எப்போதும் எதையாவது தேடிக் கொண்டிருக்கும் மனித மூளைக்கு அறிவு சார் தேடலில் முன்பெல்லாம் புத்தகங்களே வடிகாலாயிருந்தன. புத்தகங்களைத் தேடுவதும், படிப்பதும், படித்ததை பகிர்வதும் ஓர் அலாதியான அனுபவம். ஆனால் இன்றைய நவீன இணைய உல கில் தகவல் தேடல் என்பது மிகச் சுலபமானதாக மாறியிருக்கிறது. கூகுள், யாகூ, பிங் எனத் தேடித்தர இணையதளங்கள் நிறைய உண்டு.
நாம் அறிந்த சச்சின் டெண்டுல்கரைப் பற்றியோ, நாம் அறியாத அண்டார்டிகாவின் பனி மலை, அமேசான் காடுகள் என எதைக் குறித்த தேடலானலும் பெரும்பாலான தேடல் முடிவுகளில் முன்னிலையில் வந்து நின்று தகவல் தரும் தளமாக விக்கிபீடியாவைப் பார்க்க முடியும்.
ஜிம்மி வேல்ஸ் மற்றும் லாரி சாங்கர் ஆகியோரால் 2001, ஜனவரி 15இல் துவக்கப்பட்ட இத்தளம் இன்று உலகம் முழுவதிலுமிருந்து 36 கோடிக் கும் அதிகமான மக்க ளால் படிக்கப்படும் தளமாக உள்ளது.
விக்கிபீடியா கணினி உலகின் கலைக்களஞ்சியம் என்ற அங்கீகாரத்துடன் கடந்த 10 ஆண்டுகளில் 270 மொழிகளில், 1 கோடியே 70 லட்சம் கட்டுரைகளுடன் இன்று மாபெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள என்சைக்ளோபீடியா என்றழைக்கப்படும் கலைக்களஞ்சியத் தொகுப்புகளையெல்லாம் விஞ்சி, அதிகமான தகவல் கட்டுரைகளைத் தாங்கி நிற்கிறது. உலகில் பேசப்படும் பெரும்பாலான மொழிகளில் கட்டுரைகள் கிடைப்பதே இதன் பலம். அகரவரிசை, வார்த்தைத் தேடல், பொருள் வாரியான தேடல் என்று எல்லா வகையிலும் கட்டுரைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
விக்கிபீடியா திட்டம் ஓப்பன் சோர் எனப்படும் சுதந்திர திறமூல வகை சார்ந்த தாகும். அதனால் எவரும் எளிதில் அணுகி தங்களுக்குத் தெரிந்த தகவல்களைக் கொண்டு கட்டுரைகள் எழுதலாம் அல்லது எழுதப்பட்ட கட்டுரைகளில் பிழைகள் இருந்தால் நீக்கலாம் - மேம்படுத்தலாம். இதற்காக விக்கி பீடியாவில் பயனராக பதிவு செய்து கொண்டால் மட்டும் போதும். எவ்விதக் கட்டணமும் கிடையாது. தகவல் தேடுபவர்களும் முழு சுதந்திரத்துடன் தகவல்களைப் பெறலாம்.
ஆனால், இத்தகைய திறந்த மூலத் தன்மை தவறான தகவல்களைப் பதிவதற்கும் காரணமாக உள்ளதால் இதன் நம்பகத்தன்மை குறித்த சந்தேகம் எப்போதும் உண்டு. கடந்த கால அனுபவங்களைக் கொண்டு பார்க்கையில் இத்தளத்தில் அத்தகைய தவறான தகவல்கள் குறுகிய காலத்திலேயே நீக்கப்பட்டு சரிசெய்யப்பட்டிருக்கின்றன என்ற விக்கிபீடியாவின் கருத்தும் கவனிக்கத்தக்கது. இதற்கென விக்கிப்பீடியாவின் அங்கீகாரத்துடன் உலகமெங்குமிருந்து விக்கிகள் (உறுப்பினர்கள் இப்பெயரில்தான் அழைக்கப்படுகிறார்கள்) பலர் தன்னார்வத்துடன் பங்காற்றி வருகின்றனர்.
விக்கீபீடியா தளத்தை விக்கிமீடியா என்ற அமைப்பு நிர்வகித்து வருகிறது. இதன் துணைத் திட்டங்கள் விக்கி செய்திகள், விக்கி புக்ஸ், விக்சனரி, விக்கி மேற்கோள்கள், விக்கி பல்கலைக்கழகம், விக்கி இனங்கள், விக்கி பொது, விக்கி மூலம் ஆகியவையாகும்.
விக்கிபீடியா தளத்தின் தமிழ் பதிப்பில் சுமார் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளன. சுமார் 1300 பயனர்கள் பதிவு செய்திருந்தாலும், சில நூறு பேரே தொடர்ந்து தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர். தமிழில் அதிகக் கட்டுரைகளை உருவாக்க விக்கிபீடியா வகுப்புகள் தமிழகத்தில் பல இடங்களிலும் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:
Post a Comment