கணினித்துறை வளர்ச்சி என்பது இன்று வேகம் (Speed) மற்றும் கொள்ளளவை (Storage) அதிகரிப்பதையே மையமாகக் கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டர் ஹார்ட்வேர்கள் வேகத்தை ஹெர்ட்ஸ் (Hertz) அளவிலும், சேமிப்பகங்களின் அளவுகளைக் குறிப்பிடும் போது பைட் (Byte) என்றும் குறிப்பிடுகிறோம். இந்த அலகுகள் எந்த அடிப்படையில் அளக்கப்படுகின்றன..?தொழில்நுட்ப வல்லுநர்களைத் தவிர்த்து சாதாரண கணினிப் பயனர்களுக்காக எழுதப்பட்டது இக்கட்டுரை. தீக்கதிர் நாளிதழின் கணினிக்கதிர் பகுதியில் வெளிவந்தது.
பைட் (Byte)
ஃபைல்கள் மற்றும் சேமிப்பகங்களை அளக்கும்போது இந்த அளவைப் பயன் படுத்துவோம். கிலோ பைட், மெகா பைட், கிகா பைட் மற்றும் டெரா பைட் ஆகியவை தற்போது அதிகமாக புழக்கத்தில் உள்ள அளவுகளின் பெயராகும்.
கம்ப்யூட்டரின் ஒவ்வொரு செயலும் பிட் என்ற சிறிய அலகால் அளக்கப்படுகின்றது. ஒரு பிட் என்பது கணினியின் அடிப்படை செயல்முறையான பைனரியில் ஒன்று (1) அல்லது பூச்சியம் (0)மாகக் கருதப்படும். நாம் தகவல்களைப் பதியும் போது அவை ஒன்றுகளாலும் பூச்சியத்தாலும் மட்டுமே நிரப்பப்படுகின்றன. பைனரி டிஜிட் (Binary Digit) எனும் வார்த்தைகளிலிருந்ததே பிட் (Bit) எனும் வார்த்தை உருவானது. ஒரு பிட் அளவை மட்டும் கொண்டு ஒரு எழுத்தையோ அல்லது குறியீட் டையோ உருவாக்கிவிட முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட பிட்டுகள் ஒரு குழு வாக ஒன்று சேரும்போதே அது அர்த்த முள்ள தகவலாக வெளிப்படுகிறது. இவ் வாறு 4 பிட்களின் சேர்க்கையை நிப்பல் (Nibble) என்றும், 8 பிட்டுகள் சேர்ந்தது ஒரு பைட் (Byte) என்றும். 16 பிட்டுகளின் சேர்க்கையை ஒரு வர்ட் (Word) என்றும் கணக்கிடுவர். ஒரு பைட் மூலம் 256 வெவ்வேறான எழுத்துக்களையோ அல்லது குறியீடுகளையோ வெளிப்படுத்தலாம்.
1024 பைட்டுகள் சேர்ந்தது ஒரு கிலோ பைட்டாகும். 1024 கிலோ பைட்டுகள் ஒரு மெகா பைட் (Mega Byte), 1024 மெகா பைட் ஒரு கிகாபைட் (Giga Byte), 1024 கிகா பைட்டுகள் ஒரு டெரா பைட் (Tera Byte), 1024 டெரா பைட் ஒரு பீட்டா பைட் (Peta Byte), 1024 பீட்டா பைட் ஒரு எக்ஸா பைட் (Exa Byte), 1024 எக்ஸா பைட்கள் 1 ஜெட்டா பைட் (Zeta Byte), 1024 ஜெட்டா பைட்கள் 1 யோட்டா பைட் (Yota Byte) என்றும் கணக்கிடப்படுகிறது.
ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ், சிடிக்களில் இந்த அளவுகள் மாறுபடும். இவை டெசிமல் (Desimal) என்ற முறையில் 1000 பைட்டுகள் ஒரு கிலோபைட்டாகவும், 1000 கிலோ பைட்டுகள் ஒரு மெகா பைட்டாகவும், 1000 மெகா பைட்டுகள் 1 கிகா பைட்டாகவும் கணக்கிடப்படுகிறது. ஆகவே 100 ஜிபி அளவு ஹார்ட் டிஸ்க்கில் தகவல் பதியும் இடம் 93 ஜிபி என்ற அளவிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெர்ட்ஸ் (Hertz)
ஒரு நொடியில் நடைபெறும் மின்னி யல் சுழற்சிகளின் எண்ணிக்கையே ஹெர்ட்ஸ் எனப்படும். ஒரு ஹெர்ட்ஸ் அளவு என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி நிகழ்வதைக் குறிக்கும். Hertz என்பதை Hz என்று சுருக்கிக் குறிப்பிடுவர். மின்காந்தவியல் குறித்து ஆராய்ச்சி செய்த ஐன்ரிச் ஹெர்ட்ஸ் என்ற ஜெர்மனியரின் பெயரே இந்த அளவிற்கு வைக்கப் பட்டுள்ளது.
10 லட்சம் ஹெர்ட்ஸ் 1 மெகா ஹெர்ட்ஸாகவும்(Mega Hertz), 1000 மெகா ஹெர்ட்ஸ் ஒரு கிகா ஹெர்ட்ஸாகவும் (Giga Hertz), 1000 கிகா ஹெர்ட்ஸ் ஒரு டெரா ஹெர்ட்ஸாகவும்(Tera Hz) கணினி வாய்ப்பாடு வரையறுக்கிறது.
ஒரு பென்டியம் 4 (P IV) கணினியின் இயங்கு திறன் 2.93 கிகா ஹெர்ட்ஸ் (2.93 Ghz) என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே நம்ம ஊரில் தற்போதைய அடிப்படை நிலைக் கணினியாகவும் (Basic Computer) உள்ளது.

1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
அடிப்படையான செய்தியானாலும் அதை விளக்கிய விதம் அருமை. இந்த அடிப்படை கூட முறையாக படிக்காத பலருக்கு இது நிச்சயம் பயன்படும். இதை தொடர்ந்து தொடரும்படி கேட்டுக்கொள்கிறேன். பயனுள்ள செய்தி. வாழ்த்துக்கள் நண்பரே...
Post a Comment