லிப்ரே என்றால் சுதந்திரம்

நம் வீட்டிலும், அலுவலகங்களிலும் உபயோகத்தில் உள்ள பெரும்பான்மையான கணினிகளில் மைக்ரோசாப்ட் ஆபீஸ் அல்லது ஓப்பன் ஆபிஸ் மென்பொருள் தொகுப்பு கட்டாயமாக இடம் பெற்றிருக்கும்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் (MS Office) தொகுப்பில் வேர்ட், எக்ஸல், பவர்பாயிண்ட் ஆகியவை முக்கியமான மென்பொருள்கள். அதேபோல ஓப்பன் ஆபிஸில் (Open Office) இவற்றின் பெயர் ரைட்டர், ஸ்பிரட் சீட், பிரசன்டேசன் என வழங்கப்படுகிறது. இம்மென்பொருள்களைப் பற்றி கணினி கற்ற அனைவரும் அறிந்தே வைத்திருப்பர்.
மைக்ரோசாப்ட் ஆபிஸ் மென்பொருள் தொகுப்பை விலை கொடுத்துதான் வாங்கவேண்டும். இது சுமார் ரூ. 6000 என்ற விலையில் கிடைக்கிறது. இத்தொகுப்பை வாங்கினால் ஒரு கணினிக்கு மட்டுமே பயன்படுத்தமுடியும். அதே ஓப்பன் ஆபிஸ் தொகுப்பாக இருந்தால் எத்தனை கணினிகளுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். கட்டணம் இல்லை. ஏனென்றால் அது கட்டற்ற இலவச (Open Source Software) மென்பொருளாகும்.
கட்டற்ற அல்லது சுதந்திர மென்பொருள் என்பது ஒருவருக்கு மட்டுமே சொந்தமானதல்ல, அதைப் பயன்படுத்த எவ்விதக் கட்டணமோ, அனுமதியோ தேவையில்லை. அதை உருவாக்கப் பயன்பட்ட நிரல்களை (Source Code) எவரும் தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துப் பயன்படுத்தலாம். ஆனால் மைக்ரோசாப்ட் மென்பொருள் தொகுப்பை அவ்வாறு பயன்படுத்த முடியாது.
அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் உலகின் பல நாடுகளும் குறிப்பாக இந்தியாவிலும் ஓப்பன் ஆபிஸ்  மென்பொருளே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இத்தகு சிறப்பு வாய்ந்த ஓப்பன் ஆபிஸ் மென்பொருளை உருவாக்கிய சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனம் நிதிநிலை காரணமாக ஆரக்கிள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. இது  உலகெங்கும் உள்ள தன்னார்வ மென்பொருள் வல்லுநர்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியது. ஏனெனில்  பிரபலமான சன் சொலாரிஸ் இயங்குதளம், ஜாவா கணினிமொழி, ஓப்பன் ஆபிஸ் என திறந்த நிரல் மென்பொருட்களை ஆதரித்து இலவசமாக வழங்கி வந்த சன் மைக்ரோ சிஸ்டம் போல ஆரக்கிள் நிறுவனம் நடந்து கொள்ளாது, அது ஒரு தேர்ந்த வியாபாரி என்பதைத் திறந்த நிரல் பங்களிப்பாளர்கள் உணர்ந்தே உள்ளனர்.
எதிர்பார்த்தது போலவே ஆரக்கிளும் ஓப்பன் ஆபிஸ் மென்பொருளுக்கு இனி யாரும் நிரல் எழுதி மேம்படுத்தக் கூடாது என்றது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் தற்போது  எழுதலாம் என்றிருக்கிறது. இது குறித்து முன்பே எச்சரிக்கையடைந்திருந்த ஓப்பன் சோர்ஸ் குழுக்கள் டாக்குமெண்ட் ஃபவுண்டேஷன் என்ற இணையதளத்தை தொடங்கி அதில் லிப்ரே ஆபிஸ் (Libre Office) என்ற மென்பொருளை வெளியிட்டனர்.
இது ஓப்பன் ஆபிஸ் மென்பொருளின் நிரலைப் பயன்படுத்தியே உருவானது. தற்போது இம்மென்பொருளுக்கே தன்னார்வ மென்பொருள் நிரலாளர்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் இம்மென்பொருளை பதிவிறக்கம் செய்யும் முகவரி:www.libreoffice.org/
. Related Posts with Thumbnails

0 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

wibiya widget