா வைபோ 25 கோடிப் பேரையும், மற்றுமுள்ள பிற சமூக வலைத்தளங்களில் சுமார் 50 கோடிக்கும் அதிகமானோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
இதன் மூலமாக சமூக வலைத்தள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 276 கோடிக்கும் அதிகம் என்று தி ரியல் டைம் ரிப்போர்ட் டாட் காம் இணையதளம் மதிப்பிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் சுமார் 45 கோடிப் பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்கண்ட கணக்கீடு மின்னஞ்சல் பயனர் எண்ணிக்கைக்கு இணையானதாகும். வரும் நாட்களில் இது மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளே உள்ளது.
அதேபோல ஒரு நாளுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை சுமார் 24700 கோடி என்றும், சமூக வலைத்தளங்களில் அதே ஒரு நாளில் சுமார் 42 கோடி புதிய பதிவுகளும், 19 கோடி புகைப்படப் பதிவேற்றங்களும், 73 கோடி கருத்துக்களும் பரிமாறிக் கொள்ளப்படுவதாக உலக அளவிலான சமூக வலைத்தளக் கணக்கெடுப்பு டிசம்பர் 2011 குறிப்பிடுகிறது.
இன்று சமூக வலைத்தளங்களில் தனி நபர்கள் மட்டுமல்லாமல் நிறுவனங்களும் உறுப்பினர்களாக மாறியுள்ளனர். இதன் மூலம் பொருட்களை விளம்பரம் செய்யவும், வாடிக்கையாளர்களின் கருத்துக்களை நேரடியாக அறிந்து கொள்ளவும் முடிகிறது.வர்த்தகம் சார்ந்து இல்லாமல் இரத்த தானம், எய்ட்ஸ் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் எனப் பல உதவிகரமான சேவைகளுக்கும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
எகிப்து புரட்சி, வால்ஸ்ட்ரீட் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களுக்கும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களே தகவல் தொடர்பு காரணிகளாக செயல்பட்டன.இதன் எதிரொலியாக பல்வேறு நாடுகளும் இத்தளங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அமெரிக்காவும் அத்தகையதொரு சட்டத்தை இயற்றும் முயற்சியாக சோபா (SOPA ACT) சட்டத்தைக் கொண்டு வர முனைந்தது. ஆனால், கடும் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக இது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Sources:
http://www.slideshare.net/stevenvanbelleghem/social-media-around-the-world-2011
http://therealtimereport.com/2012/01/20/social-networking-stats-google-hits-90-million-users-rltm-scoreboard/
.
.

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment