கணினித் தொழில்நுட்பம் 2011


2011ம் ஆண்டில் கணினித் தொழில்நுட்பத் துறை முந்தைய 2010 ஆம் ஆண்டைப் போலவே எண்ணற்ற மாற்றங்களை சந்தித்தது. தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்ட பெரும்பாலான மாற்றங்கள் அதன் போக்கில் ஏற்படும் வளர்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. அப்படி உருவான மாற்றங்களில் நேரடியாக மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்திய முக்கிய நிகழ்வு
கள் மட்டும் சிறு தொகுப்பாகத் தருகிறோம்.

சமூக வலைத்தளங்கள்:
ஒவ்வொரு ஆண்டிலும் கூகுளின் ஏதாவது ஒரு புதிய வசதி முன்னணியில் இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் கூகுளின் படைப்புகளே முன்னிலையில் உள்ளன.
ஃபேஸ்புக்கின் வளர்ச்சி விளம்பர வருவாயைப் பாதிக்கத் தொடங்கியதால் தன்னுடைய இடத்தை தக்க வைக்கவும், வெளியேறும் பயனரை தொடர்ந்து கூகுளில் நீடிக்கச் செய்யவும் கூகுள் நிறுவனம் அதிரடியாய் தொடங்கியது தான் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம்.கூகுள் பிளஸ் தொடங்கிய 6 மாதத்திற்குள்ளாக சுமார் 25 கோடிப் பேரை இணைத்து சாதனை படைத்துள்ளது.
ஃபேஸ்புக், டிவிட்டர் தளங்களுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப்பட்ட பின் தோல்வியைத் தழுவிய கூகுள் பஸ் சேவை சென்ற வாரத்துடன் நிறுத்தப்பட்டுவிட்டது.


பிரௌசர் யுத்தம்:

கூகுள் குரோம் பிரௌசர் மற்றொரு முன்னணி பிரௌசரான ஃபயர்பாக்ஸ் பிரௌசரைப் பின்னுக்குத் தள்ளியது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து வெளியிடுவதன் மூலம் முன்னணி பிரௌசராகக் காட்டிக் கொள்ளும் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் தற்போது கடும் சரிவை சந்தித்து வருகிறது.
குரோம் பிரௌசரின் போட்டி காரணமாக பல புதிய வசதிகளுடன் 7 பதிப்புகளை இந்த ஆண்டில் ஃபயர்பாக்ஸ் வெளியிட்டது. தற்போது ஃபயர்பாக்ஸ் 9.1 பதிப்பு பயன்பாட்டில் உள்ளது.
ஃபயர்பாக்சில் கூகுள் தேடல் டூல்பார் இடம்பெற கடந்த 6 ஆண்டு
களாக நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்தை இந்த ஆண்டுடன் கூகுள் முடித்துக் கொள்ளும் என்று எதிர்பார்த்த வேளையில், அந்த ஒப்பந்தத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு கூகுள் நீடித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் 200 கோடி டாலர்களை ஃபயர்பாக்சுக்கு கூகுள் அளிக்கவேண்டும்.
பிரௌசர் சந்தையில் குரோம் மற்றும் ஃபயர்பாக்சின் பங்களிப்பு தற்போது 25 சதவீதமாக உள்ளது. 
 -----------------------------------------------------------------------------------------------------------------------
ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவு

மேசைக் கணினி, ஐபேட், ஐபாட், ஐபோன் என்று ஒவ்வொரு தயாரிப்பிலும் முத்திரை பதித்த ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவர் ஸ்டீவ் ஜாப்ஸ். அவர்தான் அந்நிறுவனத்தின் மூளை என்று கூட சொல்லலாம். புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டு சொல்ல முடியாவிட்டாலும், ஆப்பிளின் பல தயாரிப்புகளை மக்களுக்கு எளிமையான விதத்தில் கொண்டு சேர்த்தது ஸ்டீவின் திறமை என்று கூறலாம்.
இவர் பிப்ரவரி 24, 1955 அன்று கலிபோர்னியாவில் பிறந்தார். ஏப்ரல் 1, 1976 இல் தன் பள்ளி நண்பர் ஸ்டீவ் வாஷ்னியாக் மற்றும் மைக் மார்குலா ஆகியோருடன் இணைந்து ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினார். ஆப்பிள் மேகிண்டோஸ் மேசைக் கணினிகளை வெளியிட்டது. எளிமையும், பல வசதிகளும் நிறைந்த ஐபேட், ஐபாட், ஐபோன் கருவிகளும் உருவாக்கப்பட்டன. ஆப்பிள் தயாரிப்புகளின் விலை அதிகமானதாக இருந்தாலும் அதன் செயல்பாடும், வசதிகளும் முழுத் திருப்தியைத் தந்தது. ஆப்பிள் கடைசியாக வெளியிட்ட ஐபோன் 4 எஸ் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அது வெளியிடப்பட்ட அடுத்த நாளான அக்டோபர் 5, 2011 அன்று, பல ஆண்டுகளாகப் புற்றுநோய் பாதிப்பிற்குள்ளாகியிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மறைந்தார்.
 -----------------------------------------------------------------------------------------------------------------------
ஆகாஸ் டேப்ளட் பிசி

 அக்டோபர் 5, 2011 அன்று இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தகவல் தொழில் நுட்பத் துறையால் அறிமுகம் செய்யப்பட்டது ஆகாஸ் டேப்ளட் பிசி. உலகிலேயே விலை குறைவான டேப்ளட் பிசி இதுதான். ஆண்ட்ராய்ட் இயங்குதளத்துடன் ஜிபிஆர்எஸ் இணைய வசதியுள்ளது. மாணவர்களுக்கு அரசு குறைவான விலையில் வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களும் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படுகிறது. இதன் சந்தை விலை 2999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலிடத்தில் ஆண்ட்ராய்ட்
கூகுள் ஆண்ட்ராய்ட் இயங்குதள போன்கள் விற்பனையில் 50 சதவீதத்திற்கும் மேலான இடத்தைப் பிடித்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளன. இதன் மூலமாக சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட் போன் விற்பனையில் நோக்கியாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இந்த சரிவை சமாளிக்க நோக்கியா தன் பழைய சிம்பியன் இயங்குதளத்தை கைகழுவிவிட்டு விண்டோஸ் இயக்க போன்களை களமிறக்கியுள்ளது.
அதே நேரத்தில் கூகுள் நிறுவனம் மோட்டரோலா நிறுவனத்துடன் இணைந்து ஆண்ட்ராய்ட்  போன் மேம்பாட்டிற்கான  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

பிளாக்பெர்ரிக்கு சரிவு
உலக அளவில் சேவை மற்றும் தகவல் பாதுகாப்பில் தனக்கு நிகர் யாருமில்லை என்று சொன்ன பிளாக்பெர்ரிக்கு அக்டோபர் 10இல் பெரும் சிக்கல் ஏற்பட்டது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் இணைய சேவை 3 நாட்கள் பாதித்தது. இது பிளாக் பெர்ரியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் சர்வர் அமைக்கவேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை மறுத்து முரண்டு பிடிக்கும் பிளாக்பெர்ரிக்கு மேலும் ஒரு பின்னடைவாக, விற்பனையில் மட்டுமல்லாமல் பங்குச் சந்தையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. Related Posts with Thumbnails

1 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

RMY பாட்சா said...

இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இந்தஆண்டு இனிமையாகஅமைய வாழ்த்துகள்.

wibiya widget