கூகுள் ஆண்ட்ராய்ட் வரமா? சாபமா?

ஆப்பிள் நிறுவன ஐபோன்களுக்கும், பிளாக் பெர்ரி போன்களுக்கும் போட்டியாக கூகுள் நிறுவனம் களமிறக்கிய ஆண்ட்ராய்ட் இயங்குதளம்  (Android OS) பதிந்த போன்கள் இன்று சந்தையில் சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கின்றன.  ஐபோனிற்கு இணையான அம்சங்களோடும் விலையில் அதைவிட நான்கில் ஒரு பங்கு அளவிலும் இருப்பதே இதன் விற்பனை அதிகரிப்பிற்கு முக்கியக் காரணமாகும்.
ஆண்ட்ராய்ட் இயங்குதளம் என்பது கணினிக்கு எப்படி விண்டோஸ், லினக்ஸ், மேக் இயங்குதளங்கள் உள்ளனவோ அதுபோல கைபேசி (Cell Phone) , இணையக் கணினி (Net PC), டேப்ளட் பிசி (Tablet PC) க்களுக்காக உருவாக்கப்பட்ட ஓர் இயங்குதளமாகும். இதனை முதன் முதலில் ஆண்ட்ராய்ட் இன்க் என்ற நிறுவனம் உருவாக்கியது. இந்நிறுவனத்தை 2005இல் கூகுள் வாங்கியது.
அதன் பின்னர் 2007இல் மோட்டேரோலா(Motorola) சாம்சங் (Samsung), எல்ஜி (LG), டிமொபைல் (T-Mobile), ஹெச்டிசி (HTC), பிராட்காம் கார்ப்பரேசன் ( Broadcom Corporation), இண்டெல் (Intel), என்வீடியா (Nvidia), குவால்காம் (Qualcomm) மற்றும் பல முன்னணி நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்து ஓப்பன் ஹேண்ட்செட் அல்லயன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியது‌. அதன் மூலமாக ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை மேலும் மேம்படுத்தி வெளியிட்டது.
இதில் ஜாவா நிரல்களைக் கொண்டு எவர்வேண்டுமானாலும் கூடுதல் பயன்பாட்டிற்கான சிறு சிறு மென்பொருள்களை(Add-on applications) உருவாக்கி இணைத்துக் கொள்ளமுடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
இந்த வகையில் இன்று ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்ட்ராய்ட் பதிந்த கைபேசிகளில் இணையப் பக்கங்களைப் பார்ப்பது, கூகுள் மேப், ஆர்குட் சமூக வலைத்தள சேவை, பிற கணினிகளுடன் இணைப்பது எனப் பல வசதிகள்  உள்ளன. இது போட்டியாளர்களின் தயாரிப்புகளுக்கு சற்றும் சளைத்ததல்ல என்பது உண்மையே. இத்தனை சிறப்புகள் இருப்பினும் ஆண்ட்ராய்டுக்கு எதிர்ப்புக் குரல்களும் அவ்வப்போது எழவே செய்கின்றன.
கூகுள் ஆண்ட்ராய்டில் தனது ஜாவா நிரல் காப்புரிமையை மீறிவிட்டதாக ஆரக்கிள் நிறுவனம் குற்றம் சாட்டியது. மேலும் ஆண்ட்ராய்ட் கைபேசிகளைக் கொண்டு பயனரைக் கூகுள் கண்காணிப்பதாகவும், பயனரின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்கத்தக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இதே குற்றச்சாட்டு ஆப்பிளின் ஐபோன் மீதும் உண்டு.
"பயனருக்கு முழுச் சுதந்திரத்தை அளிக்காத எதுவும் ஓப்பன் சோர்ஸ் அல்ல. ஆண்ட்ராய்ட் ஓப்பன் சோர்ஸ் என்று கூறப்படுவதை நான் ஏற்கமுடியாது. அதுவும் ஒரு வியாபார மென்பொருள்தான்" என்று ஓப்பன் சோர்சின் தந்தை என மதிக்கப்படும் ரிச்சர்ட்  ஸ்டால்மேன் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கதே.
. Related Posts with Thumbnails

4 இப்பதிவு பற்றி கருத்து தெரிவித்துள்ளவர்கள்:

N. Jaganathan said...

நண்பரே, ஆண்ட்ராய்ட் போன் பற்றிய பல சந்தேகங்களுக்கு உங்கள் பக்கம் விடைஅளித்தது. நன்றி. தொடர்க..

N. Jaganathan said...

நண்பரே ஆண்ட்ராய்ட் போன் பற்றிய பல சந்தேகங்களுக்கு உங்கள் பக்கம் விடையளித்தது.நன்றி. தொடர்க உங்கள் பணி.

அணில் said...

தற்போதைக்கு வரம்தா னென நினைக்கிறேன். ஒட்டு மொத்த கணினி சமூகமும் ஓப்பன் சோர்சுக்கு மாறுமென நினைப்பது நல்விருப்பம்தான், ஆனால் நிறைவேறுமோ?!!!

The Survivor said...

என்னை பொருத்தவரை ஆன்ட்ராய்டு ஒரு சாபமே. நமது பல தகவல்களை கூகுள் நிறுவனம் தனது மென்பொருள் நிரலால் திரட்டி அதனுடைய விளம்பர பிரிவுக்கு உபயோகப் படுத்துகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் பல மென்பொருட்கள் நமது தனி மனித சுதந்திரத்தினையும் பாதிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. உதாரணத்திற்கு கூகுள் வரைபடத்தில் நாம் எந்த இடத்தில் உள்ளோம் என நமது நண்பர்களும் உறவினர்களும் தெறிந்துகொள்ளும் வசதி. அனைவரும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இலவசமாக உலகில் எந்த பொருளும் கிடைப்பதில்லை. அதே போல் கூகுள் நிறுவனம் ஒரு தொண்டு நிறுவனமும் அல்ல...

wibiya widget