2012ல் வரவிருக்கும் கணினி மாற்றங்கள்

ந்த ஆண்டில் கணினித் தொழில்நுட்பம் சென்ற ஆண்டு இருந்ததைவிட மேலும் பல கூடுதல் வசதிகளை மக்களுக்குப் பெற்றுத்தரும் என்றே சொல்லலாம்.

டேப்ளட் பிசி:
2012 டேப்ளட் பிசிக்களுக்கான ஆண்டு என்று குறிப்பிடும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரிக்கும் என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். அலைபேசி வழியாக இணையத்தைப் பயன்படுத்தும் பலரும் இனி டேப்ளட் பிசி எனப்படும் பலகைக் கணினிக்கு மாறும் வாய்ப்பு அதிகமுள்ளது.
டேப்ளட் பிசி தற்போது சந்தையில் 7000 ரூபாய் விலையில் தொடங்குகிறது. இந்தியாவில் இதற்கான சந்தையை ஆகாஷ் டேப்ளட்டின் வரவே தீர்மானிக்கும் என்பதாகக் கூறப்படுகிறது. உலகின் விலை குறைந்த டேப்ளட்டான இது மாணவர்களுக்கு ரூ.1500 விலையிலும், பிறருக்கு ரூ.3000 என்ற விலையையும் நிர்ணயித்துள்ளது. இதன் விற்பனை தொடங்கிய பிறகே மற்ற நிறுவன டேப்ளட்களின் விலையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூகுள்:
இணையத்தில் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் கூகுள், சென்ற ஆண்டில் கூகுள் பிளஸ் சமூக வலைத்தள சேவையை அறிமுகம் செய்தது. இது தொடங்கப்பட்ட ஜூலை மாதத்தில்  ஒரு கோடிப் பேர் உறுப்பினராக சேர்ந்தனர். டிசம்பர் 27 வரையிலான கணக்கின்படி சுமார் 6.2 கோடிப் பேர் உறுப்
பினர்களாக இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை 2012இன் இறுதிக்குள் 40 கோடியாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கை முன்னணி வலைத்தளமான ஃபேஸ்புக்கிற்கு கடும் சவாலை உருவாக்கும். அதன் காரணமாக மேலும் பல வசதிகளை ஃபேஸ்புக்கும், கூகுளும் பயனருக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வருகைக்குப் பின் கூகுளின் பிற சேவைகளான ஜிமெயில், பிளாக்கர், யுடியூப் உள்ளிட்டவற்றில் பல மேம்படுத்தல்கள் செய்யப்பட்டன. அதிகம் பயனரைப் பெறாத கூகுள் பஸ் மற்றும் கூகுள் ஹெல்த் உள்ளிட்ட சேவைகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.
இந்த ஆண்டில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட கூகுள் மியூசிக் சேவை மேலும் பல நாடுகளுக்கு விரிவாக்கப்படும் என்று தெரிகிறது.
ஹெச்டிஎம்எல் 5:
புதிய இணையத் தொழில் நுட்பமான ஹெச்டிஎம்எல் 5 தொழில்நுட்பத்தில் பல சேவைகளும் மென்பொருள்களும் உருவாக்கப்படும் என்று தெரிகிறது.
மொபைல்களுக்கான அடோப் ஃபிளாஷ் பிளேயரை மேம்படுத்துவதை குறைத்து இனி ஹெச்டிஎம்எல் 5 தொழில்நுட்பத்தைப்  பின்பற்றப் போவதாக அடோப் நிறுவனம் கூறியுள்ளது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மொபைல் போன்:
முன்னணி மொபைல் போன் நிறுவனங்களான சாம்சங் மற்றும் நோக்கியா தயாரித்துள்ள வளையும் தன்மையுள்ள அலைபேசிகள் சந்தைக்கு வரவுள்ளன. ஆண்ட்ராய்ட், விண்டோஸ் இயங்குதள ஸ்மார்ட் போன்களும் பெருமளவு சந்தையை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட் போன்களில் இரண்டு கோர் பிராசசர்கள் தவிர்க்க முடியாத அம்சமாக மாறி வருகிறது.தொடுதிரை வசதி மற்றும் ஆப்பிள் ஐபோன் 4 எஸ் (Apple I-Phone 4S )-ல் உள்ள குரலை அடையாளம் கண்டு தகவல்களை உள்ளிடும் சிரி (SIRI) தொழில்நுட்பம் போல ஆண்ட்ராய்ட் மற்றும் விண்டோஸ் இயக்க போன்களிலும் புதிய வசதி இடம்பெறவுள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் கூகுள் மேஜல் (Majel) என்ற தொழில்நுட்பத்தை ஆண்ட்ராய்ட் போனுக்காக ரகசியமாக உருவாக்கி வருவதாக பிசி வேர்ல்ட் ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதே வசதி டேப்ளட், நெட்புக், அல்ட்ரா புக் மற்றும் மேசைக் கணினிகளுக்கும் வரக்கூடும்.
ஆண்ட்ராய்ட் போன் விற்பனையில் முன்னணியில் உள்ள சாம்சங் நிறுவனத்திற்கு இந்த ஆண்டு மோட்டரோலா நிறுவனம் பெரும் சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காரணம் சென்ற ஆண்டு இறுதியில் ஆண்ட்ராய்ட் பயன்பாட்டிற்காக கூகுள் - மோட்டரோலா நிறுவனங்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தம்தான்.
மொபைல் வாலட் (Mobile Wallet) எனப்படும் அலைபேசி வழியாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போல பணம் செலுத்தும் வசதி பரவலாகும் என்று தெரிகிறது. தற்போது இதற்கான கட்டுப்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
முப்பரிமான தொலைக்காட்சி:
3டி தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகள் தற்போது சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பயன்பாடு இனி வரும் நாட்களில் அதிகரிக்கும் என்றும், இதனால் தற்போது புழக்கத்தில் உள்ள எல்இடி டிவிக்களின் விலை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல தொலைக்காட்சிப் பெட்டிகள் வழியாக இணையத்தை அணுகும் தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியடையும். இதன் மூலமாக இணைய வீடியோ ஒளிபரப்பு சேவை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
கணினிகள்:
நெட்புக், டேப்ளட் பிசி, அல்ட்ரா புக் கணினிகள் மேசைக் கணினிகளின் பயன்பாட்டை பின்னுக்குத் தள்ளும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு வெளிவர உள்ள விண்டோஸ் 8 இயங்குதளம் டேப்ளட் மற்றும் நெட்புக் கணினிகளை வேறுபடுத்த முடியாத வகையில் இருக்கும்.
. Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget